
நவீன மலேசியாவின் சிற்பி துன் மகாதீர் என்பதில் ஐயமேயில்லை. ஆனாலும், அரசியலில் அவரின் வல்லடிப் போக்கு, மலாய் தேசிய அரசியலையும் சமூகத்தையும் பல்கூறுகளாக பிரித்துவிட்டது என்ற உண்மையை மறுத்து, மறைத்து, இப்பொழுது அந்த சமூகத்தையே சாடி இருப்பது, நூற்றாண்டைக் கடந்து வாழும் கிடைத்தற்கரிய இந்த பொன்னான நேரத்தில்கூட, கனிந்து மணம்பரப்ப மறுக்கிறார் என்பதைக் காட்டுகிறது. காலமெல்லாம் அடுத்தவரை குறை சொல்லியே கருத்து தெரிவிக்கிறார். வெம்பிய பாங்கிலிருந்து மாற, அடியோடு மறுக்கிறார்.
22 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய இந்தத் தலைவருக்கு, தனக்கு அடுத்து தான் நிருவகித்த நாட்டையும் தலைமையேற்ற கட்சியையும் வழி நடத்த, அடுத்தக் கட்டமாக ஒரு தலைவரை அடையாளம் காண முடியவில்லை..
உண்மையில், அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே தோன்றவில்லை. இவருடன் சேர்ந்து அதிகார அரசியலில் களமாடிய துன் லிங் லியோங் சிக், துன் ச. சாமிவேலு ஆகியோரும் . தங்களுக்குப் பின் கட்சியை வழிநடத்த அடுத்தத் தலைவரை அடையாளம் காணாமலேயே அகன்றனர். அந்த வகையில், இந்த மூவருமே தோல்வி அடைந்தவர்கள்.
மகாதீருக்கு, இன்னொரு முறை இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை கால மகள் தங்கத் தாம்பூலத்தில் வைத்து வழங்கினாள். அந்த 22 மாதமும் இவர் செய்த அலங்கோல-மும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதும் அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர்பெற்ற நாடு, மலேசியா என்பதை அடியோடு கட்டு-குலைய வைத்தது.
2019 நவம்பர் மாதத்தில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற் இடைத் தேர்தலில், மகாதீர், பெர்சத்துக் கட்சி சார்பில் தேடித்தேடிப் பார்த்து நிறுத்திய வேட்பாளர் மசீச வேட்பா-ளரிடம் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வேறுபாட்டில் மண்டியிட்டு மண்ணைக் கௌவினார்.
அந்தக் கட்டத்திலாவது மகாதீர், நின்று நிதானித்திருக்க வேண்டும்.
அம்னோ கட்சியை முடிந்தவரை சிதைத்த மகாதீர் அந்தக் கட்சியில் இருந்து வெளி-யேறியதும் பெர்சத்து என்னும் கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்தினார். அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் ‘பெஜுவாங்’ கட்சியைத் தொடங்கினார்.
ஜோகூர் சட்டமன்ற பொதுத் தேர்தலில், மகாதீர் 42 தொகுதிகளில் பெஜுவாங் கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார். அனைவரும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர்.
இதையும் கடந்து, 2022 நவம்பர் 19இல் நடைபெற்ற 15-ஆவது பொதுத் தேர்தலில், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் பெஜுவாங் கட்சி சார்பில் போட்டி இட்ட மகாதீரே வைப்புத் தொகையை தேர்தல் ஆணையத்திடமும் வெற்றியை பெர்சத்துக் கட்சியிடம் பறி கொடுத்தார்.
இப்படி, தன்னுடைய அரசியல் வாழ்வுக்காக, வரிசையாக கட்சிகளைத் தொடங்கி, மலாய் தேசிய அரசியலையும் சமூகத்தையும் கூறுபோட்டுவிட்டு, இப்பொழுது ‘நல்ல பிள்ளை’ வேடம் தரிக்கிறார்.
இவரின் வல்லடி அரசியலால், இவரின் மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ், இரு முறை கெடா மாநில முதல்வர் பதவியை துறக்க நேரிட்டது.
அண்மைக் காலமாக, முதுமைத் தடுமாற்றத்துக்கும் உடல் நலிவுக்கும் ஆளாகி ஓய்வெடுக்கும் துன் மகாதீர், இனிமேல், இதுபோன்ற அக்கப்போர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ‘அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை; தானும் மாறப்போவதில்லை’ என்று சொல்லும் விதமாக, மலாய் சமூகத்தை சீண்டிப் பார்க்கிறார், இவர்.
கால மகளே, மகாதீரை நல்ல வண்ணம் அரவணைப்பாயாக!


