
56 சிற்சிறு தேசங்களைக் கொண்டு ‘இந்து சமயம்’, ‘இந்தி மொழி’ ஆகிய இரு கயிறுகளைக் கொண்டு இந்தியா என்னும் நாட்டை செயற்கையாக கட்டமைத்தவர்கள் பிராமணர்கள்; ஆர் எஸ் எஸ் சனாதனக் கூட்டத்தினர்.
இத்தகைய சனாதனிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடற் படையோடும் இராணுவ வலிமையோடும் விளங்கிய தமிழ்நாட்டைப் பற்றியும் அத்தகைய தமிழ்நாட்டின் தொல் குடியினரான தமிழர்களின் தாய் மொழியான தமிழ் மொழி குறித்தும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட இவர்களின் ஊது குழலாக அண்மை காலமாக பிபிசி தமிழோசை உருமாறி உள்ளது.
இலண்டன் பிபிசி இணைய செய்தித்தளத்தின் தமிழ்ப் பிரிவான தமிழோசை நேற்று வெளியிட்ட ஒரு செய்தியில் சோழ பேரரசின் இயற்கை துறைமுகங்களில் ஒன்றான காவிரி பூம்பட்டினத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதே பூம்புகார் துறைமுகத்திலிருந்துதான் ரோம் நகர சந்தைக்கு மிளகு இலவங்கம் ரத்தினக் கற்கள் ஒட்டுமாங்கனி சம்பா அரிசி உள்ளிட்ட யாவும் கடல் மார்க்கமாக சென்றன.
இதனால்தான் லத்தின் மொழியிலும் தொடர்ந்து ஆங்கில மொழியிலும் Mango, Rice போன்ற சொற்கள் இடம் பெற்றன.
அவ்வண்ணம், தமிழரின் தொன்மை வரலாற்றுக்கும் தமிழின் மேன்மைக்கும் கட்டியம் கூறுகின்ற ஒரு இயற்கை துறைமுகம் இருந்ததா என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?
நேற்று ஜூலை 2+ஆம் நாள் லண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்ட ஒரு செய்தி,
சங்க இலக்கியங்கள் பேசும் பூம்புகார் துறைமுகம் உண்மையில் இருந்ததா? என்ற வினாவுடன் தொடங்குகிறது
சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள், பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன.
குறிப்பாக, பட்டினப்பாலை அதன் நகர அமைப்பு, பல்வேறு பகுதிகள், வீதிகள், துறைமுகம், வணிகப் பொருட்கள், மக்களின் வாழ்வியல் உட்படப் பல அம்சங்களை விளக்குகிறது. இவை காவிரிப்பூம்பட்டினம் பற்றிய விரிவான சித்திரத்தை வழங்குகின்றன.
பட்டினப்பாலையின் விளக்கத்தின்படி, காவிரிப்பூம்பட்டினம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. பகல் நேரச் சந்தை ‘நாளங்காடி’ எனவும், இரவு நேரச் சந்தை ‘அல்லங்காடி’ எனவும் அழைக்கப்பட்டன. கிரேக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டு வணிகர்கள் நகரின் வெளிப்பகுதியில் வசித்து வணிகம் செய்ததாகவும் மீனவர்கள் மருவூர்ப்பாக்கம் என்ற பகுதியில் வசித்து வந்ததாகவும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
இப்படியாக, சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
பூம்புகார் துறைமுகம் உண்மையில் இருந்ததா?
பண்டைய காவிரிப்பூம்பட்டினமாக அறியப்படும் பூம்புகார், தமிழக கடற்கரையில் காவிரி ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள், வளையக் கிணறுகள், மட்பாண்டங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழையூரில் கண்டறியப்பட்ட ஒரு ‘ஐ’ வடிவ செங்கல் அமைப்பு, மேடை, வடிகால், மரத்தூண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அதுவொரு ‘துறைமுக மேடை’ என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதுவரையிலான ஆய்வுகளின்படி, பூம்புகார் என்ற நகரம் உண்மையில் இருந்தது என்று நிரூபணமாகியுள்ளது. ஆனால், அதன் எவ்வளவு பகுதி அழிந்தது, எப்போது அந்த இழப்புகள் ஏற்பட்டன, அந்த அழிவு படிப்படியாக நிகழ்ந்ததா அல்லது ஒரே பெரும் பேரழிவால் ஏற்பட்டதா என்பன குறித்து இன்னும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அசல் நகரத்தின் அமைவிடம், அதன் காலம், காலப்போக்கில் ஏற்பட்ட இடமாற்றங்கள், அதன் அழிவுக்கான காரணங்கள் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாத புதிர்களாகவே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
பூம்புகார் குறித்தான முதல் அதிகாரபூர்வ கடலோர ஆய்வு 1981இல் தமிழ்நாடு தொல்லியல் துறையால், கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், வெவ்வேறு ஆழங்களில் அசாதாரணமான கடலடிப் பாறை அமைப்புகள் கண்டறியப்பட்டன. மேலும் கடலடியில் மூன்று அடுக்கு கற்கட்டுமானங்கள் காணப்பட்டன. தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்த எச்சங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவையாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறது.
கடந்த 1989ஆம் ஆண்டு முதல், தேசிய கடலியல் நிறுவனத்தின் கடல்சார் தொல்பொருள் ஆய்வாளர்களான அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் ஆகியோர் பூம்புகார் மற்றும் தரங்கம்பாடிக்கு இடையே சுமார் ஏழு கிலோமீட்டர் கடற்கரையிலும், அப்பகுதியில் கடலில் பல கிலோமீட்டர் தொலைவிலும் ஆராய்ந்தனர்.
அதில், அலையிடை மண்டலம் மற்றும் சுமார் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழம் வரையிலான பகுதியில் சுடுமண் வளையக் கிணறுகள், செங்கல் எச்சங்கள், மட்பாண்டங்கள், நீரில் மூழ்கிய கற்கட்டுமானங்கள் இருந்தது பதிவு செய்யப்பட்டன..
காவிரி முகத்துவாரத்திற்கு அருகே, கடலில் சுமார் 600 மீட்டர் தொலைவில், முக்குளிப்பவர்கள் செதுக்கப்பட்ட மணற்கல் பாறைகளை ஆராய்ந்து, புதைந்திருந்த படிவங்களை வெளிப்படுத்தினர்.
அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் வெளியிட்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஒரு மீட்டருக்கும் அதிகமான வண்டல் மண்ணுக்குக் கீழே குடியிருப்புப் பொருட்கள் இருந்ததாகவும் அந்த இடத்துடன் தொடர்புடைய ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்த மட்பாண்டங்கள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வு, பூம்புகாரின் தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30 முதல் 40கி.மீ தூரத்தில், கடலுக்குக் கீழே 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பில் ஒரு துறைமுக நகரம் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியது.
பூம்புகார்: சங்க இலக்கியம் பேசும் துறைமுக நகரம் பற்றி இதுவரையிலான ஆய்வுகள் கூறுவது என்ன?.
பண்டைய துறைமுக நகரத்தை கடல் விழுங்கிவிட்டதா?
பூம்புகார் கடலில் மூழ்கிவிட்டதன் பின்னணி குறித்தான ஆய்வுகளில், ஆழமற்ற கடல் பகுதியில் காணப்படும் எச்சங்கள், கடுமையான கடற்கரை அரிப்பு ஏற்பட்டதை உணர்த்துவதாகக் கூறுகின்றன.
அனிருத் சிங் கவுர், சுந்தரேஷ் தங்கள் ஆய்வில், “1973ஆம் ஆண்டில் அதிகபட்ச அலைக்கோட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்ட கண்ணகி சிலை, கடல் அரிப்பால் கடல் நீர் உட்புகுந்ததன் விளைவாக, 1994இல் 150 மீட்டர் உள்நோக்கி மாற்றப்பட வேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், தற்கால கடற்கரையை, பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தரங்கம்பாடியின் வரைபடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் சுமார் 300 மீட்டர் கடற்கரையோரப் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் மதிப்பிட்டனர்.
அதேபோல, 2014இல் தேசிய கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். மணி, ஜெயகுமார் சீலம், அனிருத் சிங் கவுர் ஆகியோர் நடத்திய ஆய்வில், கடந்த 75 ஆண்டுகளில் பூம்புகாரில் சுமார் 487 மீட்டர், தரங்கம்பாடியில் 389 மீட்டர் என்ற அளவிற்கு கடற்கரைக்கோடு மாறி இருப்பதாகக் கணக்கிட்டனர்.
ஒரு காலத்தில் காவிரி ஆறு பெருமளவிலான வண்டல் மண் படிவுகளைக் கடற்கரைக்குக் கொண்டு வந்தது. நவீன அணைகள் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் இந்த வண்டல் வரத்தைக் குறைத்ததாகவும் அதனால் சமீபத்திய அரிப்பு மிகவும் தீவிரமடைந்ததாகவும் ஏ.எஸ். கவுர் மற்றும் சுந்தரேஷ் வாதிட்டனர்.
இது பண்டைய குடியிருப்புப் பகுதிகள் மறைந்ததற்கான முழுமையான விளக்கமாக அமையாது என்றாலும், வண்டல் படிவு வரத்து மற்றும் வெளியேற்றத்திற்கு இடையிலான சமநிலை மாறும்போது கடற்கரைக்கோடு எவ்வளவு விரைவாக உள்வாங்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
பனியுகத்திற்குப் பிந்தைய கடல் மட்ட உயர்வு என்பது, தற்போது கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதிகளுடன் தொடர்புடையது. எஸ்.எம். ராமசாமி தலைமையிலான 2020ஆம் ஆண்டின் கடல்சார் நிலப்பரப்பு ஆய்வு (bathymetric study), கடந்த பனியுகத்திற்குப் பிறகு உலகளாவிய கடல் மட்டம் உயர்ந்தபோது, சுமார் 20,000 முதல் 7,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடற்கரைக்கோடு நிலத்தை நோக்கிப் பெருமளவில் நகர்ந்ததை வெளிப்படுத்தியது.
பூம்புகார்:
சங்க இலக்கியம் பேசும் துறைமுக நகரம் பற்றி இதுவரையிலான ஆய்வுகள் கூறுவது என்ன?
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பண்டைய பூம்புகார் துறைமுகம், வடக்கு-தெற்காக 11கி.மீ நீளமும் கிழக்கு-மேற்காக 2.5கி.மீ அகலமும் கொண்டு இருந்ததாகவும் அதில், “வடக்கு-தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்குவரத்துக்காக, குறுக்குக் கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும். இவை சரக்குகளை ஏற்றி-இறக்கவும், சேமித்து வைக்கவும் துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்களை நிறுத்த பயன்படுத்துவதற்காக இருந்திருக்கலாம்” என்று தெரியவந்துள்ளதாகவும் அப்போது பிபிசி தமிழிடம் பேசிய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் எம்.ராமசாமி விளக்கினார்.
மேலும், “துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன.
துறைமுகத்திற்கு வடக்கே, வடக்கு-தெற்காக காணப்படுகின்ற மணல்மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு மதில் சுவற்றுக்கு உள்ளே கட்டப்பட்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. இதேபோன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் மதிலுடன் கூடிய, ஆனால் உள்ளிருக்கும் கட்டடங்கள் அழிந்த நிலையிலுள்ள குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூம்புகார் நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து விவரித்த பேராசிரியர் எம்.ராமசாமி, சுனாமி, கடல்மட்ட உயர்வு, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் காரணமாகச் சிறிது சிறிதாக பூம்புகார் நகரம் இடம் மாறுவதற்கும் கடலுக்குள் மூழ்குவதற்கும் வித்திட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
பண்டைய பூம்புகாரின் சில பகுதிகளைக் கடல் விழுங்கியுள்ளதை இதுவரையிலான அகழாய்வு சான்றுகள் உறுதி செய்கின்றன. தொல்பொருள் எச்சங்கள் நிலத்திலும், ஆழமற்ற நீருக்கு அடியிலும் காணப்படும் அதே நேரம், நிலவியல் ஆய்வுகள் பெரும் கடற்கரைப் பரப்பு கடலுக்குள் சென்றதை ஆவணப்படுத்தியுள்ளன.
புயல்கள், பெருவெள்ளங்கள், சுனாமிகள் போன்ற பேரிடர்கள் சில மணிநேரங்களில் கடலோரக் குடியிருப்புகளை அழித்து, சிதைவுகளைக் கரைக்குக் கொண்டு சென்று, புதிய கால்வாய்களை உருவாக்கக்கூடும்.
எனவே அத்தகைய நிகழ்வுகள் பூம்புகார் கடலில் மூழ்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் என்றெல்லாம் அந்த செய்தி விவரிக்கிறது.
