
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சு Mudra- முத்ரா எனப்படும் திட்டத்திற்காக வெ.220 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
முத்ரா என்பது இந்திய தொழில்முனைவோர் மூலதனம், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமாகும்.
இதன்மூலம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சொந்தமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களின் சூழலமைப்பை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
இந்திய சமூகத்தினரிடையே உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 2025இல் ஒதுக்கப்பட்ட சுமார்160 மில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 60 மில்லியன் வெள்ளி அதிகரித்துள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கு கிடைத்த ஆதரவையும் வரவேற்பையும் கருத்தில் கொள்கிறது என்று ஸ்டீவன் சிம் சொன்னார்.
முத்ரா திட்டமானது ‘குஸ்கோப்’ அமைச்சின்கீழ் உள்ள ஐந்து முதன்மைத் திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்படும்.
அதில் தெக்குன் நேஷனல் வெ.120 மில்லியன், பேங்க் ராக்யாட் வெ.15 மில்லியன், எஸ்எம்இ பேங்க் வெ.50 மில்லியன், அமானா இக்தியார் வெ.27 மில்லியன் , மலேசிய கூட்டுறவு ஆணையம் வெ.11 மில்லியன் நிதியும் அடங்கும்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்தத் திட்டத்திற்கு 33.48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 1,805 இந்திய தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.
இது மிகவும் ஊக்கமளிக்கும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
முத்ரா என்பது வெறும் குறுகிய கால நிதி உதவி மட்டுமல்ல.
மாறாக உலகளாவிய எரிசக்தி நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் வணிகச் செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் இந்திய சிறு, நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் மேலும் கூறினார்.


