
மலேசிய அச்சு ஊடகத்தில் முன்னிலை ஊடகமாக விளங்குகின்ற மலேசிய நண்பன் நாளிதழுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன் வேதமூர்த்தி கொடுத்த வழக்கில் இன்று அவர் வெற்றி பெற்றார்.
நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் ஸப்ரி யாக்கோப் 2021-22 காலக்கட்டத்தில் பொறுப்பு வகித்தார்.
அவர் பிரதமர் பொறுப்பை ஏற்ற சமயத்தில் கொரோனா பரவலும் அதன் தாக்கமும் உச்சத்தில் இருந்தது. அந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் கொரோனா தொற்று பரவலுக்கு எளிதாக வாய்ப்பு ஏற்படும் என்பதால் அந்த ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தைப்பூசத் திருநாளில் ஓன்றுகூட வேண்டாம் என்று மருத்துவ அடிப்படையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன் தொடர்பில் பிரதமர் இஸ்மாயிலுக்கு கடிதமும் எழுதி இருந்தார் மலேசிய முன்னேற்றக் கட்சி தலைவருமான பொன். வேதமூர்த்தி.
இதன் தொடர்பில் செய்தி வெளியிட்ட மலேசிய நண்பன் நாளிதழ், பொன் வேதமூர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகையான தைப்பூச திருவிழாவிற்கு வேட்டு வைக்கிறார் என்று செய்தி வெளியிட்டது.
தனக்கு அப்படிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை என்றும் மக்கள் நலம் கருதியும் மருத்துவ விழிப்புணர்வின் அடிப்படையிலும் தான் கருத்து தெரிவித்ததாகவும் ஆனால், மலேசிய நண்பன் நாளிதழ் தனக்கு எதிரான அவதூற்று செய்தியை வெளியிட்டதாகக் குறிப்பிட்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் பொன் வேதமூர்த்தி சார்பில் கார்த்திக் ஷாண் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேசன் சண்முகம் முன்னிலையாகி வந்தார்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 30 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நண்பன் செய்தியில் பொன் வேதமூர்த்திக்கு எதிரான அவதூற்று தன்மை இருப்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மலேசிய நண்பன் நாளிதழ் அவருக்கு 6 லட்சம் வெள்ளியை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அவிந்தர் சிங் தீர்ப்பளித்தார்.
கார்த்திக் ஷாண் நிறுவனத்தின் சார்பில் ஏ ஆர் தமயந்தி முன்னிலை ஆன நிலையில் மலேசிய நண்பன் நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் சி நடராஜன் முன்னிலையானார்.


