Monday, August 3, 2026

திருமாவளவனின் பசப்புமொழி!ஜோதிமணியின் வஞ்சகப் பேச்சு!! -மு.க. ஸ்டாலின் இனியும் ஏமாறக்கூடாது!!!

போக்கிரி முதல்வன், ‘பிகில்’ ஜனநாயகன்(?), தற்குறி கோடம்பாக்கன் விஜய்க்கு பத்திரிகையாளர்களை சந்திப்பது என்றாலே தொடை நடுங்குகிறது; பின்னங்கால் பிடறியில் படும்படி ஓட்டமெடுத்து விமானத்தில் ஏறி பதுங்கும்படி ஆகிறது; ஆனாலும் நடைமுறையில் இந்த அளவிற்கு ஆணவமும் அகம்பாவமும் துளிர்விடுகிறதென்றால், அதற்கு மோடி, அமித் ஷா, முசோலினி தன்மை கொண்ட ராகுல், பதவி வேட்கைகொண்ட தொல்.திருமாவளவன் ஆகியோருடன் திராவிட சித்தாந்தத்தை எதிர்க்கும் அல்லது ஆர்.எஸ்.எஸ். தன்மைகொண்ட கரூர் எம்.பி. சோதிமணி, சின்னத்தம்பி விஜய் பிரபாகரகனிடம் மண்டியிட்டு எழுந்து.., மீண்டும் மண்டியிட்டு எழுந்து, மீண்டும் விழிபிதுங்க மண்டியிட்டு கடைசியில் ஒடுங்கி எழுந்துநின்ற மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியில் குடிபுகுந்துள்ள பச்சையான ஆர்.எஸ்.எஸ். சனாதனவாதி பிரவீன் சக்கரவர்த்தி, கோவாவின் கிரீஷ் சோடங்கர், பாண்டிய தேசத்தினருக்கும் சோழ நாட்டினருக்கும் எதிராக நம்பூதிரி பார்ப்பனர்களால் ஏவிவிடப்பட்ட தமிழ்க் குலத்தின் இன்னொரு பிரிவினரான அன்றைய சேர நாட்டைச் சேர்ந்த கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரின் ஒருமுக கமுக்க அரவணைப்புதான், விஜய்யை இந்த அளவிற்கு மஞ்சள் குளிக்க வைக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டவர்களுடன் நிர்மலா சீத்தாராமன், வைகோ, திருச்சி வேலுசாமி போன்றோரின் முகபாவனை ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். இவர்கள், சீறுவதைவிட, சிரிக்கும்பொழுது இன்னும் கொடுமையாக இருக்கும். உள்ளத்தே ஒளிந்திருக்கும் வஞ்சகமும் சூதும் தலைவிரித்தாடுவதை பளிச்செனக் காணலாம்.

2010-ஆம் ஆண்டென நினைவு; உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 10-ஆவது உலக மாநாடு ஜூலை 20, 21, 22 என மூன்று நாட்களுக்கு கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொள்ளவந்த தொல். திருமாவளவனுடன் மலேசிய நண்பன் நாளிதழ் அலுவலகத்தில், வருகையாளர்-சிறப்பு பிரமுகர் போன்றோரை செவ்வி காண்பதற்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தனி அறையில் ஏறக்குறைய 20-நிமிட அளவிற்கு உரையாடி இருக்கிறேன்.

அன்றைய திருமாவளவன் சிந்தாமல் சிதறாமல் அப்படியேத் தொடர்கிறார் இன்றளவும்!

பட்டியலின மக்கள் பிறப்பதற்கு பிரம்மாவின் உடம்பில் இடமில்லை; ஆம்; பிராமணர்கள் தங்களின் உயர் சாதி மேலாதிக்கத்திற்கு, அதாவது சனாதனத்திற்கு வழிகோலும் வகையில் புனையப்பட்ட நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தின் 153-ஆவது பாடலில் பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் பிராமணர்கள் என்றும் அவனின் தோளில் சத்திரிய(மன்னர்) மரபினர் தோன்றியதாகவும் பிரம்மாவின் தொடையில் வைசியர் (சிலப்பதிகாரத்து கோவலன் குடும்பத்தினர் போன்றோர்-இன்றைய நகரத்தார் போன்ற வணிகக் குடியினர் பிறந்தனர் என்றும் கொல்லர், மறவர், ஆசாரி உள்ளிட்ட கைவினைஞ குலத்தோர், ‘சங்கரனார்க்கு ஏதுகுலம்?’ என்று பரமனிடம் சாதி சண்டையிட்ட நக்கீரன் போன்றோர் உதித்திட்ட இடைச்சாதியினர் உள்ளிட்ட தரப்பினர் பிரம்மனின் பாதத்தில் பிறந்ததாகவும் தீண்டத்தகாதவர்கள்-காணக்கூடாதவர்கள் போன்றோர் பிறக்க பிரம்மாவின் உடலில் இடமே இல்லையெனவும் அந்தப் பாடல் தெளிவாக வரையறை செய்துள்ளது;

இந்த நிலையில், காந்தி அடிகள், அந்த சீர்மரபு மக்களுக்கு அரிஜன் என பெயர் சூட்டினார்; திராவிட இயக்கம் அவர்களுக்கு தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் ஆதி திராவிடர் என்றும் பெயர்சூட்டி, தற்பொழுது பட்டியலின மக்கள் எனவும் சீர்மரபினர் எனவும் பாங்குடன் அழைக்கிறது.

இந்த வேறுபாடெல்லாம் மறைந்து, தமிழினத்தின் தலைநிலத்தில் வாழ்வோரெல்லாம் தமிழர் என்னும் ஒற்றை அடையாளத்தில் அழைக்கப் படுவது எந்நாளெனத் தெரியவில்லை; அதற்காக ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், பாமக தலைவர் மருத்துவர் ச.இராமதாசோ அவர்களுக்கு தலித் என புதிய பெயர் சூட்டி, இந்த வேறுபாட்டை நிலைக்கச் செய்வது என்ன நியாயம் எனக் கேட்டதற்கு திருமாவளவனிடம் பதில் இல்லை;

இந்த மலையகத்திலும் ஒரு புரட்சித் தலைவர் இருந்தார்; தமிழகத்தின் புரட்சித் தலைவருக்கு அடையாளம் இரட்டை இலை என்றால், இங்கு வாழ்ந்த புரட்சித் தலைவரின் அடையாளம் மூவிலை; அந்தமட்டில் சிந்தனை தரைதட்டி நின்றதால்தான், அவரின் அரசியல் படைக்களமாக ‘தலித்’ என்னும் சொல் பேரளவில் பறைசாற்றப்பட்டது;

ஜப்பான்வரை சென்று தலித் மாநாடு நடத்தவும் முடிந்தது. இதனால்தான், உத்திரப் பிரதேசத்தில் கன்சி ராம் என்ற தலைவர் இறந்தபொழுது, கோலாலம்பூரில் வெளிவந்த New Straits Times நாளேடு, அவரை வட இந்திய தலித் தலைவர் என்று குறிப்பிட்டது.

இவற்றுக்கும் மேலாக, எழுத்தாளர் என்ற போர்வையை போர்த்திக்கொண்ட சில மண்டை வறண்டதுகள், தலித் இலக்கியம் என்ற பெயரில் பம்மாத்து புரிந்தன; தலித் இலக்கியம் என்றால், அதில் வியர்வை வீச்சம் அடிக்கும்; இரத்தக் கவிச்சை மூக்கைத் தொற்றும்; புழுதி படிந்திருக்கும் என்றெல்லாம் போக்கிரித்தனம் புரிந்தன.

பாட்டாளித் தமிழர் எவர் என்றாலும் சாதி-மதம் கடந்து அனைவருக்கும் வியர்க்கும்; காயம்பட்டால் உடலில் இரத்தம் வெளியேறும்தான்;

திருமாவளவனைப் பொறுத்தவரை கக்கனும் சத்தியவாணி முத்துவும் அமைச்சராக இருந்தது பொருட்டல்ல; சிதம்பரத்து இளையபெருமாள் தலைவராக இருந்ததும் பெரிதல்ல; ஒட்டப்பிடாரத்து டாக்டர் கிருஷ்ணசாமி தலைவராக இருப்பதும் ஒன்றுமில்லை; வரதராசன் என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கலைஞர் நியமித்ததும் ஏதுமில்லை; அவரின் வழித்தோன்றல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மைவரை கயல்விழி அமைச்சராக இருந்ததும் சிறிதே; தொல்.திருமாவளவன் அதிகார நாற்காலி-யில் ஒட்டிக் கொண்டால்தான், பட்டியலின மக்கள் மீட்சி பெற்றதாக பொருட் படும்; அதுதான் பெரிதென்பது திருமாவளவனின் அகராதியில் எழுதப்படாத நியதி.

திருமாவளவனின் ஒட்டுமொத்த கட்டமைப்பு இதுதான்;

கொள்ளியை இழுத்தால் கொதி அடங்கிவிடும் என்பதால், மு.க. ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து அகற்றிவிட்டால், திராவிட முழக்கம் ஓய்ந்துவிடும் என்று திட்டமிட்ட சனாதன தரப்பு, அதற்காக தேர்தல் ஆணையத்தை வகையாகப் பயன்படுத்தியது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் பல பத்தாயிர வாக்குகளை அகற்றி, தற்குறிக்கூட்ட நாயகன் விஜய், அலுங்காமல் குலுங்காமல் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்லும் வண்ணம் சிவப்புக் கம்பள பாதைக்கு வழிவகுத்தது.

அவர் விரும்பிய ஊதல் சின்னம் தடையின்றி கிடைத்தது; புது டில்லி அரசின் உயர்மட்ட பாதுகாப்பு வளையம் அமைத்து கொடுக்கப்பட்டது;

பாஜக ஆட்சி மேற்கொண்ட இந்த சூட்சுமம், ராகுலுக்கும் திருமாவளவனுக்கும் எப்படி தெரியவந்தது?

செத்தப் பாம்பைக்கூட மிதிக்க அஞ்சும் சோனிக்கூட்டம்; அதுவும் சொற்பக் கூட்டமாக இருக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கூடாரத்திற்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா எம்பி(இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்) என்றெல்லாம் அள்ளிக் கொடுத்த திமுக-வை, ‘தீய சக்தி’ என்று தமிழ் நாட்டு இளையோர் நெஞ்சங்களில் நஞ்சை தொடர்ந்து பீய்ச்சிவரும் விஜய் சொன்னதைக் கேட்டு, ராகுலும் திமுகவால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற திருமாவளவனும் எதிர்வினை ஆற்றாதது ஏன்?

ஸ்டாலினை பதவியிலிருந்து அகற்றுவதற்காக விரிக்கப்பட்ட ஜனநாயக சதியில் மோடி-ராகுல்-திருமாவளவன் ஆகியோர் ஒரு புள்ளியில் சங்கமித்தனர் என்பதுதான் உண்மை; நினைத்த காரியம் நிறைவேறிவிட்ட நிலையில், குருமூர்த்தி உள்ளிட்ட தரப்பினர் உள்ளுக்குள் மௌனமும் மகிழ்ச்சியுமாக அமைதி காத்து வருகின்றன.

இதுவொருபுறம் இருக்க, இதுகளின் அம்பான விஜய், திமுக-வை தீய சக்தி என்றது என்ன நியாயம்? என்ன தருமம்?

இவ்வசை, கொடுமை அல்லவா? அக்கிரமம் அல்லவா?

ஏம்ஜிஆரும் ஜெயலலிதாவும்கூட இப்படி கடும் விமர்சனம் செய்ததில்லை; இருவருமே தனிப்பட்ட முறையில் கலைஞரைத்தான் “கருணாநிதி தீய சக்தி” என்றனர்.

தமிழ் நாட்டின் காவல் படை, தொண்டூழிய இயக்கம், எல்லார்க்கும் எல்லாமும் என்னும் சிந்தனையுடன் இயங்கும் சமூக நீதி சேவை இயக்கத்தைப் பார்த்து, வருமான வரி கட்டாமல் கோடிக்கணக்கான தொகையை ஏய்த்துவரும் ஓர் ஏமாற்றுப்பேர்வழியா ‘தீய சக்தி’ என்பது?

திரையில் நல்லத்தனமாக நடித்துவிட்டு, வாங்கும் ஊதியத்தில் கள்ளத்தனம் புரியும் விதமாக கோடிக்கணக்கான தொகையை கருப்புப் பணமாகப் பெறுகின்ற கோடம்பாக்க மனிதன், திமுக-வை தீய சக்தி எனலாமா?

வாங்கிய ஆடம்பர வெளிநாட்டு வாகனத்திற்கு உரிய சுங்க வரியைக்கூட செலுத்தாமல் ஏமாற்றிய விஜய், அரசுக்கு துரோகம் இழைத்த விஜய், திமுக-வை தீய சக்தி என்றது, பச்சையான சகதித்தனம்.

திமுக ஆட்சியில் நிறைகளைப் போல குறைகளும் இருந்திருக்கலாம்; இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் எந்த மனிதனும், திமுகவை தீய சக்தி எனமாட்டான்; அப்படி தீய சக்தி என்னும் எதுவும் சகதி சக்திதான்.

தமிழ் நிலத்தை ஆளவும் மக்கள் நலம் பேணவும் நிருவாக வாய்ப்பு அளித்தால், முதல்வர் இருக்கையில் இருந்து துண்டை அகற்றுவது; சாப்பாட்டு டப்பாவைக் கொண்டு வருவது போன்ற சில்லறைக் காட்சிகளை காட்டும் கோடம்பாக்கத்து புத்தி இன்னும் மாறாத விஜய், தன் இரசிகக் கூட்டம், ‘தற்குறிக்கூட்டம்’ என்று விமர்சிக்கப்படுவதற்கு திருச்சியில் பொங்கினார்.