இவ்வளவையும் கூறிவிட்டு தொடர்ந்து வரும் நிறைவுக்கட்ட செய்திதான் அந்த நச்சுத் தகவலை கருநாகப் பாம்பின் கொடிய நஞ்சை போன்ற இழிதகவலை கக்கி நிறைவு பெறுகிறது
அதேவேளையில், இதுவரை உறுதியாகக் காலவரையறை செய்யப்பட்ட எந்தவொரு படிமமும் இந்தப் பின்னணியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகின்றனர் என்று குறிப்பிட்டு அந்த செய்தி முடிவடைகிறது.
சுட்டிக்காட்டுகின்ற அந்த நபர்கள் யார் என்ற விவரம் அந்த செய்தியில் இல்லை.

ஒரு தலை வாழை இலையில் ஐஞ்சுவை உணவை தடபுடலாக பரிமாறிவிட்டு கடைசியில் அந்த இலை ஓரத்தில் ஓர் அழுக்குப் பண்டத்தை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த முறை; இந்த முறை சனாதன முறை!
இதற்கு முன்னும் லெமூரியா கடலுக்குள் புதைந்த கண்டம் உண்மையில் இருந்ததா? இதுதான் குமரிக்கண்டமா தமிழர் வரலாறு என்னும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியிட்ட இதே தமிழோசை,
தமிழரின் பாரம்பரிய தொல்நிலமான குமரிக்கண்டம் இருந்தது உண்மையா? வெறும் நம்பிக்கையா என்னும் அடிப்படையில் வெளியிடப்பட்ட அந்த செய்தி, 2021 பிப்ரவரி 11-ஆம் நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஃக்றுளி ஆறு ஓடிய அந்த பூமி; குமரி மலையை கொண்டிருந்த அந்த தமிழர் நிலம் கடலுக்குள் அமிந்தபோது இந்தியாவின் வட பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த பாறைப் பகுதி மேல் எழுந்தது; அதுதான் இன்றைய இமயமலை.

இமயமலையில் இன்றளவும் காணப்படும் கடலடி சிப்பிக்களும் கடற்பாசிகளும் அழியாமல் இருக்கின்றன. அப்படி இருப்பதற்குக் காரணம் பனிப்படர்ந்த மலையாக இருப்பதால்தான்.
இமயமலை கடலுக்கு அடியில் இருந்து எழுந்தபொழுது தென்புலத்தில் இருந்த குமரிமலை கடலுக்கு அடியில் சென்றது. இப்பொழுது தெரிகின்ற அந்த குன்று குமரி மலையின் உச்சி ஆகும்.
அதுகூட குமரிமலை உச்சி என்று எதிர்கால சமூகம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு விவேகானந்தர் பாறை என்று பிராமண ஆரிய ஊடகம் பெயரிட்டது.
தமிழ் நிலத்திற்கும் விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?
இந்தியா முழுவதும் கால்நடையாக சுற்றி இளைஞர்களிடையே சமய சமூக அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கும்முன் குமரிமலை உச்சியில் மூன்று நாள் அவர் தியானம் புரிந்தார். அதனால் ஒரு மாபெரும் இனத்தின் அடையாளமாக இருக்கின்ற அந்த மலைக் குறியீட்டை விவேகானந்தர் பெயருக்கு மாற்றியது யார்?
பழைய சேர நாட்டு – இன்றைய கேரளாவின் கடற்கரையை பாரதியார் கூட மேலைக் கடல் என்றுதான் குறிப்பிட்டார்.

அதற்கு அரபிக் கடல் என்று பெயர் சூட்டிய கயமைக் கூட்டம் எது?
குமரிக் கடலுக்கு வங்காள விரிகுடா என்று பெயர் சூட்டிய கயவர் கூட்டம் எது?
2014 மே மாதத்தில் பிராமணர்களின் பினாமி ஆட்சி நரேந்திர தாஸ் தாமோதர மோடி தலைமையில் உருவானபின் பாரதிய ஜனதா கட்சியை யார் விமர்சித்தாலும் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாத கூட்டம் அவர்களை ‘Anti India’ என்று வசை பாடியது.
பாரதிய ஜனதா கட்சியையும் அதன் தலைமையிலான ஆட்சியையும் குறை சொல்வது எப்படி இந்தியாவிற்கு எதிரானதாகும்?.
இந்த நிலையில் இந்திய தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான கட்சிகள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி அதற்கு இந்தியக் கூட்டணி என்று பெயரிட்டனர்.
உடனே இந்தியாவை கைவிட்டு விட்டு பாரதம் என்று சொல்ல தொடங்கியது பாஜக ஆர் எஸ் எஸ் சனாதனக் கூட்டம்.
