
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் சாதனை வெற்றிபெற்றார் டோனால்ட் டிரம்ப்; 2016-2020இல் அதிபராக இருந்து, இரண்டாவது தவணைக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோற்று, மீண்டும் அதற்கடுத்த தேர்தலில் வென்ற அதிபர் என்ற பெருமை டோனால்ட் டிரம்பிற்கு மட்டும் உரியது; பென்சில்வேனியா பல்கலைக்கழக பொருளாதார பட்டதாரியான இவருக்கு, இரண்டு முறையும் பெண்களை வென்றவர் என்னும் இன்னொரு சிறப்பும் உண்டு.
இன்றைய பதவியேற்பிற்கான அதிகாரப்படியான நிகழ்ச்சிகள் நேற்றேத் தொடங்கி விட்டன. நேற்றைய நிகழ்ச்சியில் அமைச்சரவை வேட்பாளர்கள் உட்பட ஏறக்குறைய 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இடம்பெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டார்.
டொனால்ட் டிரம்பின் இன்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மிட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க், அமெரிக்காவின் மேநாள் அதிபர்களான ஜோ பைடன், பில் கிளின்டன், ஜார்ஜ் டபுள்யு புஷ், பராக் ஒபாமா, அதிபர் தேர்தலில் களம்கண்டு வெற்றிவாய்பை இழந்த பெண்களான ஹிளாரி கிளின்டன், கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

அதிரடி நடவடிக்கைக்குப் பெயர்பெற்ற டொனால்ட் டிரம்ப், தமிழர்களின் பண்பாட்டை ஒருகட்டத்தில் பெரிதும் புகழ்ந்தார். அமெரிக்கர்களுக்கு, கை குலுக்குதல் அடையாள பாரம்பரிய வழக்கமாகும். கொரோனா காலத்தில் இது முடியாதபோது, தமிழர்களின் பண்பாடான கைகூப்பி வணங்கும் முறையைப் பின்பற்றி தப்பித்துக் கொண்டதாக அப்போது தெரிவித்தார் டிரம்ப்.
நிக்சனைப்போல இனவாத அரசியலில் பெருவிருப்பு கொண்டிருக்கும் டிரம்ப், மீண்டும் அதிபராவது, உலக அரசியலிலும் பன்னாட்டு வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலே இனவாதியராகத்தான் இருப்பர் போலும்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில், தற்பொழுது எந்த மாற்றமும் நிகழாது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டிரம்பின் வர்த்தகக் கொள்கை ஐரோப்பாவுக்கு கடினமாக இருக்கலாம் என்ற ஐயம் நிலவுகிறது.
பொதுவாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, அவரின் வெளியுறவுக் கொள்கை குறித்து உலகம் முழுவதும் விவாதம் இடம்பெறுகிறது. குறிப்பாக, தெற்காசியாவை டிரம்ப் எவ்வாறு கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, ஆசியானுக்கு தலைமையேற்றுள்ள மலேசியாவிற்கு அதிகமாக உண்டு.
இதில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரைவிட வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு அதிக பரபரப்பு இருப்பதாகத் தெரிகிறது.
மத்திய கிழக்கு மண்டலத்தில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் டிரம்ப் உடனடியாக மூக்கை நுழைக்கமாட்டார் என்று எதிர்பார்க்கலாம்; இரசாயன வெடிகுண்டுகளை சேமித்து வைத்திருக்கிறார் என்று அபாண்டமாக பழிசுமத்தி சதாம் உசேனை ஈராக்கிய அரசியலில் இருந்தும் இந்த உலகத்தில் இருந்தும் அமெரிக்கா எப்போது அகற்றியதோ, அதிலிருந்தே மத்திய கிழக்கு மண்டலம் குறித்த நெருடல் அமெரிக்காவிற்கு அகன்றுவிட்டது; ஆனாலும், ஈரான்தான் இன்னமும் அமெரிக்காவின் கண்ணையும் கருத்தையும் உருத்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வும் டிரம்பிற்கு உச்சத்தில் இருக்கிறது.
போதாக்குறைக்கு, ஈரானும் ரஷ்யாவும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் உட்பட 20 ஆண்டுகளுக்கான அரசதந்திர கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலைகண்டு, அமெரிக்கா ஏகமாக பொறுமிக் கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய-யுக்ரேனியப் போர் ஆண்டுக் கணக்கில் தொடரும் நிலையில், ரஷ்யாவிற்கு கடிவாளம் போட நினைக்கும் அமெரிக்காவின் எண்ணத்திற்கு மாறாக குறுக்கே வந்து நிற்கிறது ஈரான்; ஏற்கெனவே, வடகொரியா ரஷ்யாவின் போர்முனைக்கு உதவி வருகிறது. அதனால், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோரை வைத்தக்கண் வாங்காமல் உற்றுநோக்கி வருகிறது அமெரிக்கா.
சிரியாவில் இராணுவக் கிளர்ச்சிக்குப்பின் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், இந்தப் புதிய அரசின் தன்மை-போக்குகுறித்து சிரியா மக்களுக்கே இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில், அமெரிக்கா சற்று விலகியே நிற்கிறது.
ஆசிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வர்த்தகப் பங்காளியான இந்தியாவைப் பற்றி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் எவராக இருந்தாலும், ஒருவித அலட்சியப் போக்கினையேக் கொண்டிருப்பர். ஏறக்குறைய டிரம்பும் அப்படித்தான்; பிரதமர் மோடியை நண்பர் என்று அடிக்கடி கூறிகொண்டாலும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் இந்தியாவை உரசிப் பார்ப்பதில் டிரம்பிற்கு தனி ஆர்வம் உண்டு.

எது எவ்வாறாக இருந்தாலும் அமெரிக்க ஒன்றியத்திற்கும் அமெரிக்க மக்களுக்கும் இன்றைய நாள், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
இந்த நிலையில், அமெரிக்கப் பெண்கள் போராட்டத்தில் குதித்திருப்பது, டோனால்ட் டிரம்பை சற்று பதற்றப்பட வைத்திருக்கிறது. ஜனவரி 18-ஆம் நாள் வாஷிங்டன், நியூயோர்க், சியாட்டிலின் உள்ளிட்ட நகரங்களில் ‘தி பீப்பிள்ஸ் மார்ச்’ என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்ட பெண்கள், டோனால்ட் டிரம்பின் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறினர்.


