சமூகப் பொறுப்பின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியுள்ளார் எழுச்சித் தலைவர் சரவணன்!

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்றைய முன்தினம் பத்து மலையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், மஇகா துணைத் தலைவரும் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன், ஊடகத் துறையின் அடிப்படை நலன்கள் குறித்து வலியுறுத்திய கருத்து, தமிழ் ஊடக உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களின் வாழ்க்கை, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
தமிழ் ஊடகத் துறையில் பணிபுரிபவர்கள், குறிப்பாக பகுதி நேர மற்றும் இணைய ஊடகத்தினர் நிலையான வருமானமின்றி, கூடுதல் நேரம் உழைத்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இவர்கள், தகவல் கட்டமைப்பிற்கு முதுகெலும்பைப் போன்றவர்கள்; ஆனால், அடிப்படை சமூகப் பாதுகாப்பு கூட இவர்களுக்கு இல்லை என்பதை எல்லாம் குறிப்பிட்டு, மலேசியத் தமிழ் ஊடகத்தினர்மீது தன் கரிசனத்தைக காட்டியிருக்கிறார்.

“பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் துயரமும் அபாயமும் கணிக்க முடியாதவை. திடீர் இழப்பு, உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவை இவர்களின் வாழ்வை பாதிக்கின்றன. இத்தகைய சூழலில், இடையறாது பயணம் மேற்கொள்ளும் இவர்கள் விபத்து போன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொழுது, சுகாதாரக் காப்பீடு போன்ற அடிப்படை நலன்கள் இவர்களுக்கு வேண்டுமென வலியுறுத்துவது , அரசியல் முன்னெடுப்பு அல்ல; மாறாக, மனிதாபிமானப் பொறுப்பு” என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி செய்தி வெளியிடும் ஊடகப் பணியாளர்கள், தங்களது எதிர்காலத்தைப் பாதுகாக்க போராட வேண்டிய நிலை இருக்கக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய நேரம் இது,” என்று சரவணன் வலியுறுத்தினார்.
அவர், முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்கள், பகுதி நேர மற்றும் இணைய-சமூக வலைதள ஊடகத்தாருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ் ஊடகப் பணியாளர்கள், சமூகத்தின் குரலை வெளிப்படுத்தும் முன்னணி வீரர்கள். இவர்களின் பணி, வெறும் செய்தி வெளியீடு மட்டுமல்ல; அது சமூக நீதிக்கான போராட்டம். எனவே, இவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும்.

குடும்ப தினம் போன்ற இத்தகைய நிகழ்ச்சியில், ஊடகப் பணியாளர்கள் தத்தம் குடும்பத்தினருடன் கலந்து கொள்வது,
குடும்ப உறவை வலுப்படுத்தும்;
பரஸ்பர உறவுகளை ஐக்கியப்படுத்தும் இந்தக் குடும்ப நாள், ஊடகத் துறையின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் தருணம் என்று இலக்கிய வேந்தரும் சொல்வேந்தருமான சரவணன் குறிப்பிட்டார்
தமிழ் ஊடகப் பணியாளர்களுக்கான முழுமையான காப்பீடு மற்றும் நலன்கள், காலத்தின் அவசியம் மட்டுமல்ல; அது சமூகத்தின் நியாயமான எதிர்பார்ப்புமாகும். ஊடகப் பணியாளர்கள் பாதுகாப்புடன், நம்பிக்கையுடன் செயல்படும்போது தான், மக்களின் குரல் வலிமையுடன் வெளிப்படும்.
எனவே மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் செ வே முத்தமிழ் மன்னன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தமிழ் ஊடக குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று டத்தோஸ்ரீ மு. சரவணன் கேட்டுக்கொண்டார்.
இவ்வளவையும் சொன்ன இந்தத் தலைவர் வேறொன்றையும் செய்தார்; நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடைபெறும் முன் தமிழ் பத்திரிகையாளர் சங்க வளர்ச்சி நிதியாக வெள்ளி 10,000-ஐ ரொக்கமாக கொடை அளித்தார்.


