
அரசியல் எல்லையைக் கடந்து தொழில் அடிப்படையில் மருத்துவத் தொண்டின்மூலம் சமூகத்தின் பேராதரவில் திளைத்துவரும் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சமத்துவ நோன்பு தூறப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல; மலாய், சீன சமூகத்தினரிடையேயும் தன்னுடைய அரசியல் அணுகுமுறைகளும் மருத்துவத் தொண்டினாலும் சமூக சேவையாலும் இந்த நிலையை எட்டி உள்ளார், மக்கள் நீதி கட்சி-பிகேஆர் ஒரு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான சத்திய பிரகாஷ்.

நோன்பு மாதத்தின் 23 வது நாளில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இவர், விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியையும் சமூக நலத்திட்டத்தையும் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தது மிகவும் சிறப்பானது.

ரவாங், கோல குபு பாரு, குண்டாங் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவு பொருளை அன்பளிப்பாக வழங்கியதுடன் திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்திய பிரகாஷ்.

அதைப்போல சீன சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூலும் கிறிஸ்துவ சமயத்தை சார்ந்தவர்களுக்கு பைபிளும் இந்து சமயத்தை சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஒரு நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பக்தி இலக்கிய நூல்களை வழங்கி ஆன்மிகம்-சமூக நலப் பார்வையுடன் இலக்கியத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அரசியல் தலைவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.


