
மலேசிய இந்து மக்களிடையே ஆன்மீகப் பயிர் வளர்க்க உருவாக்கப்பட்ட மலேசிய இந்து சங்கத்தின் நெடும்பயணம் தொடர்கின்ற வேளையில் இப்பொழுது இந்த சமய அமைப்பு தன்னுடைய அறுபதாம் ஆண்டு விழாவை கோலாலம்பூர் கலா மண்டபத்தில் அதன் தலைவர் ‘சிவநெறி செல்வர்’தங்க கணேசன் தலைமையில் கொண்டாடி வருகிறது.

உலகின் தொல்குடி மக்களான தமிழர்கள் புலம் பெயர்ந்துவாழும் நாடுகளிலேயே நனிசிறந்த நந்நாடான இம்மலேசியத் திருநாடுவாழ் தமிழ்க் குலத்தோரிடையே ஆன்மீகப் பயிர் வளர்த்து இந்தியர்களின்- தமிழர்களின் மனங்களை சமய நெறி சார்ந்து செம்மைபடுத்த கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் தொடங்கப்பட்ட பாரம்பரிய சமய அமைப்பான இந்த மலேசிய இந்து சங்கம், மணி விழா ஆண்டைக் கடந்து பயணிக்கிறது.

சமய சீலர் பரமானந்தம் தோற்றுவித்த இந்த மலேசிய இந்து சங்கம், சங்கரத்னா நடராஜா, சங்கரத்னா எஸ் எம் பொன்னையா, சங்கரத்தினா எஸ் கோவிந்தராஜ், சங்கரத்னா ஆறு. நாகப்பன், சங்கரத்னா எம் சுப்பிரமணியன், சங்கரத்னா அ.வைத்திலிங்கம், ஸ்ரீ காசி மோகன் சண்முகம் ஆகியோர் வழிநடத்தியபின்
தற்பொழுது கணேசன் தலைமையில் செயல்படுகிறது.

ஆலயங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்ப்பதிலும் திருமுறைவழி தமிழ் வளர்ப்பதிலும் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது; இதுவரை 5 லட்சம் பேருக்கு திருமறையையும் தமிழையும் ஒருசேர பயிற்றுவித்திருப்பதாக தங்க கணேசன் ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிட்டார்.
மலேசிய இந்து சங்கத்தை நீண்ட காலம் வழி நடத்திய இரட்டையர்களான டத்தோ வைத்திலிங்கம் அவருக்கு இணையாக செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றிய சோ. பரஞ்சோதி ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்து சங்க எழுச்சிப் பாடலுக்குப் பின் செயலாளர் கனமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
லெப்டினன்ட் கர்னல் டாக்டர் விக்னேஸ்வரன் சச்சிதானந்த யோகேஸ்வரன் திருமுறை பாடசாலை மாணவர்களின் திருமுறைக் கச்சேரியும் இடம்பெற்றது.


