Monday, May 25, 2026

‘நம் நாடு’ நாளிதழை வழிநடத்திய கென்னத் ஈஸ்வரன்!

மலேசிய இந்திய வர்த்தக தொழில் சங்க சம்மேளன முன்னாள் தலைவர் கென்னத் ஈஸ்வரன் ஆற்றல்மிக்க தொழில் முனைவோராகவும் மலேசிய இந்திய வர்த்தக எல்லையைக் கடந்து தேசிய வர்த்தக வட்டத்திலும் நன்கு அறியப்பட்ட பிரமுகராகவும் விளங்கினார்.

ஜோகூர் மாநில இந்திய வர்த்தக-தொழிற் சங்க(JICCI)த் தலைவராகவும் செயல்பட்ட அவர், மலையக தென்புலத்து மாநிலமான ஜோகூர்வாழ் இந்திய வணிக சமூகத்தினர், இளம் தொழில் முனைவோர் ஆகிய தரப்பினரின் வளர்ச்சிக்கு அதிகமாக பாடுபட்ட அவர், தேசிய முன்னணியுடன், குறிப்பாக மஇகா-வுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் தேசிய வர்த்தக அமைப்பான மைக்கி’யை நீண்டகாலம் வழிநடத்திய அவரின் தலைமைத்துவ காலத்தில் அந்த அமைப்பு பிரபலம் அடைந்தது. தேசிய வர்த்தகக் கூட்டமைப்பில் மைக்கி’யின் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் இடம்பெறச் செய்தார், ஈஸ்வரன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய முன்னணி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்புடன் நெருங்கிய தொடர்பு வட்டத்தில் இருந்த அவர், 2011-2013 காலக் கட்டத்தில் மலேசிய இந்திய வர்த்தக் சமூகம் எதிர்கொண்ட தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அதிகமாக முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பாரம்பரிய வர்த்தக எல்லையைக் கடந்து, ஒரு நாளிதழையும் நீண்ட காலத்திற்கு வழிநடத்தினார் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது. நம் நாடு என்னும் தினசரி இதழை புதுமைக் கோலத்தில் நவீனப் பாங்குடன் வழிநடத்தினார் என்பதை மலேசியத் தமிழ்ச் சமூகமும் ஊடக வட்டமும் நன்கு அறியும்.

கென்னத் ஈஸ்வரன், பக்கவாதம் காரணமாக நீண்டகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அண்மையில் கோலாலம்பூர் பந்தாய் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

2018-இல் நாட்டின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக, தேசிய முன்னணி ஆட்சியை இழந்தது. குறிப்பாக, நஜீப் பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தது, ஈஸ்வரனுக்கு தனிப்பட்ட முறையில் பெரும்பாதிப்பாக அமைந்தது. தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஈசுவரனின் அதிகார மேடையும் வர்த்தக எல்லையும் 2018 மே 2-ஆவது வாரத்திற்குப் பின் மெல்ல சரியத் தொடங்கின.

அந்தக் காலக் கட்டத்தில், மைக்கி, உயர்மட்டக் குழுவில், 2-ஆம் கட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ ந.கோபால கிருஷ்ணன் மைக்கித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, டான்ஸ்ரீ ஈஸ்வரனை வெற்றிகொண்ட சம்பவம், அவரை இன்னும் பலவீனப்படுத்தியது.

இந்த சமயத்தில், சொந்த வீட்டுப் பணிப்பெண்கள் குறித்த சிக்கலில், இந்தோனேசியத் தூதரகம் நேரில் தலையிட்டது, ஈஸ்வரனுக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது.

இவ்வாறு, 2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து பின்னடைவைச் சந்தித்த அவர், மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, வீட்டோடு முடங்கினார். அதற்குப்பின் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார்.

மைக்கியை, இவர் தலைவராகவும் மஇகா பகாங் மாநில அந்நாளையத் தலைவர் டத்தோ மு.தேவேந்திரன் பொதுச்செயலராக இருந்து வழிநடத்திய காலம் அந்த வர்த்தகக் கூட்டமைப்பிற்கு பொற்காலம் எனலாம்.

இந்த நிலையில் அறுபத்து ஐந்து வயதான அவர், நேற்று காலையில் காலமான தகவல் அறிந்து மலேசிய இந்திய வர்த்தக சமூகமும் ஊடக வட்டமும் மிகவும் வாட்டத்திற்கு ஆளாகியுள்ளன.

மைக்கி அமைப்பை புத்தாயிரத்தாம் ஆண்டு முதல் 2004வரையில் முதல் கட்டமாகவும் மீண்டும் 2008 முதல் 2018 வரை இரண்டாம் கட்டமாகவும் வழிநடத்திய ஈசுவரன், வெட்டு ஒன்று-துண்டு மூன்றென வெடுக்கென பேசுவதிலும் தயவு தாட்சண்யமின்றி கருத்தாடுவதிலும் வல்லவர். இவர், நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருடன் நட்பு வட்டத்தில் இருந்தார் என்பதைவிட, சந்திப்புறுதி என்றெல்லாம் ஏதுமின்றி “தங்களைச் சந்திக்க இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பிரதமர் நஜீப்பின் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நளை திங்கட்கிழமை மே 10 ஞாயிற்றுக்கிழமை காலையில்9:00 முதல் 11:00 மணிவரை கென்னத் ஈஸ்வரனின் காஜாங், கண்ட்ரி ஹைட்ஸ் இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதையும் சமய சடங்கும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை