
மகா கும்பமேளா: ஆயுதப் பயிற்சி, புனித சாம்பல்களுடன் வாழ்க்கை – நாகா துறவி ஆவதற்கான செயல்முறைகள்
பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள், சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்.
இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள். பொதுவாக, வட இந்தியாவில் ‘அகரா’ (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாது-துறவிகளின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரிவேணி நதி சங்கமிக்கும் இடத்திலும், உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரிலும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் கோதாவரி ஆற்றின் கரையிலும், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடைபெறுகிறது.
இந்த நிகழ்வின்போது, புதிய துறவிகளை அகராவில் சேர்த்துக்கொள்ளும் வைபவமும் நடத்தப்படுகிறது. உலகின் சாமானிய வாழ்க்கையைத் துறப்பவர்கள் 15 வெவ்வேறு அகராக்களில் ஏதேனும் ஒன்றில் இணைகிறார்கள்.
இருப்பினும், இதற்கு முன் அவர்கள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த ‘அகரா’ உலகில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சில முக்கியமான சடங்குகளையும் செய்ய வேண்டும்.


