Wednesday, May 13, 2026

செனட்டர் சரசுவதி முன்னிலையில் விலாயா இந்து சங்கத்தினர் அமளி-துமளி!-போலீஸ் புகாரில் முடிந்தது!!

மலேசிய இந்து சங்க விலாயா மாநிலப் பேரவையின் 44-ஆவது ஆண்டுக் கூட்டம் செனட்டர் க. சரசுவதி முன்னிலையிலும் இந்து சங்கத் தலைவர் த. கணேசன் தலைமையிலும் தொடங்கிய சிறிது நேரத்தில் சச்சரவில் தொடங்கி போலீஸ் புகாரில் முடிந்துள்ளது.

இந்து சங்க சட்ட விதிப்படி, 21 நாள் அவகாசத்தில் அறிக்கை அனுப்பப்பட வில்லை என்பது குறித்து வினாத்தொடுத்த வட்டாரப் பேரவைத் தலைவர்களை சிறுமைப்படுத்தியதால் அவர்கள் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய இந்து சங்கத்தின் 2026 தேசிய ஆண்டுக் கூட்டம் ஜூலைத் திங்கள் 19-ஆம் நாள் சுபாங் ஜெயா, சன்வே அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற உள்ள நிலையில், இடையில் மாநிலந்தோறும் ஆண்டுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில், பினாங்கு மாநிலப் பேரவையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமும் சலசலப்பில் முடிந்துள்ளது. இன்று ஆயர் பானாஸ் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற விலாயா மாநில ஆண்டுக்கூட்டத்திற்கான அறிக்கை சங்க விதியின்படி 21 நாள் அவகாசத்தில் கூட்ட அறிக்கை அனுப்பப்பட வில்லை யென்றும் ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பிவிட்டு, ஏதும் வினா எழுப்ப வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன் அதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாரப் பேரவை சார்பில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது என்ன நியாயம் என்று வினாத் தொடுத்த ஸ்தாப்பாக் வட்டாரப் பேரவைத் தலைவர் ஆனந்த ராஜ் த/பெ ஆறுமுகம், பங்சார் வட்டாரப் பேரவைத் தலைவர் குணசேகரன் த/பெ சுப்பிரமணியன், வங்சா மாஜு வட்டாரப் பேரவைத் தலைவர் ஆறுமுகம் த/குப்பன், கம்போங் பாண்டான் வட்டாரப் பேரவைத் தலைவர் அரி கிருஷ்ணன் த/பெ வேதாச்சலம், சிகாம்புட் வட்டாரப் பேரவைத் தலைவர் குணாளன் த/பெ எஸ்.சுப்பையா ஆகியோர் உள்ளிட்ட ஆறு வட்டாரப் பேரவைத் தலைவர்களையும் புறக்கணித்து, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்படி தேசியத் தலைவர் தங்க கணேசன் கூறியதை அடுத்து மேற்குறிப்பிட்ட ஆறு பேரும் வெளிநடப்பு செய்ததுடன் போலீஸ் புகாரும் செய்துள்ளனர்.

தவிர, மாநிலப் பேரவைகளின் ஆண்டுக் கூட்டத்திற்கு மத்திய செயலவை அனுமதி வழங்க வேண்டும். அந்த வகையில், 2026 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற இந்து சங்க மத்திய செயலவைக் கூட்டத்தில் விலாயா மாநிலப் பேரவை ஆண்டுக் கூட்டத்திற்கு அனுமதிபெற வில்லை என்று தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதத்திற்கான மத்திய செயலவைக் கூட்டம் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற்ற நிலையில், ஒருவேளை அதில் அனுமதி வழங்கப்பட்ட்டிருந்தால், பின் எப்படி ஏப்ரல் 8-ஆம் நாளென முன்தேதியிட்டு விலாயா மாநில ஆண்டுக் கூட்டத்திற்கான அறிக்கை வெளியிட முடியும்?.

அதையும், நிகழும் மே மாதம் 3-ஆம் நாளில்தான் புலனக்குழுவில் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்துக் கேட்டத்தற்கு தேசியத் தலைமையும் மாநிலத் தலைமையும் முறையான பதில் சொல்லாமல், அலட்சியப் படுத்திவிட்டு, தொடர்ந்து கூட்டத்தை நடத்தியாகவும் மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு விழா அண்மையில் கோலாலம்பூர் கலா மண்டபத்தில் நடைபெற்றது. அதில்கூட, கடந்த ஆண்டு தேசியக் கூட்டத்தில் தங்க கணேசன் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட தரப்பினர் புறக்கணிக்கப்பட்டனர்.

இடையில் பினாங்கு மாநிலப் பேரவையின் 49-ஆவது ஆண்டுக் கூட்டம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மே 3-ஆம் நாள், பினாங்கு Continental தங்கும் விடுதியில் நடைபெற்றபோது அங்கும் அமளி-துமலியுடன் நடைபெற்ற நிலையில், இன்று முன்னாள் துணை அமைச்சர் க.சரசுவதி தலைமையில் நடைபெற்ற நாட்டின் மையப் பகுதியான விலாயா மாநிலப் பேரவையின் 44-ஆவது ஆண்டுக் கூட்டமும் சச்சரவில் தொடங்கி காவல் நிலையப் புகாரில் முடிந்துள்ளது விலாயா மாநில இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மலேசிய இந்து சமுதாயமே எண்ணிப்பார்!
இந்து சங்க இன்றைய தலைமை எதை நோக்கி பயணிக்கிறது?

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை