
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா, எண்பதாம் ஆண்டில் பயணிப்பதை எண்ணி ஒவ்வொரு மலேசிய இந்தியரும் பெருமைகொள்ள வேண்டும்; அதேவேளை, நாம் செய்கின்ற தொண்டு, மக்களுக்கு ஆற்றும் கடமை குறித்தெல்லாம் நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இனி அவ்வாறு இல்லாமல், துடிப்புடனும் எழுச்சியுடனும் செயல்பட வேண்டும். அதுகுறித்து, சமூக ஊடகத்தின்வழி பிரச்சாரமும் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
கட்சியின் எண்பதாம் ஆண்டு விழா தொடர்பில் ‘80 ஆண்டு சேவை-ஒற்றுமையும் முன்னேற்றமும்’ என்னும் கருப்பொருளை இலக்காகக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு தேசிய அளவில் மஇகா திட்டமிட்டுள்ளது.

கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ த. முருகையா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஒருங்கிணைப்பில், மாநிலந்தோறும் குடும்ப தின விழா, மருத்துவ பரிசோதனை, குருதிக் கொடை, காற்பந்து-கூடைப் பந்து விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுப் போட்டி, கலாச்சார இரவு, ‘எண்பதாண்டு இருப்பு-எதிர்காலக் குரல்’ என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டி, கூட்டுப் பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சி யெல்லாம் திட்டமிடப்பட்டுள்ளன.
2026 மே 21-ஆம் நாள் மாலை ஆறரை மணி அளவில் தேசிய அளவில் நடைபெற உள்ள கூட்டுப் பிரார்த்தனை இதன் தொடக்க நிகழ்ச்சியாக அமையவுள்ளது
தொடர்ந்து, மே 31-ஆம் நாள் காலை ஏழரை மணி அளவில் குடும்ப தின விழா நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 7-ஆம் நாள் காலை 7:30 மணி அளவில் மருத்துவ முகாமும் ஜூன் 20 காலை ஏழரை மணி அளவில் விளையாட்டுப் போட்டியும் ஜூலை 04-ஆம் நாள் காலை 9:00 முதல் 3:00 மணி வரை பேச்சுப் போட்டியும் எண்பதாம் ஆண்டு மெது ஓட்டம் ஜூலை 26-ஆம் நாள் காலை ஏழரை மணி அளவிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

கூட்டுப் பிரார்த்தனை மட்டும் வியாழக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிற நிகழ்ச்சிகள் யாவும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் குறித்தெல்லாம் மஇகா தேசிய தலைமையகத்து நேதாஜி அரங்கில் பேசிய விக்னேசுவரன், மாநிலத் தலைவர்-களையும் தொகுதித் தொலைவர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக ஊக்கமுறப் பேசினார்.
துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் உள்ளிட்ட முன்னிலைத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


