
நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று பூச்சோங்கில்
எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் வட்டார பொதுமக்களும் அரசுசாரா அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு ஒற்றுமை முழக்கம் எழுப்பினர்.
பூச்சோங், தாமான் கின்றாரா குடியிருப்புப் பகுதியில் நேற்று மார்ச் 08, மாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின், மலேசிய கூட்டு சமுதாயத்தில் நிலவும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கெடுக்கும் நபர்களுக்கு எதிராக செர்டாங் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முன்னதாக, மலேசிய இந்திய சமுதாயத்தின் இன்றைய அவசரத் தேவை சாதி-மத எல்லைகளைக் கடந்து ‘நாம் அனைவரும் ஒரே சமூகத்தினர்’ என்னும் ஒற்றுமையுணர்வும் ஒருவரையொருவர் அரவணைக்கும் ஒருமைப்பாடுமே என்று வட்டாரத் தலைவர்கள் உரக்கக் குரலெழுப்பிய ஒருமைப்பாட்டுக் கூட்டம் சுற்றுவட்டார மக்களைபெரிதும் கவர்ந்து சிந்திக்க வைத்தது.

தேசிய நட்பு ஒருமைப்பாட்டு நல அமைப்பின்(PKIPN) தலைவர் ஜோசஃப் பிரகாஷ், மலேசிய சமூக நீதி குரல் நல அமைப்பின்(PKSKMM) தலைவர் உலகநாதன் முத்தையா, ‘சமுத்திரம்’ இயக்கத் தலைவர் ஜீவா ஜெயசீலன், சமூக ஆர்வளர் மாக்மண்டின் குமார், ராஜன் கிருஷ்ணன், சந்தியா ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சமுக ஒற்றுமையையும் அதன் மூலம் நாம் எட்டும் வலிமை குறித்தும் பேசினர்.

பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரச்சினை எழுந்தால், அதை மத்திய-மாநில அரசுகள் பரிவுடன் அணுகி சுமூகமாக தீர்த்துவைக்க வேண்டிய கடப்பாடு இருக்கும்பொழுது, ஆன்மிகத்தில் தடம் மாறியவர்களும் வெறுப்புப் பேச்சாளர்களும் இந்திய சமுதாயத்தின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து இழித்தும் பழித்தும் பேச வேண்டிய அவசியமில்லை என்று அனைவரும் பேசினர்.

அத்துடன், இந்திய சமுதாயத்தினர் பல்வேறு காரணங்களால் பிரிந்தும் பிளவுபட்டும் இருப்ப்துதான் மற்றவர்களுக்கு இளப்பமான பார்வையை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து வாழவேண்டும் என்று பேசினர்.
இந்து, கிறித்துவம், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட சமய எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ‘இந்திய சமுதாயத்தினர்’ என்னும் ஒரு குடையின்கீழ் வாழ முற்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கூட்டம் முடிந்தபின் முக்கிய பொறுப்பாளர்கள், செர்டாங் மாவட்ட காவல நிலையத்திற்குச்சென்று சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்போருக்கு எதிராக புகார் செய்தனர்.


