
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் வல்ல அல்லாஹ்வின் அருட்கொடையை முற்றும் முழுவதுமாக உணர்கின்ற இன்றைய நோன்புத் திருநாளில் இஸ்லாம் மார்க்கத்தை போற்றுகின்ற அனைவருக்கும் நோன்புத் திருநாள் வாழ்த்தையும் ஏனைய அனைவருக்கும் சமாதான அன்பையும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ முகமது அலி தன்னுடைய நோன்புத் திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘அலி ஃப்ரெஷ் மீட்’என்ற பெயரில் ஆட்டு இறைச்சி விற்பனையில் சில்லறை வியாபாரியாகவும் மொத்த வணிகராகவும் திகழ்கின்ற டத்தோ அலி, தான் சார்ந்திருக்கின்ற இஸ்லாத்தின் கொள்கை அடிப்படையில் ஸக்காத் என்னும் நிதியை தன்னுடைய சமயம் சார்ந்த எல்லையில் வழங்குவதுடன் பொதுவாக சமய- இன எல்லையைக் கடந்து மலேசியத் திருநாட்டின் பல்லின சமுதாய ஒருமைப்பாட்டு சிந்தனைக்கு ஏற்ப எல்லா மக்களுக்கும் எல்லா வகையிலும் உதவி நல்கிவரும் கொடை நெஞ்சரும் ஆவார்.

புனித ரமலான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு மாதத்தை நிறைவேற்றி ஷவ்வால் மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ள இன்றைய தினத்தில் கொண்டாடும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் அதேவேளை, மலேசிய மக்கள் அனைவருக்கும் அன்பையும் இனிய நேசத்தையும் தெரிவித்துக் கொள்கிறார்.
அதேவேளை, அண்மைக் காலமாக மலேசிய பல இன சமுதாய கூட்டு சமுதாயத்தை ஆட்கொண்டுள்ள இன-மத முறுகல் நிலை இன்று முதல் அடியோடு அகன்று அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்வாங்கு வாழ்ந்து மலேசியாவின் மாண்பையும் பெருமையையும் நிலை நாட்ட வேண்டும் என்று இன்று கொண்டாடப்படுகின்ற நோன்புத் திருநாள் தொடர்பில் வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தியில் டத்தோ முகமது அலி தெரிவித்துள்ளார்.


