Saturday, April 25, 2026

தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்: -பித்தலாட்ட கணிப்பு!

‘வணக்கம் நேயர்களே, ‘சத்தியம் டிவி-யின் மெகா சர்வே 3.0’ என்ற அறிமுகத்துடன் இன்று வாக்களிப்பு நடைபெறும் தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, தற்பொழுது வானவீதியில் உலாவரும் ஒரு காணொளித் தொகுப்பு சத்தியம் என்ற பெயருக்கு புறம்பாக ‘அசத்திய’மாகவும் பாஜக-அதிமுக கட்சிகளுக்கு மறைமுகமாக பல்லக்குத் தூக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 234 தொகுதிகளில் கால் பங்கிற்குமேல், இழுபறி என்று அறிவித்துள்ளது, இந்தக் கருத்துக் கணிப்புக் குழுவின் கையாளாகாத தனத்தை பிட்டுபிட்டு வைக்கிறது.

இந்தக் குழு, ‘இழுபறி’ என்று வகைப்படுத்தி உள்ள 60 தொகுதிகளும் (அல்லது மிகப்பெரும்பான்மையான தொகுதிகள்) திமுக கூட்டணிவசம் செல்லக் கூடியவை என்பதை மேத் திங்கள் 04-ஆம் நாள் முடிவு வெளியாகும்போது, தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லர்; உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கருத்துக் கணிப்பு மார்ச் 25 முதல் ஏப்ரல் 15-ஆம் நாள் வரை 22 நாட்களுக்கு துல்லியமாக நடத்தியதாகக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தக் குழுவினர், 60 தொகுதிகளில் ‘இழுபறி’ என்று அறிவித்திருப்பது பச்சைக் கையாலாகாத தனம்.

குறிப்பாக, அவிநாசி தொகுதியை இவர்கள் மிகசாதாரணமாக கடந்துபோனது, இவர்கள் ஐயத்திற்குரியவர்கள் என்பதற்கான முதற்புள்ளி.

அந்தத் தொகுதி, இயல்பாக அதிமுக கோட்டை; அங்கு அண்மைய இரு தேர்தல்களில்(2016, 2021) தொடர்ந்து இருமுறை வென்றவர் தனபால்; இவர், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையில் உணவுத் துறை அமைச்சராகவும் இடைப்பாடி பழனிசாமி காலத்தில் அவைத் தலைவராகவும் இருந்தவர்.

அந்தத் தொகுதியை இம்முறை அதிமுக பாஜக-விடம் கைகழுவி விட்டது; அதுகூட தாழ்வில்லை; இப்பொழுது அங்கு அதிமுக கூட்டணி சார்பில் மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினால் களமிறக்கப்பட்டவர், ஓர் இளம் மருத்துவர்; 26 வயதே ஆன கோகிலாமணி. காலமெல்லாம் கல்வி மறுக்கப்பட்ட அருந்ததியர் பிரிவைச்சேர்ந்தவர், அவர்;

பாஜக-அதிமுக-விற்கு மறைமுக துதிபாடும் இந்தக் குழுவினர், தங்களின் குயுக்தி புத்திக்கேற்ப, அங்கு ‘இழுபறி’ என்றுதான் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மிக இயல்பாக அங்கு திமுக வெற்றி என்று கடந்து செல்கின்றனர். அந்தத் தொகுதி-யைப் பற்றியோ, அங்கு போட்டியிடும் முருகனைப் பற்றியோ எதுவும் குறிப்பி-டாமல் கடந்து போகின்றனர்.

‘ஜெய்ராம்’ புகழ் முருகன், சாதாரணமானவர் இல்லை; ஆரிய அடிமையான இவர், அமித்ஷா-மோடியின் தமிழக பிரதிநிதி. அங்கு, மருத்துவர் கோகிலா அடித்தாடும் விதமாக வெல்ல இருப்பதால், சொல்வதற்கு ஏதுமின்றி கடந்து போகின்றனர்.

அடுத்து, அதிமுக வெற்றியென்று இவர்கள் சொல்லும் ஒவ்வொரு தொகுதி குறித்தும் ‘அங்கு, அதிமுகவிற்கு கூட்டணி வலிமை’ என்கின்றனர். இதுவும் ஒரு பச்சைப் பொய்; அதிமுகவிற்கு எங்கே இருக்கிறது கூட்டணி வலிமை?

மீனவ சமுதாயத்தில் திமுகவிற்கு ஆதரவு 29% எனவும் அதிமுகவிற்கு 33% எனவும் தெரிவித்துள்ளனர். இதுவும் நம்பும்படியாக இல்லை; தஞ்சை மண்டலத்து ஒரத்த நாடு தொகுதியிலும் திமுக வெற்றியை இவர்கள் கேள்விக் குறி ஆக்கியுள்ளனர்.

இவை எல்லாவற்றையும்விட, யார் அடுத்த முதல்வர் என்பதற்கு தமிழ் நாட்டு வாக்-காளர்கள் மு.க. ஸ்டாலினுக்கு 37% ஆதரவும் இடைப்பாடி பழனிசாமிக்கு 34% ஆதரவு என்றும் தெரிவித்திருப்பது, இந்தக் குழு-வினர் ஐயத்திற்கு உரியவர்கள் என்பதும் அதிமுக-பாஜக கட்சிகளுக்கு மறைமுகமாக வெண்சாமரம் விசுபவர்கள் என்பதும் புலனாகிறது.

இவற்றை யெல்லாம் சொல்லிவிட்டு, வாக்க ளிப்பிற்கு முதல் மூன்று நாட்கள் என்ன வேண்டுமானாலும் நடைபெறும் என்பதால், இந்த முடிவு யாவும் மாறும் எனவும் தெரிவிக்கின்றனர்.

பின் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்தக் கருத்துக் கணிப்பு?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை