
ஓரு வாரமாக மின்வசதி இன்றி இருள் வாழ்க்கை வாழ்ந்தபின் ஒருவழியாக மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் அதன் நீட்சியாக மருத்துவ மனைக்கும் வீட்டிற்குமாக அலைவது உட்பட பல்வேறு சிரமத்தை இந்த அடுக்ககத்தில் வாழ்கின்ற மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
வளர்ந்துவரும் ஒரு நாட்டின் மையப் பகுதியில், நாட்டின் பாரம்பரியத் தலைநகரமான கோலாலம்பூரை ஒட்டி அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் ஏறக்குறைய 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்படி இருள் வாழ்க்கையை வாழவேண்டிய சூழ்நிலைக்கு யார் காரணம்?
சமைக்க, துவைக்க, குளிக்கவும் வகையில்லா அளவுக்கு த்ண்ணீர் விநியோகமும் தடைபட்டது.

கடந்த பிப்ரவரித் திங்கள் 26-ஆம் நாள், கடுமையான மழை மின்னல்-இடியுடன் வெளுத்து வாங்கியது. அந்த அந்திநேர மழையுடன் காற்றும் கலந்துகொண்டு தன் பங்கை வஞ்சகமில்லாமல் ஆற்றியது.
வேலைக்குச் சென்றவர்கள். பல்வேறு அலுவல் காரணமாக வெளியில் சென்றவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று திரும்பிய மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைவரும் நனைந்த ஆடையோடும் நடுங்கிய உடலோடும் வீட்டிற்கு திரும்பினால், வீடெல்லாம் இருளில் முழ்கிக் கிடந்தன.

ஒரு வீட்டில் சிக்கல் என்றால், அடுத்த வீட்டின் உதவியை நாடலாம், அந்த வீடும் அப்படி இருந்தால், யார், யாரிடம் உதவி பெறுவது என்னும் வழி தெரியாமல் அல்லல்பட்டு நின்றனர்.
ஒருவர்-இருவரல்ல; இருநூறு குடும்பங்களுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் தத்தம் வீட்டைவந்து சேர்ந்தது ஒருபுறம் இருக்க, நூற்றுக் கணக்கானோர் 15, 16, 17-ஆவது மாடி என படியேறி வந்ததால், பாதி உயிர் போன நிலைக்கு ஆளாகினர்.
இதற்கிடையில் தேசிய மின் வாரியமான ‘டிஎன்பி’க்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளனர்.
டிஎன்பி-யைப் பொறுத்தவரை, டாமன்சாரா, காயு ஆரா, ரூபா பங்சா குடியுருப்புப் பகுதிக்கான மின் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை. சம்பந்தப்பட்ட அடுக்ககத்தில், மின்பராமறிப்பு தொடர்பான மின்மாற்றிக் கருவி, மின்கம்பி, விசை(Mini transformer, Electrical wire, Switch) உள்ளிட்ட மின்னலின் தாக்குதலுக்கு ஆளாகி பழுதாகி விட்டதால்தான் மின் விந்யோகம் தடைப்பட்டுள்ளது.

அதனால், இதை சரிசெய்ய வேண்டியது நாங்களல்ல என்று கைவிரித்து விட்டதுடன் அந்தக் குடியிருப்பிற்கான நிருவாகக் குழுவினர்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று ‘JMP Rumah Pangsa Kayu Ara, Damansara’ குழுவினரை கைகாட்டிவிட்டு, டிஎன்பி நிருவாகம் ஒதுங்கிக் கொண்டது.
அடுத்த முப்பது மணி நேரத்தில் தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பினாலும், மின் வசதி இல்லாததால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் பல நூறு பேர் அல்லபட்டு, தூங்கவும் வழியின்றி பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
‘JMP Rumah Pangsa Kayu Ara, Damansara’ நிருவாகத்தினரும் ஏறக்குறைய கைகழுவிவிடும் நிலைக்குச் சென்று, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கி ஏராளமான மின் சாதனங்கள் எரிந்துவிட்டதால், இதை சீர்படுத்த பல்லாயிரக் கணக்கில் நிதி தேவைப் படுகிறது; குடியிருப்புவாசிகள் தங்களுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திரக் கட்டணத்தை முறையாக செலுத்துவதில்லை; அதனால், தங்களிடம் அந்த அளவிற்கு நிதிவசதி இல்லையென்று தெரிவித்து ஒதுங்கிக் கொண்டனர்.
இதனால், தடைபட்ட மின் விநியோகம் எப்போது வழக்க நிலைக்குத் திரும்பும் என்பது தெரியாக மக்கள்,அருகில் உள்ள உறிவினர், நட்பினர் வீடுகளுக்குச் சென்று அடைக்கலம் நாடி, 2-3 நாட்கள் திரும்பியுள்ளனர்.
அப்பொழுதும் மின்சார வசதி திரும்பவில்லை.
இதன் விளைவாக, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவுப் பண்டங்கள் யாவும் கெட்டு, பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் படியேறி இறங்கியதில், குறிப்பாக இருதயநோய், இரத்த அழுத்த சிக்கல் போன்ற மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களின் நிலை பெரும் கேள்விக்குள்ளானது.
இந்தச் சிக்கலைப் பற்றி அறிந்த வட்டார மஇகா-வினர், குறிப்பாக, அதன் தேசிய இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் அரவிந்த கிருஷ்ணன் தலைமையில் அங்கு சென்று, நிலைமையை ஊகித்து, தற்காலிக ஏற்பாடாக டி.சி. ஜெனரேட்டர் மூலம் தற்காலிக மின் விநியோகத்தை(Direct Current) வழங்க முனைப்பு காட்டினர்.
ஆனால், ‘JMP Rumah Pangsa Kayu Ara, Damansara’ நிருவாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து தடுத்தும் விட்டனர். இதனால், முறுகல் நிலையுடன் தள்ளுமுல்லும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இஸ்லாமியக் குடும்பத்தினர் தங்களின் நோன்புக் கடனை நிறைவேற்றுவதில் பெரும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக, அந்தப் பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா நிதி உதவி அளித்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின், மின்சாரம் வந்துள்ளது.
ஆனாலும், ஒரு வாரமாக இரவு வேளையில் உறக்கம் இல்லாதது, உடல் சூடு போன்ற காரணங்களினால் தலைவலி, அதிக களைப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நோயாளிகள் மருத்து சாப்பிட முடியாத நிலை போன்றவற்றால் இப்பொழுது இன்னும் அதிக துன்பத்திற்கு ஆளாகி, மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அலைகின்றனர்.


