
சூடிக் கொடுத்தவள் நான் தோழி;
சூட்டிக் கொண்டவளே நீ வாழி!
என்று தொடங்கும் பாடல்.. .
கடலும் வானும் உள்ளவரை தென்றல்
காற்று நடந்து செல்லும் வரை
கடலும் வானும் உள்ளவரை தென்றல்
காற்று நடந்து செல்லும் வரை
வளர்க உந்தன் பள்ளியறை – நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை
என்று முடியும்.
முன்னைத் தமிழர்கள் கடைப்பிடித்த கட்டுசிட்டான ஆன்மீக நெறி சமணம். அந்த சமணத்தை வீழ்த்துவதற்காக சைவ நெறியை தமிழர்கள்மீது திணித்தவர்கள் பிராமணர்கள். பின்னர் அந்த சைவத்தையும் நசுக்குவதற்காக வைணவ நெறியை திணிக்க முயன்ற ஆரியர்கள் இதன் தொடர்பில் ஏராளமான கதைகளை புனைந்தனர்.
அத்தகைய கதைகளில் ஒன்றுதான் இராம காவியம். அந்த நெடும் புனைகதையை கம்பராமாயணம் என்ற பெயரில் தமிழில் புனைந்தவர் கம்பர்.
இந்தக் கதை தமிழ் இனத்திற்கு கோடரிக் காம்பாக இருந்தாலும் அதன் தமிழ் சுவைக்காக ஒவ்வொரு தமிழரும் படிக்கலாம்;
தமிழிய மனம் கமழகமழ கம்பர் ராம கதையை தமிழில் இயற்றியுள்ளார். லட்சுமி என்னும் சமஸ்கிருத சொல்லிற்கு மாற்றாக தமிழில் இலக்குமி என்றும் இலட்சுமணனை இலக்குவன் என்றும் எழுதியிருப்பார் கம்பர்.
பேரறிஞர் அண்ணா கம்பராமாயணத்தை முற்றும் முழுதாக படித்து அதில் உள்ள தமிழ் சுவையை கடந்து அதில் வீசுகின்ற ஆபாச நெடியை காம தூக்கலை கம்பரசம் என்ற பெயரில் சிறு நூலாக வெளியிட்டார்.
அண்ணாவைப் போல கம்பராமாயணத்தை படிக்க முனைந்த கண்ணதாசன் ‘போனவன் போனாண்டி’ என்பதைப் போல சுயமரியாதை-பகுத்தறிவு எல்லையைக் கடந்து ஆன்மீகத்தில் முழுதாக மூழ்கி விட்டார்.
திருக்குறளையும் கண்ணதாசன் படித்தாலும் திருமுறை,
ஆண்டாள் பாசுரம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் மனதை பறிகொடுத்து அவ்வாறு தான் கற்ற கதைகளையும் வரிகளையும் தான் இயற்றிய திரைப்பட பாடல்களில் முடிந்தவரை பயன்படுத்தி இருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
அப்படித்தான், 1968-இல் வெளிவந்த
டீச்சரம்மா என்னும்
திரைப்படத்திற்காக சூடி கொடுத்தவள் நான் தோழி என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார்.
ஆண்டாள் நாச்சியாரின் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ வரலாற்றை மையமாக வைத்து, தியாக உணர்வோடு, தான் விரும்பிய காதலனை தோழிக்கு மாப்பிள்ளையாக்கி மணமுடித்து வைத்த நாயகியின் நிலையை நயமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில், பூமாலை துணை கொண்டு பாமாலை புனைந்த கவியரசர், ஒரு முக்கோண காதலை நளினமாக இந்தப் பாடலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தின் நாயகன் ஓர் ஓவியர். அவர் வரைந்த ஓவியங்களை பருவ இதழ்களில் கண்டு ஆர்வம் கொண்ட நாயகி அந்த ஓவிய நாயகனைப் பாராட்டி-வாழ்த்தி தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறாள்; உடன் இருக்கின்ற தோழிக்கு இதுவெல்லாம் நன்கு தெரியும்.
தன்னை வாழ்த்தி வரிசையாக மடல் அனுப்பும் அந்த ரசிகையை காண்பதற்காக அந்த ஓவிய நாயகன் ரசிகையின் இல்லம் தேடி சென்ற பொழுது அந்த ரசிகை அங்கே இல்லை; ரசிகையின் தோழிதான் இருக்கிறாள்.
இவள்தான் அவளென்று மாற்றி புரிந்து கொண்ட நாயகன் அவள் மீது மையல் கொள்கிறான்.
இதை அறிந்த தோழி கடைசியில் தன் தோழிக்கு அந்த நாயகனை மணம் முடித்து வைக்கிறாள்.
ஓவிய நாயகன் ஜெய்சங்கர்; அவரைப் பாராட்டி மடல் வரைந்தவர் அழுகை நாயகி விஜயகுமாரி; விஜயகுமாரியை காண வந்த ஜெய்சங்கரின் கண்ணில் பட்டது வாணிஸ்ரீ.
இவ்வாறு தான் புனைந்த ஒவ்வொரு பாடலிலும் ஏதாவதொரு கருவை செறுகியிருப்பார் கண்ணதாசன்.
வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவம் ஆன்மீக கதை வரலாறு உள்ளிட்ட அம்சங்களை பாடல்களில் நல்ல வண்ணமாக இலையோட செய்திருப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.
ஜூன் 24 ஆம் நாள் கவியரசு கண்ணதாசனுக்கு பிறந்தநாள்!


