
தமிழ் நாட்டு அரசக் கட்டிலிலிருந்து 60ஆண்டுகளுக்கு முன்(1967 மார்ச்) அகற்றப்பட்ட காங்கிரஸ் கட்சி, இப்பொழுது மீண்டும் மாநில அரசில் இடம்பிடிக்கிறது.
‘தமிழ் நாட்டில் திமுக வெல்வதிலும் ஆள்வதிலும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், காங்கிரஸ் கட்சியை மட்டும் உங்கள் கூட்டணியில் இருந்து விலக்கி விடுங்கள்’ பல கட்டங்களில் பாஜக தலைமை மறைமுகமாகவும் நேரிலும் தகவல் அனுப்பியது; ஆனால், அதைப் புறக்கணித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரசுடன்தான் தங்களின் அரசியல் பயணம் என்று உறுதியாக நின்றார்.
இப்பொழுது, பாஜகவே நேரடியாக களத்தில் இறங்கி, காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து அகற்றிவிட்டது. ராகுலின் அம்பு கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி, விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பாஜக, விஜய் கட்சி மூலம் மறைமுகமாக வென்றுள்ளது. பாஜக வெல்வதும் விஜய் ஆள்வதும் ஏறக்குறைய ஒன்றுதான். மொத்தத்தில், திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறிய அடுத்த இரு நாட்களில் திமுக கூட்டணியையும் சிதைத்துள்ளது, பாஜக.

தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாததைப் போல, தள்ளிநின்றே காரியத்தை கட்டம்கட்டமாக பாஜக நிறைவேற்றுகிறது. காங்கிரஸ் கட்சியையும் விசிக-வையும் விஜய்க்கு ஆதரவு அளிக்க வைத்து, அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு அளிப்பதன் மூலம், பாஜக ஒரேக் கல்லில் இரண்டு மூன்று காய்களை அடிக்க முயல்கிறது.
இன்னும் சற்று நேரத்தில் விஜய்யை ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கும் சோடங்கர், அடுத்து எல்லோருமாக சேர்ந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்ல இருக்கின்றனர்.
பாஜக-வின் இந்த முயற்சிக்கு, காங்கிரஸ் கட்சியுடன் விசிக-வும் இசைவு தெரிவிப்பதாகத் தெரிகிறது. ஆட்சியில் பங்கு என்னும் நீண்ட கால கனவும் இவர்களுக்கு நிறைவேறலாம். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை ஆர்.எஸ்.எஸ். கச்சிதமாக ஏவிவிடுகிறது.
விஜய் நிருவாகம் தான் சொல்கிறபடிதான் கேட்க வேண்டும் என்பதை பாஜக தலைமை உறுதிப்படுத்திக் கொள்ளும். இப்பொழுதே, தவெக, அப்படித்தான் செயல்படுகிறது.
மொத்தத்தில், திமுக கூட்டணியை வலுவிழக்கச் செய்தபின், அடுத்தக் கட்டமாக திமுக-வை தனிப்பட்ட முறையில் பலவீனப்படுத்த பாஜக முயலும். அது, நடக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குமுன் எம்ஜிஆரை ஏவிவிட்டு, திமுகவை சிதைக்க முயன்ற இந்திரா காந்தி அத்தியாயத்தை, இப்பொழுது பாஜக(மோடி-அமித் ஷா இணையர்), விஜய் மூலம் மீண்டும் தமிழ் நாட்டில் நிறைவேற்றி இருக்கிறது.
இந்தச் சூழலில், திமுக தோல்வியை இப்பொழுது பாஜக-வைவிட காங்கிரஸ்தான் அதிகமாகக் கொண்டாடுகிறது. 1967-க்குப் பின் மாநில ஆட்சியில் காங்கிரஸ் பங்குகொள்கிறது. ராகுலின் வாழ்த்தை திருச்சி வேலுச்சாமி தந்தி தொலைக்காட்சி மூலம் வெளிப்படையாக தேர்தல் முடிவு வெளியாகிய நேரத்திலேயேத் தெரிவித்து விட்டார்.

விசிக நிலை பளிச்சென தெரியவில்லை. தவெக, அடுத்தக் கட்ட நகர்வுக்கு, அதாவது ஆட்சி அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. வைகோவும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவை நேரடியாக விமர்சித்துள்ளது.
இனி, பாஜகவின் குறி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்ததாக இருக்கும். இந்த சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தலையும் கூடவே அழைத்து வந்துள்ளது. அடுத்த எதிர்க்கட்சித் தலைராக, மேநாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட இருக்கிறார்.
தமிழ் நாட்டின் அதிமுக-பாஜக கட்சிகளின் ஈடுபாடு இல்லாமல், விஜய்யின் தவெக, காங்கிரஸ், விசிக கட்சிகளின் கூட்டணியை திமுக கூட்டணிக்கு மாற்றாக மதசார்பற்றக் கூட்டணி என்று சனாதன பாஜக தரப்பில் இப்பொழுதே பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இந்து ரஷ்டிரம் என்னும் தனது நூற்றாண்டு கனவை, அதன் அரசியல் கரமான பாஜக மூலம், ஏறக்குறைய எட்டிவிட்டது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலாங்களில் காங்கிரஸ் ஆளகிறது.
இந்த மூன்று மாநிலங்களைத் தவிர, மீதி இந்தியா முழுவதும் சனாதனக் கரம் படர்ந்துள்ளது. 1925-இல் உருவான கமுக்க இயக்கங்களான இந்து மகா சபை-ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் எண்ணம் இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவதுதான்; அது, கட்டங்கட்டமாக நிறைவேறி வருகிறது. அந்தக் குறிக்கோளுக்கு கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வந்து மாநிலக் கட்சிகளின் ஆட்சி, குறிப்பாக திமுக ஆட்சி, பாஜக-வின் கண்ணையும் கருத்தையுமம் உறுந்திவந்த நிலையில், அந்த உறுத்தலையும் இப்போது போக்கி இருக்கிறது பாஜக.
கேரளாவில் பொதுவுடைமைக்(கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆட்சியையும் தமிழ் நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் மண்டலக் கட்சிகளின் ஆட்சியையும் இரு தினங்களுக்குமுன் பாஜக அகற்றிவிட்டது. இந்தியாவில் எங்கும் மாநிலக் கட்சி ஆட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியோ இல்லாமல் செய்துவிட்டது பாஜக; தமிழ் நாட்டில் நாளை அமையப்போவதும் பாஜக ஆட்சிதான்.
திமுக ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது!


