Monday, April 20, 2026

மலேசிய திராவிடர் கழகத்தின் 13ஆவது தலைவர் மானமிகு ச.த. அண்ணாமலை காலமானார்

கழகத்தின் மேனாள் தேசிய தலைவர் மானமிகு இரெ. சு. முத்தையா இரங்கல்

மலேசியத் தமிழ் சமுதாயத்தில் பகுத்தறிவு பாத்தி எழுப்பி அதில் சுயமரியாதை சிந்தனைகளை விதைத்து வரும் மலேசிய திராவிடர் கழகத்தின் 13ஆவது தேசியத் தலைவர் மானமிகு டத்தோ ச. த. அண்ணாமலை காலமானார்.

இளமைக்காலம் முதல் பெரியாரியல் சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இயக்கப் பணியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர் மானமிகு ச. த. அண்ணாமலை என்று மலேசிய திராவிடர் கழகத்திற்கு பத்தாவது தலைவராக பொறுப்பேற்று வழிநடத்திய மானமிகு இரெ. சு. முத்தையா அவர்கள் அண்ணாமலை மறைவையொட்டி தெரிவித்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

மலேசிய திராவிடர் கழகத்தில், கிளைச்செயலாளராக, தலைவராக, மாநிலச் செயலாளராக, மாநிலத் தலைவராக, தேசியத் உதவித் தலைவராக என்றெல்லாம் பொறுப்பு வகித்து நெடிய அனுபவம் பெற்றவர் திரு.ச.த. அண்ணாமலை.

அதன் பின்னர், கழகத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தவிர்க்க ச.த. அண்ணாமலை அவர்களை, இடைக்காலத் தேசியத்தலைவராக கழக மத்திய செயலவை ஒருமனதாக நியமித்தது. அதனைத் தொடர்ந்து, கழகத் தேசியப் பேராளர் மாநாட்டில் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரின் தொண்டறத்தைப் பாராட்டி பினாங்கு மாநில மேதகு ஆளுநர், மானமிகு. ச.த. அண்ணாமலைக்கு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பித்தார். இது கழகத்திற்கு கிடைத்த பெருமையாகும்

அந்நாளிலிருந்து, இதுவரை கழகப் பணியை நிறைவாக, திறம்பட செயலாற்றி வந்துள்ளார்.

கழகப்பணியில் ஆர்வத்தோடும். அக்கறையோடும் செயல்பட்டு வந்த ச. த. அண்ணாமலை, மறைந்த மேனாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி தேசிய தலைவராக பொறுப்பு வகித்த காலத்திலும் தொடர்ந்து தன்னுடைய தலைமைத்துவ காலம், அடுத்து மானமிகு பி.எஸ். மணியம், மானமிகு எப். கந்தராஜ் ஆகியோர் தலைமைவகித்த காலத்திலும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்.

அண்மைக் காலமாக அவர் உடல் நலம் குன்றிய வேளையிலும் அவர் தொடர்ந்து, கழக நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று முத்தையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்

அன்னாரின் மறைவு கழகத்திற்கும், குமுகாயத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். நம்முடைய காலத்தில் வாழ்ந்த கழகத்தலைவர் என்பதில் பெருமைக்கொள்வோம்.

அன்னாரை இழந்து பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரின் அன்புத் துணைவியார், பிள்ளைகள், திராவிடர் இயக்கத் தோழர்கள், தோழியருக்கும், குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர் என்ற நிலையிலும், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மதியுரைஞர் என்ற நிலையிலும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் மானமிகு முத்தையா(012-3965793) தெரிவித்துள்ளார்.

ச.த. அண்ணாமலை, 1946 டிசம்பர் 29ஆம் நாள் பிறந்தவர்; அண்மையில்தான் தன் 78வது பிறந்தநாளை கொண்டாடி 79 ஆவது வயதை எட்டியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை முன்னிரவு ஏழரை மணி அளவில் புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் அண்ணாமலை காலமானார். .

டத்தோ ச.த. அண்ணாமலையின் மண்ணுலக வாழ்வின் நிறைவுப் பயணம் நாளை 22-01-2025 புதன்கிழமை மதியம் 12:00 மணிக்கு மேல் மலேசியத் திராவிடர் கழகம், திராவிடர் கழக பினாங்கு மாநில கிளை, திராவிடர் கழக மாக் மண்டின் கிளை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் தொடங்கும்.

மத்திய செபராங் பிறை, புக்கிட் மெர்த்தாஜம், பிராப்பிட் மின் சுடலையில் மானமிகு ச.த. அண்ணாமலையின் நிறைவுப பயணம் முற்றுபெறும்

தொடர்புக்கு மகன் அ.குணசேகர் 010- 561 3904; பொன்.பொன்வாசகம் 012-358 6023 (கழகப் பொதுச் செயலர்); மு.நாராயணசாமி, 016-454 3394; செ.குணாளன் 0134853128.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை