
மலாயாத் தொழிற்சங்கத் தலைவர்-புரட்சித் தலைவர் மலாயா கணபதிக்கு இன்று நினைவு நாள்.
அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து பதைபதைத்த பேரறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேருவைத் தொடர்பு கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் தோழர், கணபதியைக் காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தார்.
அதன்படி நேருவும் லண்டனில் இருந்த தன் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் மூலம் முயற்சி மேற்கொண்டார். இருப்பினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சிலாங்கூர் மாநிலம், ரவாங் பட்டணத்தை ஒட்டிய பத்து ஆராங் பகுதியில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்ட மலாயா கணபதி, கைத் துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவசர அவசரமாக விசாரணை நடத்தப்பட்டு அவசரத் தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டே மாதங்களில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அவசரகதியில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
எஸ்.ஏ. கணபதிக்கு பிரிட்டிஷ் மலாயாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தும் பயனற்றுப் போனது.
பிரிட்டிஷ் மலாயாவில் தொழிற்சங்கப் போராட்டவாதியாகவும் சமூக நீதி செயல்பாட்டாளராகவும் விளங்கிய கணபதி, இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்ததால் தூக்கிலிடப்பட்டவர்.
எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டம், பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்ததால், அவரை பன்னாட்டுப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.
தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டில் பிறந்த எஸ். ஏ. கணபதி, பத்து வயதாக இருந்தபோது, சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்ற அவர், இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
மலாயாவில், ஜப்பானியர் ஆட்சிக் காலத்தின்போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கிய ஆசாத் இந்திய தற்காலிக அரசாங்கத்தில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார்.
மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின்-MCP கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த ‘முன்னணி’ இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். ‘கப்பலோட்டியத் தமிழர்’ வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நினைவு விழா எடுத்த கணபதி, மலேயாவில் பெரியார் ஈ.வெ.ரா சமதர்மப்பள்ளி என்னும் கல்விச் சாலையையும் உருவாக்கினார்.


