
ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில், 32வது கல்வி யாத்திரை நேற்று ஆகஸ்ட் 2-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை, பத்துமலை தமிழ்ப்பள்ளி மற்றும் பத்துமலை திருத்தல வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கல்வி யாத்திரையில் கல்விக் கருத்தரங்கு , கல்வி வழிகாட்டுதல், ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்றன.
மாணவர்களிடம் தன்னம்பிக்கை, ஒழுக்கம், விடாமுயற்சி, உயர்ந்த இலட்சியங்களை வளர்ப்பது ஆகியவையே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாண்டின் கல்வி யாத்திரை, முருகப்பெருமானின் புனித வேலுடன் சிறப்பான ஆன்மிகத் தொடர்பைக் கொண்டுள்ளது.

நிறைவாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா செய்தியாளர்களிடம் பேசினார்.
“வேல் என்பது வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அது ஞானம், துணிவு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, அறியாமையை அகற்றும் தெய்வீகச் ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது” .
தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருத்தலத்தில், அன்னை பார்வதி தேவி தன் மகனான முருகப்பெருமானுக்கு சூரபத்மனை அழிப்பதற்காகத் தெய்வீக வேலை வழங்கியதாகத் தலபுராணம் கூறுகிறது. சக்தி தேவியிடமிருந்து பெறப்பட்டதால், அது ‘சக்திவேல்’ என்றும் போற்றப்படுகிறது என்றார்.
அன்னையின் அருளையும் தெய்வீகச் சக்தியையும் பெற்ற முருகப்பெருமான், சூரபத்மனை எதிர்கொண்டு வெற்றி கொண்டார் என்று சுரேன் கந்தா குறிப்பிட்டார்.
” திருமுருகன் தன்னுடைய திருக்கரத்தில் வேலுடன் அழகாகக் காட்சியளிப்பதால், இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் ‘சிங்காரவேலர்’ என்று அழைக்கப்படுகிறார்” .
இந்தக் கல்வி யாத்திரையின் சிறப்பம்சமாக, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வழங்கப்பட்ட புனித வேல்கள் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிக்கல் சிங்காரவேலர் திருத்தலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற இவ்வேல்கள், மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 5,000 புனித வேல்கள், கல்வி யாத்திரையில் பங்கேற்ற ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாக ஒரு தாயாருக்கு ஒரு புனித வேல்வீதம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அன்னை பார்வதி தனது மகனான முருகப்பெருமானுக்கு வெற்றியை அருளும் வேலை வழங்கியதை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு அமைந்ததாக சூரியன் கந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு தாய் தன் பிள்ளைக்கு அன்பு, துணிவு, நம்பிக்கை ஆகியவற்றுடன் ஆசீர்வாதத்தையும் வழங்குவதைப்போல, புனித வேலைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தாயாரும் அதனைத் தன் பிள்ளையின் கல்வி முன்னேற்றத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் அளிக்கும் ஆசீர்வாதத்தின் அடையாளமாக இந்த வேல் விளங்குவதாக சுரேன் கந்தா குறிப்பிட்டார்.
இதன்மூலம், ஒரு மாணவரின் கல்விப் பயணத்தில் தாயின் ஆசீர்வாதமும் குடும்பத்தின் ஆதரவும் மிக முக்கியமானவை என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட சுரேன் கந்தா.. ,
“மலேசிய இந்திய சமுதாயத்தில் எல்லோரும் தலைவராக ஆசைப்படுகின்றனர்; ஒற்றுமை என்பதை தொலைத்தும் விட்டனர்.
ஆனாலும் மாணவர்களாகிய நீங்கள்தான் எதிர்கால தலைவர்கள்” என்று மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக, கல்வி யாத்திரை தொடங்கும்முன், சிவபுராணம் ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் புனித நீர் நிறைந்த குடங்களை ஏந்தி பத்துமலைப் படிகளில் ஏறிச் சென்று, மலைமேல் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்குப் புனித நீரைச் செலுத்தி வழிபட்டனர்.
வேல் தீமையையும் இருளையும் விலக்குவதைப் போல, கல்வி அறியாமை, அச்சம், பின்தங்கிய நிலையை அகற்றுகிறது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் வெல்வதற்கான சக்திவாய்ந்த வேலாகக் கல்வி அமைகிறது.
கல்வி யாத்திரையின் வாயிலாக ஆன்மிகத்தையும் கல்வியையும் ஒன்றிணைத்து, மாணவர்களை அறிவு, நற்பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நிறைந்தவர்களாக உருவாக்குவதை ஸ்ரீ முருகன் நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, 32வது கல்வி யாத்திரை ஒரு கல்விக் கருத்தரங்காக மட்டும் அமையாமல், அறிவையும் இறையருளையும் நோக்கிய புனிதப் பயணமாகவும் அமைந்தது.
முருகப்பெருமானின் ஞானவேல் வழங்கும் அருளையும் வலிமையையும் துணையாகக் கொண்டு, மாணவர்கள் கல்வியில் உயர்ந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கியச் செய்தியாகும்.


