
ஒவ்வோர் ஆண்டிலும் உயர்க் கல்வித் தவணை தொடங்கும் நேரத்தில் இந்திய சமுதாய மாணவர்கள் பல்வேறு தடங்கலை எதிர்கொண்டு பரிதவிக்கின்றனர். எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான நிலையில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள்கூட விரும்பிய துறையில் உயர்க் கல்வியைத் தொடர முடியாதது; மெட்ரிகுலேசன் வாய்ப்பில் ஏற்படும் தடங்கல் என்பதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டும், இதன்தொடர்பில் கல்வி அமைச்சகத்தில் உரிய கோரிக்கையை முன்வைக்கும் நோக்கிலும் மஇகா கல்விக் குழுவினர் இன்று அமைச்சர் ஃபட்லினா சீடேக்கை சந்தித்துள்ளனர்.
டத்தோ ரெ. நெல்சன் தலைமையிலான கல்விக் குழுவினர், இன்று காலையில் கல்வி அமைச்சருடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் கலந்துரையாடி, ஆலோசித்து மஇகா-வின் கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்ததாக இந்தக் குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான எல்.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
“கல்வித் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சரும் கலவியாளருமான டத்தோஸ்ரீ சி.கி. தேவமணி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்று, அமைச்சரிடம் பொருத்தமான-அவசியாமான கருத்துகளை முன்வைத்தனர்”.
குறிப்பாக, நிகழும் கல்வி ஆண்டிற்குரிய மெட்ரிகுலேசன் வாய்ப்பு குறித்த கலந்துரையாடலில், அரசு அறிவித்தபடி ‘10ஏ’ பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் 2026 கல்வி ஆண்டில் வாய்ப்பு அளித்திருப்பதாகவும் 9ஏ, 8ஏ-க்கள் பெற்று நன்னெறிப் பாடத்தில் ‘பி’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்திய சமுதாய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2000 இடங்கள் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அமைச்சர் சொன்ன தகவல் மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதைப்போல, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழிலக்கியப் பாடங்ககளை தமிழ் மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்வதில் நிலவும் சிக்கல், இடை நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை, பாட நேரத்திலேயே தமிழ்-தமிழிலக்கியப் பாடங்களைப் பயிற்றுவிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை யெல்லாம் முன்வைத்தபோது, அமைச்சர் சாதகமான பதிலைத் தந்ததுடன் இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் என்று சிவசுப்பிரமணியன் கூறினார்.
“தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேசிய மொழியில் சிறந்து விளங்குவதாகவும் இதற்கான சான்று, கிளந்தான் மாநிலத்து கோல கிராய் தமிழ்ப் பள்ளியென்று அமைச்சர் சொன்னது பெருமையாக இருந்தது; அதைப்போல, ஆங்கில மொழியிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை எட்டி இருப்பதாகவும் இதற்கு கெடா மாநிலத்தின் லங்காவித் தமிழ்ப் பள்ளி எடுத்துக் காட்டென்றும் அமைச்சர் தெரிவித்தது இனிப்பான தகவல் என்று அவர் மேலும் சொன்னார்”.
நல்லவிதமான இந்த சந்திப்பிற்கு அமைச்சரின் உதவியாளர் தியாகராஜன், மிகுந்த கடப்பாட்டுடன் ஏற்பாடு செய்ததாக மஇகா தேசிய ஊடகப் பிரிவின் தலைவருமான எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
“தமிழ்ப் பள்ளிகளின் சுற்றுச்சூழல் நல்லவிதமாக இருப்பதாகவும் மாணவர் களும் சுத்தம்-சுகாதார நிலையில் இருக்கின்றனர் என்றும் இதன் தொடர்பில் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார் அமைச்சர்”.
கல்வியில் நாட்டம் குறைந்த அல்லது தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை முதலாம் படிவத்தில் இருந்தே அடையாளம் கண்டு, அவர்-களை ‘திவெட்’-TVET எனப்படும் தொழில்நுட்பத் திறன் சார்ந்த கல்வியின் பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்பி, அவர்களையும் ஆற்றல்மிக்க மாணவர்களாக உருவாக்குதன் தொடர்பில் மஇகா கல்விக் குழு உதவ வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டதாகச அவர் மேலும் கூறினார்.
இதன்தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்-வரனின் ஆலோசனையைப் பெற்று அதன்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம் என்றும் இன்று காலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கல்வித் துறை இயக்குநரும் கலந்து கொண்டது சிறப்பானதென்றும் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


