
நல்லவேளை! கைரி ஜமாலுடினும் ஹிஷா-முடின் துன் உசேனும் புதிய கட்சிகளைத் தொடங்கவில்லை.
அரசியல் கட்சிகளின் தலைவராக இருப்ப-வர்கள் தங்களுக்கு எதிராகவோ அல்லது விமர்சித்தோ கருத்து தெரிவிப்பவர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் அவ்வாறு நீக்கப்படுபவர்கள் தங்களின் அரசியல் பயணத்திற்காக தனிக் கட்சி தொடங்குவதும் ஒரு வாடிக்கையாக்கிவிட்டநிலையில் இந்த இருவரும் அவ்வாறு செய்யவில்லை என்பது மலாய் அரசியல் தளத்தில் ஒரு நல்ல அம்சமாக பார்க்கப்படுகிறது
மலேசிய அரசியலில் ஒரு காலத்தில் மலாய் வாக்காளர்களின் அரசியல் தேர்வு மிகவும் எளிமையானதாக இருந்தது.
அம்னோ, பாஸ் மற்றும் பின்னர் மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) ஆகியவற்றுக்கிடையேதான் பெரும்பாலான மலாய் வாக்குகள் பகிரப்பட்டன.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அம்னோவில் இருந்து பிரிந்து உருவான பெர்சத்துக் கட்சி, கட்சித் தாவலை ஊக்குவித்து பிகேஆர்-மக்கள் நீதிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்து ஊதிப்பெருத்தது.
பின்னர், அதிலிருந்து பிறந்த பெஜுவாங், மூடா, தற்போது வவாசான் போன்ற புதிய அரசியல் அமைப்புகள், மலாய் அரசியல் களத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இத்தகைய போக்கிலிருந்துபாஸ் கட்சியும் தப்பிக்கவில்லை. பாஸ் கட்சியின் மிதவாதப் போக்கினர், அதிலிருந்து விலகி அமானாக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர்ன.
இத்தகைய அரசியல் போக்கு, ஜனநாயகத்தின் அடையாளமாகக் கருதப்படலாம். தவிர, வாக்காளர்களுக்கு அதிகமான தேர்வு வாய்ப்பு கிடைப்பது நல்ல அம்சமாக கருதப்படலாம்..
அதேநேரத்தில், இத்தகைய போக்கு ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது: மலாய் வாக்குகள் அதிகமாக சிதறத் தொடங்கியுள்ளனவா என்னும் கேள்விதான் அது.
ஒரு காலத்தில் அம்னோவுக்கு எதிராக ஒருங்கிணைந்த மாற்றுச் சக்தியாக உருவெடுத்த பெர்சத்து, இன்று கட்சிக்குள்-ளேயே அதிக சவால்களை எதிர்கொண்டு தடுமாறி நிற்கிறது.
கட்சியின் தலைவர் முகைடின் யாசினும் மூத்தத் தலைவர் ஹம்சா ஜைனுடிக்கும் இடையிலான நீண்டகால கருத்து வேறுபாடு-கள் வெளிப்படையாக பேசப்படும் நிலையை அடைந்தன.
இந்த நிலை முற்றி, ஹம்சா ஜைனுடினை கட்சியிலிருந்து வெளியேறும் அளவுக்கு உச்சத்தைத் தொட்டது.
ஹம்சா ஜைனுடினும் வவாசான் என்ற புதிய அரசியல் தளத்துடன் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கத் தொடங்கி யிருப்பது, பெர்சத்துவின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக பெர்சத்து உறுப்பினர்களில் ஒரு பகுதியும், பாஸ் கட்சியின் அரவணைப்பும் அவருக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
இதன் விளைவாக, பெர்சத்துக் கட்சி, மலாய் வாக்காளர்களின் பிரதான மாற்று அரசியல் சக்தி என்ற தனது நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மலேசிய அரசியல் வரலாறு காட்டுவது என்னவென்றால், ஒரு புதிய கட்சி உருவாகும் போது அது முதலில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கும். ஆனால் காலப்போக்கில் அதே கட்சிக்குள்ளும் தலைமைப் போட்டிகள், கொள்கை முரண்பாடு-கள் மற்றும் அதிகாரப் போட்டிகள் உருவாகின்றன.
அதன் விளைவாக மேலும் புதிய கட்சிகள் தோன்றுகின்றன. இந்நிலையில், மலாய் வாக்காளர்கள் பல்வேறு கட்சிகளுக்கு பிரிந்து செல்லும் சூழல் உருவாகலாம். அம்னோ, பாஸ், பெர்சத்து, பெஜுவாங், மூடா, வவாசான் மற்றும் பிற சிறிய கட்சிகள் என பல்வேறு அரசியல் அமைப்புகள் ஒரே வாக்காளர் அடித்தளத்தை நோக்கி போட்டியிடும்போது, எந்தக் கட்சியும் முழுமையான ஆதிக்கத்தைப் பெறுவது கடினமாகலாம்.
அதேநேரத்தில், மலாய் வாக்குகள் சிதறுவது நிச்சயமாக ஒரு கட்சியின் முடிவைக் குறிக்காது. மாறாக கூட்டணி அரசியலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கக்கூடும்.
15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நிலைமைகள், எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சியை அமைக்க முடியாத புதிய அரசியல் சூழலை வெளிப்படுத்தியுள்ளன.
இதனால், தேர்தலுக்குமுன் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகள் கூட, தேர்தலுக்குப் பிறகு, நிலையான ஆட்சி அரசியல் நிலைத்தன்மை என்பதன் அடிப்படையில் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது வாக்காளர்களிடையே குழப்பத்தையும் நம்பிக்கைச் சிக்கலையும் உருவாக்குகிறது.
எனவே, அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி மலாய் அரசியல் நகரும் இந்தக் காலகட்டத்-தில், ‘மலாய் வாக்குவங்கி சிதறுமா?’ என்பதைக் காட்டிலும் “மலாய் வாக்காளர்-களின் நம்பிக்கையை யார் யாரெல்லாம் ஒருங்கிணைக்கப் போகிறார்கள்?” என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
மொத்தத்தில், பெர்சத்து கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள இந்த நிலையில், நிலவும் பிணக்கையும் சிக்கலையும் சமாளித்து, தெளிவான அரசியல் திசையை முன்வைத்து, மலாய் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த முடியுமானால் அதன் அரசியல் செல்வாக்கு தொடரலாம். இல்லையெனில், மலேசிய அரசியலில் தோன்றி மறைந்த பல கட்சிகளின் பட்டியலில் பெர்சத்துவும் இணையும் அபாயத்தை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிறைவாக, மலேசியர்கள் விரும்புவது மேலும் பல கட்சிகளை அல்ல; நிலையான ஆட்சி, தெளிவான அரசியல் திசை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைமைத்-துவத்தையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