மரத்திலும் மட்டையிலும் ஏறுவது, ஊரார் வீட்டு மொட்டை மாடியில் தொற்றுவது, ஆபத்தென தெரிந்தும் மின்மாற்றியில் ஏறி அமர்வது, ‘டி.சி.’ மின்சார ஜெனரேட்டர் இயந்திர கொட்டகையையும் விட்டு வைக்காதது என கூட்டந்தோறும் தாவும் குரங்குக் கூட்டத்தைப் போன்ற தன் ரசிக வட்டத்தை இதுவரை ஒருமுறைகூட விஜய் கண்டித்ததில்லை; காரணம், விஜய்யே ஒரு தற்குறிதான்.

இல்லாவிட்டால், முதல்வர் என்னும் மாண்புக்குரிய பதவியை வகிக்கும் நிலையிலும் “வாயில நல்லா வந்துடும்” என பேட்டை போக்கிரியைப் போல பேச மனம் வருமா என்ன? நல்லத்தனமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்தால்தானே நல்லத்தனமும் வாய்க்கும்.

மக்களுக்கான தண்ணீர் விநியோகம், மின் விநியோகம் சீராக இல்லாததால் மக்கள் படும் அவதி தொடர்கிறது; மாநிலமெங்கும் பெண்களின் கற்பு சூரையாடப்படுகிறது; கொலையும் தொடர்கிறது நாளும்; இவற்றுக்கெல்லாம் தீர்வு கேட்டால், முடிந்துபோன திமுக ஆட்சியை ப்ழிப்பதும் பழிசொல்வதும் பச்சையான போக்கிரித்தனம்; கையாளாகாத்தனம்;

இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்களை கட்சிமாற வைப்பதும் குதிரைபேரம் நடத்துவதும் அரசியல் போக்கிரித்தனம்; இது, குதிரை பேரம் அல்ல; குதிரைவேக அரசியல் என்பது அதைவிட வீச்சரிவாள்போக்கு; திமுக ஆதரவால் வென்றவர்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, திமுகவையேத் திட்டுவதும் சாடுவதும் அரசியல் கயமைத்தனம். அதைவிட, ஆட்சிக்கு வருமுன்பே, அமமுக-வின் ஒரேவொரு சட்டமன்ற உறுப்பினரை விலைபேசியது அரசியல் போக்கிரித்தனத்தின் உச்சம்.

தொழில்வளத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை மன்னார்குடி தொகுதியில் தோற்கடித்தவர் தினகரனின் அமமுக-வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொட்ர்பில் தொடக்கத்தில் துள்ளிக் குதித்த தினகரன், பின்னர், அடங்கிப் போனார். அதுவும், ஒரு ஊழல் பெருச்சாளிதான.

மே 04-ஆம் நாள், தந்தி தொலைக்காட்சியில் ஆனந்தக் கண்ணீர்விட்ட சந்திரசேகர், சோகக் கண்ணீரையும் துயரக் கண்ணீரியயும் விடவேண்டிய சூழலை விஜய்யே ஏற்படுத்துவார்;

காரணம், காலத்தால் திருந்துவோர் ஒருசிலரே; வெகுபலர் தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை தொடரும் நிலையில் இருப்பர்;

ஆசை ஆசையாக பதவி நாற்காலியில் தான் அமராவிட்டாலும், தனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்த திருமாவளவனின் மகிழ்ச்சி, ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை;

விஜய்யின் சீர்கெட்ட நிருவாகத்தால் தானும் தன் தொண்டர் கூட்டத்தாரும் விரைவில் அம்பலப்பட்டுவிடுவோமோ என்று தற்பொழுது அன்றாடம் அஞ்சுதலுக்கு ஆளாகிவரும் திருமாவளவன், இந்த மேடை நீடிக்காது என்பதால், பழைய மேடையான திமுக-விடமும் துண்டுபோட்டு வைப்போமே என்ற எண்ணத்தில்தான் நேற்றைய முன்தினம் ஜூன் 08-ஆம் நடைபெற்ற இந்தியக் கூட்டணிக் கூட்டத்தில் திமுக-விற்கு ஆதரவாகவும் தன் வழிகாட்டி ராகுலுக்கு எதிராகவும் பேசி ஒரு நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றி இருக்கிறார்.

திமுக தலைவர் இனி ஒருபோதும் திருமாவளவனை கடுகளவும் நம்பக்கூடாது;

நடிகர் விஜய், தவெக-வை(தற்குறி வெட்டிக் கலகத்தினர்) தொடங்கியபோது, பாஜக-வின் கள்ளப் பிள்ளை என்று திருமாவளவன் விமர்சித்தது நூற்றுக்கு நூறு உண்மை.

ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது, எம்பி-ஆக இருக்கும் இவர், காட்டுமன்னார் தனித் தொகுதியில் போட்டியிட விரும்பினார்; அதற்கு அவர் சொன்ன காரணம், தேர்தல் முடிவுக்குப் பின், தமிழ் நாட்டின் அரசியல் போக்கும் களமும் மாறும் என்று தெரிவித்திருந்தார்.

திமுக ஆட்சியை இழக்கப்போவதை திருமாவளவன் முன்கூட்டியே அறிந்தது எப்படி? அதற்கு ஏற்ப இவரின் கட்சியினரும் ராகுலின் வஞ்சகக் கூட்டமும் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல; தத்தம் கட்சியினரின் வெற்றிக்குக்கூட பாடாற்றாமல் ஒதுங்கிக் கொண்டதும் எப்படி?

மு.க.ஸ்டாலினின் தோல்வியை பாஜக-வைவிட உள்ளுக்குள் கொண்டாடித் தீர்த்தவர்கள் ராகுல், திருமாவளவன், வைகோ, குறிப்பாக சண்முகம்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தன் பெயரை, சனாதன ஒட்டுக் கட்சி என மாற்றிக் கொள்ளலாம்.

அந்த நாள் முதல் இந்த நாள்வரை, பி.இராமமூர்த்தி முதல் ஜி.ராமகிருட்டிணன் வரை, தற்போதைய சண்முகம் ஈறாக தமிழியத்திற்கு எதிரானவர்கள் என்பதை மு.க. ஸ்டாலின் இனியாவது உணர்ந்து, மார்க்சிய போலிக் கூட்டம் அறிவாலயப் பக்கம் அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

விஜய் ஆட்சி அமைத்தால் என்ன? அமைக்காவிட்டால்தான் என்ன? ஆளுநர் ஆட்சி வந்தால் என்ன? போனால்தான் என்ன? மொத்தத்தில் எல்லாமும் பாஜக ஆட்சிதானே. அதைப்பற்றி அக்கறைப்பட்டிருக்க வேண்டியது, சனாதனத்தின் நாக்பூரின் தலைமை.

இன்னொரு கூட்டணியில் இருந்த வீரபாண்டியன், சண்முகம், காதர் மொய்தீன், திருமாவளவன் போன்றோர் ‘ஊரில் கலியாணம் என்றாம் மாரில் சந்தனம்’ என அலைந்ததேன்.

விஜய்க்கு முட்டுகொடுத்து, தவெக ஆட்சி அமையாவிட்டால் ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்று சொன்னது ‘அரசியல் முழு தற்குறித்தனம்’ அல்லது, அமைச்சர் பதவிமோககம் என்பதைத் தவிர, வேறென்னவாக இருக்கும்.

ஒரு வழியாக, விஜய் முதல்வராக பதவியேற்குமுன், சொகுசு இருக்கைகள் பரிமாறப்பட்டதேன்.

புது டில்லி இந்தியக் கூட்டணிக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன, காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருக்கிறது பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த திருமாவளவன், இந்தக் கூட்டத்தில் திமுகவைக் குறிப்பிட்டு பேசியது பெரிதும் கவனத்தைப் பெற்றது. உண்மையில், இது நாடகம் என்பதை விவரம் அறிந்தோர் அறிவர்;

”அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்” என இக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதைக் கண்டு, திமுக தலைமை மசியக்கூடாது.

அதைப்போல தமிழக காங்கிரஸ் கட்சியிலும் குறிப்பிட்ட சாரார், ராகுலின் போக்கை ஏற்கவில்லை. விஜய் நிருவாகத்திலும் நிறைவடைய வில்லை. இதை அவதானித்த சோதிமணி, நாட்டின் நலம் கருதி, திமுக, இந்தியக் கூட்டணியில் தொடர வேண்டும் என்று பசப்பி இருக்கிறார்.

ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, வங்கதேசம், தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மண்டலக் கட்சியை ராகுல் சிதைத்தபோது, நாட்டு நலன் குறித்த புத்தி எங்கே போனது என்பதற்கு சோதிமணியிடம் பதில் இருக்காது.

காலமென்னும் நல்லாள், அனைத்தையும் அவதானித்து வருகிறாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை