
மலேசிய அரசியல் களத்தில் தேர்தல் வரும் பொழுதெல்லாம் எம்ஜிஆர் புகழ் பாடுவதையும் அவர் நடித்த பாடல்களுக்கு தானும் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அன்வார் இப்பொழுது எம்ஜிஆரை கைவிட்டுவிட்டு விஜய்யை கைப்பற்றியுள்ளார்.
மலேசிய அரசியல் களம், தற்பொழுது 16-ஆவது பொதுத் தேர்தலை நோக்கி நகர்கின்ற வேளையில், இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக விஜய் என்னும் துருப்புச்சீட்டை கையில் எடுப்பதாக தெரிகிறது.
அதனால்தான், இரு வார காலத்தில் விஜய்க்கு இரு முறை வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இன்னும் நான்கு மாதங்களில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு செல்லும் பொழுது வாய்ப்பு இருந்தால் தமிழ்நாட்டிற்கும் சென்று விஜய் சந்திக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பிரதமர் அன்வார்.
இதுவரை அரசியல் ரீதியாக எந்த கொள்கையையும் கருத்தையும் மக்களிடத்தில் முன்வைக்காததால் விஜய்யை பிரதமர் அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஊடகத்தினரை சந்திக்காத விஜய்யின் மௌடீகத்தனம் அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
விஜய் தன்னுடைய அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் அப்போது பதவியில் இருந்த திமுகவை வசை பாடியதைத் தவிர அரசியல் ரீதியாகவும் ஜனநாயக முறைப்படியும் எவ்வித விமர்சனத்தையும் வைக்கத் தெரியாத விஜய்யை அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்;
சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புபவர்களுக்கு அங்கேயே பதில் சொல்லாமல் அல்லது பதில் சொல்லத் தெரியாமல் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய பின் சமூக ஊடகங்களில் வசை பாட மட்டுமே தெரிகின்ற விஜய்யையை அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்;
வீரமங்கை வேலு நாச்சியார், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், சுய சிந்தனையாளர் தந்தை பெரியார், அரசியல் மேடைகளில் தென்றலை தமிழவிட்ட பேரறிஞர் அண்ணா என்றெல்லாம் 10- 15 தலைவர்களின் உருவங்களை தான் பேசும் கூட்டங்களில் வைக்கப்படும் பதாகைகளில் இடம்பெற ச் செய்யும் விஜய்க்கு தனக்கென்று என்ன கொள்கை இருக்கிறது? சிந்தனை இருக்கிறது என்பதைப் பற்றி இதுவரை பிற்போக்குத்தனம் அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்;
விஜய் கலந்து கொள்ளும் கூடங்களில் கூட்டங்களில் அவரின் ரசிகர்கள் மரங்களிலும் மின்சார கோபுரங்களிலும் வீடுகளின் மொட்டை மாடியிலும் ஜெனரேட்டர் எந்திரங்களின் கூரைகளிலும் ஏறுவதையும் தாவுவதையும் இதுவரை கண்டிக்காத விஜய்யை அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
வீதியில் இறங்கி அரசியல் செய்வதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவலைக் கட்டமைத்து பிரச்சாரம் செய்யும் ரசிகப்பட்டாளத்தை விஜய் கொண்டிருப்பதால் அன்வாருக்கு பிடிக்கிறது போலும்;
கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகின்ற விஜய் திரைத்துறையில் பணியாற்றுகின்ற ஆயிரக்கணக்கான நலிந்த தொழிலாளர்களின் நலம் பற்றி சிறு துரும்பைக் கூட கிள்ளி போடாததால் நடிகர் விஜய்யை அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
போக்கிரி, கத்தி, துப்பாக்கி, பிகில் என்றெல்லாம் நேர்மறையான பொருளைக் கொண்டிருக்கும் சொல்லையும் பொருளே இல்லாத சொல்லையும் தான் நடித்த திரைப்படங்களுக்கு சூட்டி, இளைஞர்களை வசப்படுத்தும் விஜய்யை அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்;
சொகுசு வாழ்க்கையை வாழ்கின்ற விஜய், தான் வாங்குகின்ற வெளிநாட்டு வாகனங்களுக்கு வரி செலுத்த மறுத்த போக்கு அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
தமிழ்நாட்டில் பொதுவாக இந்தியாவில் நாடாளுமன்ற- சட்டமன்ற தொகுதிகளில் பட்டியல் இன மக்கள் மட்டும் போட்டியிடுவதற்காக சில தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பட்டியலின மக்கள் மட்டும்தான் போட்டியிட முடியும். அதனால் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த பிரிவினரை மட்டுமே தேர்தல் களத்தில் இறக்கும்; இதற்கு, 1950 ஜனவரி 26-ஆம் நாள் முதல் நடைமுறையில் இருக்கும் இந்திய அரசியல் சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது; இந்த நிலையில் அப்படிப்பட்ட தொகுதிகள் அல்லாமல் பொதுத் தொகுதிகளில் பட்டிலின மக்கள் 26 பேரை நிறுத்தி அத்தனை தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெற்றிபெற வைத்ததாக விஜய்யின் கமுக்க சமூக ஊடக பிரிவினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில் ஒரே ஒருவரைக் கூட அவர்கள் அவ்வாறு வெற்றி பெற செய்யவில்லை. ஆனாலும் பொய்யாக பிரச்சாரம் செய்து அப்பாவி மக்களை நம்ப வைக்கும் தரப்பினரை ரகசியமாக இயக்கும் விஜய்யை அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
தமிழர்களை இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட பிராமணியத்தை எதிர்ப்பதுதான் திராவிட கொள்கை; அத்தகைய கொள்கைக்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டில் இரு பிராமணர்களை தன்னுடைய அமைச்சரவையில் விஜய் சேர்த்துக் கொண்டிருப்பது ஒருவேளை மலேசிய பிரதமருக்கு பிடித்திருக்கலாம்.
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிராகவும் மனித உரிமைக்கு மாறாகவும் செயல்படுகின்ற பாஜகவிற்கு எதிராக கள்ள மௌனம் காப்பதால் விஜய்யை அன்வாருக்கு பிடித்திருக்கலாம்;
எடுத்த எடுப்பிலேயே பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்குவதற்காக ‘கட்டில் கலாச்சாரத்’துடன் குதிரைபேர அரசியல் நடத்துவதால் விஜய்யை அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக அரச நிகழ்ச்சியில் தமிழ் வணக்கப் பாடலை சிறுமைப் படுத்துவதன் மூலம் தமிழினத்தையும் சிறுமைப்படுத்தும் விஜய்யின் போக்கு அன்வாருக்குப் பிடித்திருக்கலாம்;
விஜய்க்கும் அன்வாருக்கும் காலம் தக்க பதிலை உரிய நேரத்தில் சொல்லும்!