புதுடில்லியில் பிராமணர்களின் பினாமி ஆட்சி வந்ததிலிருந்து தமிழர் வரலாறு, தமிழின் தொன்மை இரண்டையும் ஒருசேர கட்டுக் குலைக்கும் வகையில் புதுப்புது பொய் செய்தியும் புனைத் தகவலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றப்படுகின்றன.
இந்த வரிசையில், கூகுளின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் இணைந்துள்ளது
உதாரணத்திற்கு விவேகானந்தரின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள தமிழ் மகுடத் தகவலை அடியோடு திரை போட்டு மறைத்துள்ளது இந்த துரோகக் கூட்டம்.
நாளை ஜூலை நான்காம் நாள் விவேகானந்தருக்கு நினைவு நாள்.
விவேகானந்தர் பற்றிய தகவலில் ஒரு தமிழரின் பெருமை இரும்புத் திரை போட்டு மறைக்கப்பட்டுள்ளது.
சைவ விவேகியுமான அவரை சிறுமைப்படுத்தியும் தகவல் முன்பு வெளியிடப்பட்டிருந்தது தற்பொழுது அது மாற்றப்பட்டுள்ளது.
விவேகானந்தரை மும்பையைச் சேர்ந்த ஏதோ நான்கைந்து இளைஞர்கள் தான் ஒன்று சேர்ந்து சுவாமி விவேகானந்தரை 1893-இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய பாராளுமன்ற கூட்டத்திற்கு அனுப்பி வைத்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தகவல் இப்பொழுது மாற்றப்பட்டு சென்னையை சேர்ந்த இளைஞர்கள் விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்ததாக கயமைக் கூட்டம் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளது.
உண்மையில் விவேகானந்தரை சிக்காகோ பன்னாட்டு சமய மாநாட்டிற்கு அனுப்பி வைத்தவர் தமிழாய்ந்த சைவ ஞானி ராமநாதபுர ஆட்சியாளர் பாஸ்கர சேதுபதி மன்னராவார்.
அவர் சிறுவனாக இருந்தபொழுது தாய் தந்தையர் இருவரையும் இழந்ததால் அவரை பராமரிக்கவும் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டும்வரை அரண்மனையை நிருவகிக்கவும் ஓர் அறவாரியம் உருவாக்கப்பட்டது.
ஆனாலும் அந்தக் குழுவின் மீது சந்தேகம் இருந்ததால், இளவரசர் பாஸ்கர சேதுபதிக்கு நம்பகமான தரப்பினர் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் பாஸ்கர சேதுபதியை வளர்க்கும் பொறுப்பையும் அவர் இளைஞராக வளரும் வரை அவர்கள் பொறுப்பிலேயே வளர வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒப்படைத்தனர்.
நகரத்தார் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு வழக்காடல் இருக்கும்.
கால் பொன்னாக (பவுனாக) இருந்தாலும் அதில் மா பொன்னைக் காண்பவர்கள் செட்டியார்கள் என்பதுதான் அது; நகரத்தார் சமூகத்தின் கெட்டிக்காரத்தனத்திற்கு இது தக்க சான்று.
அதைப்போல ஆங்கிலேயர்கள் எது கிடைத்தாலும் சுருட்டிக் கொண்டு அதை கப்பல் வழியே பிரிட்டிஷ் மகாராணி மெச்சுகின்ற வகையில் இலண்டனுக்கு கடத்தியவர்கள் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விவகாரத்தில் மிகவும் நியாயமாக நடந்து கொண்டனர்.
பாஸ்கர சேதுபதிக்கான கல்வி, ஆட்சி நிர்வாக முறை,, சைவ சமய அறிவு உள்ளிட்ட அத்தனையையும் முறையாக பயிற்றுவித்து அவர் இளைஞர் ஆனதும் ராமநாதபுரம் மாகாண ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர்.
ஆனால் இதில் ஒரேவொரு குறை இருந்தது; அது குறையா அல்லது நிறையா என்று சொல்லத் தெரியவில்லை. எல்லாமும் ஆங்கில மொழியிலேயே நடைபெற்றன.
இதனால் பாஸ்கர சேதுபதி ஆங்கில மொழியில் வல்லாராக உருவாகினார். சைவ சமயத்தைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு ஆங்கிலேயர்களே மனமிளகி திருநீறு பூசிக் கொண்டதும் உண்டு.
