Thursday, March 19, 2026

ஸம்ரி வினோத் வர்த்தகராமே! -நீதி மன்றத்தில் ஹரிஸ் யூசுப்

மத வெறுப்பு பேச்சாளர் ஸம்ரி வினோத் ஒரு வர்த்தகப் புள்ளி என்று இன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரிஸ் யூசோஃப் தெரிவித்தார்.

பொது அமைதிக்கும் சமய -சமூக நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவித்ததாக சம்ரி வினோத், அருண் துரைசாமி இருவர்மீதும் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டை இவ்விருவரும் இன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் மறுத்தனர்.

சம்ரி வினோத், அருண் துரைசாமி இருவரும் Facebook மற்றும் Instagram பதிவுகள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மத வெறுப்பு பேச்சாளர்
சம்ரி வினோத் மற்றும் சமய-சமூக பக்கசார்பு செயற்பாட்டாளர் அருண் துரைசாமி இருவரும் இன்று காலையில் தனித்தனி நீதிமன்றங்களில் தனித்தனியாக நிறுத்தப்பட்டனர்.

மலேசியக் கூட்டு சமுதாயத்தில் நிலவும் பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக இவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சம்ரி (41) கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பீனல் கோட் குற்றச் சட்டம்
பிரிவு 505(பி)-யின்படி சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். அவர் பிப்ரவரி 3 அன்று ‘சட்டவிரோத கோவில்கள்’ தொடர்பாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவை முகநூல் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டதாக சுமத்தப்பட்ட . குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனையாக அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறையுடன் தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சம்ரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய நிலையில் நீதிமன்றம் அவருக்கு வெ.4,500 தொகையில் ஒரு நபர் உத்தரவாதத்துடன் பிணை வழங்கியது.

அத்துடன், வழக்கு முடியும்வரை சம்ரி தன் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்ட நிலையில் வழக்கு அடுத்த ஏப்ரல் 29-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசத் தரப்பு துணை வழக்கறிஞர் நோர்டின் இஸ்மாயில், சம்ரி வினோத்துக்கான பிணைத் தொகையை வெ.10,000ஆக நிர்ணயிக்கும்படி கோரிக்கை வைத்த நிலையில் . சம்ரியின் வழக்கறிஞர் ஹரிஸ் யூசுப், ‘ஸம்ரி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை எனவும் கூறி குறைவான பிணைத் தொகையை நிர்ணயிக்கும்படி வேண்டினார்.

‘சம்ரி மார்ச் 9 முதல்12ஆம் நாள்வரை தாய்லாந்து, சோங்க்லாவில் திருமண ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை உறுதிப்படுத்தும் சோங்க்லா இஸ்லாமிய சமயக் குழுவின் கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

“தன் வாடிக்கையாளர் சோங்க்லா இஸ்லாமியக் குழுவிலும், பெர்லிஸ் இஸ்லாமியக் குழுவிலும் இணைந்து திருமணங்களை நடத்தினார்’ எனவும் ஹரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சம்ரி 2022 முதல் தாய்லாந்தில் வியாபாரம் செய்வதாகவும் எட்டு பிள்ளைகள், நோயால் அவதிப்படும் மனைவி, சிரம்பானில் வசிக்கும் பெற்றோர் ஆகியோரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் ஹரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஸம்ரியைப் போலவே அருண் துரைசாமி என்னும் ஆறுமுகம் துரைசாமியும்(56) ஜாவி, பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதேப் பிரிவின் கீழ் சுமத்தப்பட்டு குற்றச் சாட்டை மறுத்தார்.

அவர் 2025 மார்ச் 12 அன்று பிற்பகல் 3:45 மணியளவில் பினாங்கு, பத்து கவான் பகுதியில் @arun_dorasamy என்னும்
Instagram கணக்கில் வெளியிட்ட காணொளிக் காட்சியில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் அம்சம் இருந்ததாக குற்றம் சாட்டப் பட்டது.

அருண் துரைசாமி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய நிலையில், இந்த வழக்கில் முன்னிலையான அரசத் தரப்பு வழக்கறிஞர்கள் நஸ்ரான் ஷாம், ஐரினா ஷாஸ்ரின் ஜைனுரின் இருவரும் அருண் துரைசாமிக்கான பிணைத் தொகையை 5,000 வெள்ளியாக நிர்ணயிக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

நீதிபதி நூருல் ஐன்னா அஹ்மத் அந்தக் கோரிக்கையை ஏற்று, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க ஜூன் 22-ஆம் நாளை நிர்ணயித்தார்.

அருண் ஜாமீனை செலுத்தினார். அவருக்கு வழக்கறிஞர்கள் டி. குணசீலன், பல்வந்த் சிங் புர்பா மற்றும் டிக்சன் எங் ஆகியோர் முன்னிலை ஆகினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை