
வலைப்பதிவர் வான் முகம்மது அஸ்ரிக்கு எதிராக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு, மலேசியா சர்வாதிகார ஆட்சிக் காலத்திற்கு அபாயத்தில் உள்ளது என்பதற்கான நினைவூட்டலாகும்;
அரசு நிறுவனங்கள் மாற்றுக்கருத்து கொண்டவர்களை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தடை உத்தரவின்மூலம் வெளிப்படும் மிகவும் கவலைக்குரிய அம்சம், பாப்பா கோமோ, சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள-தாகக் கூறப்படும் தடையாகும்.
இது, மலேசிய அரசியலமைப்பின்கீழ் உள்ள கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமையை மீறும் ஒரு அசாதாரணமான மற்றும் ஆழ்ந்த கவலைக்குரிய முன்னெடுப்பாகும்.
ஒரு குடிமகன் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடை செய்வது, சம்பந்தப் பட்டவர் ஜனநாயக முறையில் செயல்படு-வதைத் தடுக்கிறது
மலேசியத் தகவல் பல்லூடக ஆணையம்-MCMC எடுத்த நடவடிக்கைகள், ஒழுங்கு முறை அமலாக்கம் என்ற போர்வையில் அரசாங்கத்தின் விமர்சகர்களை அமைதி யாக்கவும், சட்டப்பூர்வமான அரசியல் எதிர்ப்பை அடக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட முயற்சியின் வெளிப்பாடா-கும்.
சமூகம் தற்போது கருத்துக்களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் அதேத் தளங்கள் மூலம் குடிமக்கள் தொடர்புகொள்வதிலிருந்து தடுக்கப்பட்டால், பேச்சு சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதம் அர்த்தமற்ற தாகிவிடும்.
எதிர்கால வெளியீடுகள் அவதூறான-வையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் அவற்றைத் தடுக்க முயற்சிப்பதும் அதே அளவு கவலையளிக்கிறது.
ஒரு கூற்று அவதூறானதா என்பது, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் சான்றுகளை முழுமையாக விசாரித்த பின்னரே நீதித் துறையால் இறுதியாக தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விசயமாகும்.
மலேசியாவில் ஏற்கெனவே அவதூறுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன; அவை, தங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக நம்பும் எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ உரிய பரிகாரத்தை அளிக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், அன்வார் இப்ராகிமே பல தசாப்தங்களாக இதுபோன்ற அரச அதிகாரப் பிரயோகங்களை எதிர்த்து வந்தார் என்பதுதான்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைப் பாதுகாப்பதற்காகவே பேச்சுரிமை உள்ளது.
ஒரு சர்வாதிகார அரசாங்கம் விமர்சனங்களை மௌனமாக்க முயல்கிறது.
அரசாங்க விமர்சகர்களை மௌனமாக்கு வதற்காக அரசு நிறுவனங்களையும் சட்ட செயல்முறைகளையும் ஆயுதமாக்குவது சர்வாதிகார ஆட்சிகளின் ஒரு முக்கிய அடையாளமாகும்.
மலேசியர்கள் இந்த அப்பட்டமான அதிகார அத்துமீறலை நிராகரிக்க வேண்டும்; இது ‘சீர்திருத்தத்தின்’ (Reformasi) உணர்வையும் சிந்தனையையும் முடக்குவதோடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு அபாயகரமான நகர்வையும் சுட்டி காட்டுகிறது.
-பொன் வேதமூர்த்தி