இப்படிப்பட்ட பாஸ்கர சேதுபதியைப் பற்றி அறிந்த உலக சமய பாராளுமன்றக் கூட்ட ஏற்பாட்டுக் குழுவினர், சிக்காகோவில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1893) நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.
தமிழரின் போதாத காலமோ அல்லது சைவத்தின் பொல்லாத சூழலோ அவர் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
நாடெங்கும் விடுதலை முழக்கம் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரம் அது; தேச விடுதலை குறித்த பேச்சும் உச்சத்தைத் தொட்டது. அப்படிப்பட்ட நேரத்தில் நிருவாகத்தை விட்டுவிட்டு மாதக் கணக்கில் எப்படி அமெரிக்காவிற்கு கப்பல்வழி பயணத்தை மாதக் கணக்கில் மேற்கொள்வது என்ற தயக்கம் மன்னர் பாஸ்கர் சேதுபதிக்கு ஏற்பட்டது.
சிறுவயதிலேயே இனிப்பு நீர் தொற்றிக் கொண்டதால் உடல் நலக் கோளாறு வேறு;
தன்னைச் சுற்றி இருந்த வஞ்சக கூட்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவதானித்த பாஸ்கர சேதுபதி சிக்காகோ பன்னாட்டு சமய பாராளுமன்ற கூட்டத்திற்கு செல்வதில்லை என முடிவு செய்தார்.
ஆனாலும் அந்த முடிவை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார். அதை எப்படி சமன் செய்வது என்ற எண்ணத்தில் பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து இமயமலை நோக்கி கால்நடையாக பயணம் மேற்கொண்ட தகவல் ராமநாதபுரத்து அரண்மனையை எட்டியது.

விவேகானந்தரைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த பாஸ்கர சேதுபதி, அவரை அரண்மனைக்கு அழைத்து,நேரில் பேசி அவரின் உள்ளத்தையும் உணர்வையும் நேரில் அறிந்து மனநிறைவடைந்தார். அதன் பின் ஒரு முடிவுக்கு வந்து, தனக்கு வந்த அழைப்பிதழை அவரிடம் கொடுத்து அதற்கான சான்று கடிதத்தையும் அரண்மனை முத்திரையுடன் கொடுத்து வழிச் செலவுக்கு பணமும் தந்து சிக்காகவுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு தமிழ் மன்னன்.., ஆங்கிலத்தில் புலமைப் பெற்ற ஒரு சைவ ஞானி, அதுவும் ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ணம் சைவ சொற்பொழிவை ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றக் கூடியவரின் பெருமை வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரைப் பற்றிய தகவலை, அடியோடு மறைத்தனர்.
எப்படி அசோக சக்கரவர்த்தியையும் அவர் பௌத்த சமயத்தை பரப்பியத்தையும் பிராமணர்கள் மறைத்தனரோ அதைப்போல பாஸ்கர சேதுபதி மன்னரின் பெருமையையும் மறைத்தனர்.
இந்தத் தகவலை அடியோடு மறைத்த கயமைக் கூட்டம் விவேகானந்தர் பற்றிய வரலாற்றை அடிக்கடி திருத்தியும் பொய்த் தகவலோடு புனைந்தும் அடிக்கடி மாற்றம் செய்து வருகிறது.
மும்பையைச் சேர்ந்த 10 இளைஞர்கள் விவேகானந்தரை சிக்காகோவுக்கு அனுப்பியதாக இருந்த தகவல், தற்பொழுது மாற்றப்பட்டு சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் காசு திரட்டி அவரை அனுப்பி வைத்ததாக பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளனர்
யாரடா அந்த 10 பேர்?
இதைவிட பெரிய கொடுமை, விவேகானந்தர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை சென்று தூத்துக்குடி துறைமுகத்தில் வந்து இறங்கிய பொழுது கடலில் இறங்கி தரையில் காலடி வைக்கும் முன் அந்த புனிதரின் கால் தன் தலையில் படும்படி பாஸ்கரை சேதுபதி தன் தலையை தரையில் வைத்து தலையின் மீது விவேகானந்தரின் பாதம் படும் படி கேட்டுக்கொண்டதாக அக்கிரமமான பொய் தகவலும் கொஞ்ச காலத்திற்கு முன்பு பரவ விடப்பட்டது.
ஒரு தமிழன் சிறப்பாகவோ அறிவாளியாகவோ வல்லவராகவோ நல்லவராகவோ ஆற்றல் மிக்கவராகவோ இருந்தால் அவரை பிராமணர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை பாண்டிய அரசவையிலும் கம்பர் இயற்றிய கம்பராமாயண பெருங்கதை நூலில் சோழ அரசவையிலும் அரங்கேற்றம் செய்ய முடியாத படி தடுத்தவர்கள் பிராமணர்கள் என்ற உண்மையை எல்லாம் தமிழர்கள் எப்பொழுது தெளிந்து உணரப் போகிறார்களோ தெரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆர் எஸ் எஸ் சனாதன பாஜகவின் கள்ளக் குழந்தை விஜய் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியே சனாதன ஆட்சி தான் என்ற தெளிவுகூட இல்லாதவர்கள் அரசியல் விமர்சகர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் இருப்பது பெரும் வேதனை.
அதைப்போல பாரத தேசம் என்பதன் தொடர்பில் அண்மை காலமாக பொய்யும் புனை சுருட்டும் கலந்த பொய்த் தகவலை..,
”சொல்லப்படுகிறது’, ‘நம்பப்படுகிறது’ என்றெல்லாம் கதை அளந்து ஆதாரம் இல்லாத கூற்றை வானவீதியில் பதிவிட்டுள்ளனர்.
இந்தியா என்ற நாட்டிற்கு நானூறு ஆண்டுக்கும் குறைவான வரலாறுதான் உள்ளது.
முகலாயர்களிடமிருந்து நிர்வாகத்தை பிரிட்டிஷார் பறிக்கவில்லை என்றால் இந்தியா என்ற தேசமும் உருவாகி இருக்காது; இந்து சமயமும் உருவாகி இருக்காது.
குறிப்பாக தமிழர்களின் பெருஞ்சமயமாக சைவம் மட்டுமே நிலை பெற்றிருக்கும்; நிலைத்திருக்கும் அதை ஆலயங்களில் பாடுவதற்கு பதிலாக இறப்பு வீட்டில் பாட வேண்டிய இழிநிலையும் திருமுறைக்கு ஏற்பட்டிருக்காது.
இத்தகைய பொய்த்தகவலுக்கு பாரம்பரிய ஊடகமான லண்டன் பிபிசியும் துணை போவது தான் வேதனையாக இருக்கிறது.
பிபிசியில் தமிழர்களின் தொல் நிலமான குமரிக்கண்டத்தை பற்றியே ‘சொல்லப்படுகிறது’, ‘நம்பப்படுகிறது’ என்ற சந்தேகத்தை எழுப்பி தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் ஊறு விளைவிக்கும் வேலை அரங்கேற்றப்படுகிறது.
வரலாறு நெடுக பாரத தேசம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இருந்ததெல்லாம் தமிழர் தேசம்தான்; அதுவும் முத்தேசமாக பிரிந்து இருந்தது.
இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக உருவான, இந்து மகா சபை ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கைப் பிள்ளையும் அரசியல் கரமுமான ஜன சங்கம்தான் பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் உருவானது.
முரளி மனோகர் ஜோஷி, மொரார்ஜி தேசாய் தலைமையிலான கலப்பு ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அந்த கட்சியின் பெயர் ஜன சங்கம்தான்.
கூட்டாஞ்சோற்றைப் போன்ற ஜனதாக் கட்சி கலைந்து அதன் தலைமையிலான ஆடசியும் கவிழ்ந்தபின் ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக தன்னை உருமாற்றிக் கொண்டது.
தற்பொழுது பாஜக தலைமையிலான பிராமணர் ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆட்சியை யாராவது விமர்சித்தால், அவர்களை எல்லாம் இந்து விரோதி இந்திய விரோதி என்றே எதிர்விமர்சனம் செய்கின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய அரசியல் கூட்டணி பெங்களூருவில் கூடி தங்கள் கூட்டணியின் புதிய பெயர் இந்திய கூட்டணி என்று அறிவித்ததும் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டத்தினர் இந்தியாவை கைவிட்டுவிட்டு பாரதம் என்பதை முன்னெடுக்க தொடங்கி உள்ளனர்.
அதன் பிறகு தான் பாரதம் பாரத தேசம் என்பன குறித்தெல்லாம் புதுப்புது புனைத் தகவல்கள் வெளியாகின. அதற்கு லண்டன் பிபிசி தமிழோசையும் துணைபோவது அப்பட்டமான தமிழ்த் துரோகம்.


