Monday, July 13, 2026

இந்து சமய மக்கள் எல்லாம் ஒன்று கூடுவோம்! இந்து சங்க தலைவரெல்லாம் மோதிக் கொள்ளுவோம்!!

மலேசிய இந்து சங்கத்தின் கட்டாய நிகழ்ச்சி நிரல், ஆண்டுக்கு ஒருமுறை முட்டி மோதிக் கொள்வது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அத்தியாயம் இப்பொழுது தொடங்கி விட்டது.

மலேசிய இந்து சங்கத்தின் ஒவ்வோர் ஆண்டுக் கூட்டத்தின் பொழுதும் போட்டியும் பொறாமையும் உச்சத்தைத் தொட்டு, ஆண்டுக் கூட்டத்திற்குப்பின் பிரிவினையும் பிணக்கும் தொடர்வதால் இந்த சமய அமைப்பு, சன்னம் சன்னமாக சிதைந்தும் நசிந்தும் வருகிறது.

நிறுவன சட்டத்தின்கீழ் இந்த சமய அமைப்பு பதிவு பெற்றிருந்தாலும் நிறுவன நடவடிக்கையோ அல்லது வர்த்தக முனைப்போ எதுவும் இல்லை.

அரச மானியத்தையும் தனியார் கொடையையும் நம்பித்தான் இந்து சங்கம் நகர்கிறது.

ஆனாலும் தலைமைப் பொறுப்பிற்காக ஏன் மோதிக் கொள்கின்றனர்?

பதவிப் பவிசும் ஏனைய அணுகூலமும்தான் அடிப்படைக் காரணம்!.

13 ஆண்டுகாலம் தலைவராக இருந்த மோகன் ஷான் என்னும் மோகன் சண்முகம் இப்பொழுது த. கணேசன் தலைமையின் கீழ், உதவித் தலைவராக செயல்பட வேண்டிய அவசியம் என்ன?

தற்பொழுது, மலேசிய இந்து சங்கத்தின் 49 ஆவது ஆண்டுக் கூட்டம், ஜூலைத் திங்கள் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, சன் வே அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற இருக்கிறது.

இதே ஆலயத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் இதே மோகன் சண்முகத்தை தோற்கடித்தவர் இதே த. கணேசன்தான்.

ஆனாலும், மோகன் ஷான் பதவி விலக மறுத்து சண்டித்தனம் செய்ததும் கணேசன் தரப்பும் மோகன் தரப்பும் மாறிமாறி இந்து சங்க தலைமையகத்தின் பூட்டை மாற்றி-யதையும் உடைத்ததையும் நாடு அறியும்; குறிப்பாக இந்து சமுதாயம் நன்கு அறியும்;

கடைசியில் இந்தச் சிக்கல் நீதிமன்றத்திற்குச் சென்றது.

அந்த நேரத்தில் கணேசனுடன் தோளுக்குத் தோள் நின்று துணை புரிந்த தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபுவை இப்பொழுது த. கணேசன், மோகன் ஷானுடன் கூட்டு சேர்ந்து எதிர்ப்பது எதற்காக?

எல்லாம் பதவிப் பவிசும் மற்ற அணுகூலமும்தான்!

இந்த 49-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் இந்து சங்க நிருவாகக் குழுவின் 9 பேர் 3ஆண்டு
தவணை முடிந்து பதவி விலகுவதால், புதிதாக 9 பேர் மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது, இந்து சங்கத்திற்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையிலும் ஆன்மீக நன்னெறி நேர்மையை நிலைநாட்டும் வகையிலும் முனைவர் முரளிதரன் அணியின் சார்பில் 9 பேரும் இந்து சங்கத்தின் அசல் தலைவர் த.கணேசன்-நிழல் தலைவர் மோகன் ஷான் தலைமையில் 9 பேரும் எதிர்த்து களமாடத் தயாராகி வருகின்றனர்.

ஒரேவோர் ஆண்டுக் கூட்டத்திலாவது தேர்தல் இன்றி 9 பேர் தேசிய தலைமையால் நியமனம் செய்யப்பட்ட வரலாறு இந்து சங்கத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை.

(இந்து சங்கத்தின் இத்தகைய நிலை இன்னும் வெளிச்சத்திற்கு வரும்..)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை