
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் 44ஆவது தேசியப் பேராளர் மாநாடு புத்ரா ஜெயாவில் அண்மையில் சமய – சமூக மணம் கமழவும் எழுச்சி பொங்கவும் அதன் தேசியத் தலைவர் வ.ரிஷிக் குமார் தலைமையில் நடைபெற்றது.
இரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்வில் மாமன்ற விருது வழங்குதலும் நன்கொடையாளர் சிறப்பிப்பும் இடம்பெற்றன.
நாட்டிலுள்ள இந்து சமய சான்றோர்கள், சமூக பெருமக்கள் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த பெருமக்கள், ஆலயத் தலைவர்கள் மாமன்ற தோற்றுநர்கள், ஆலோசகர்கள் அறங்காவலர்கள் பேராளர்கள் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் பி எம் தேர்வில் ‘8-ஏ’க்களுடன் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்ற இந்து தர்ம மாமன்ற அருள் நிலையங்களை சேர்ந்த மாணவர்களும் உயர்க்கல்வி நிலையங்களில் 3.5 என்ற அளவில் ஒட்டுமொத்த சராசரி தரப் புள்ளியை (Cumulative Grade Point Average) பெற்று தேர்ச்சி பெற்று 32 மாணவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
தவிர மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசிய இளைஞர் பிரிவின் இந்து தர்ம இளையோர் முகாம்களை முடித்து நாடு முழுவதும் இளையோர் இந்து தர்ம வகுப்புகளையும் சங்கமங்களையும் இளையோருக்கான முகாம்களையும் நடத்தி இந்து இளையோரின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றி வரும் 22 மாமன்ற இளைஞர்களின் சேவையும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது, முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்திற்கு சொந்தமான கட்டிடம் பிரிக்ஃபீல்ட்சில் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த கொடை நெஞ்சத்தினர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டதுடன் அவர்கள் வழங்கிய பங்களிப்பும் பாராட்டப்பட்டது. இதன் தொடர்பில் சிறப்பு காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கு பெருமை சேர்த்து சமூகத்திற்கும் சமயத்திற்கும் தன்னலமற்ற சேவை ஆற்றிய மூவர், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசிய விருதான ‘தர்ம னரத்னா’ விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.
மலேசிய அருள்மிகு ஆதிசங்கரர் திருமடத்தின் நிறுவனர் மகேந்திரர், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர் பாலன், நாடாளுமன்ற மே நாள் துணை அவைத் தலைவர் டத்தோ டிபி விஜயேந்திரன் ஆகியோரே ‘தர்மரத்னா’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட பெருமக்கள்.
மன்றத்தின் மேனாள் தலைவர் அ. ராதா கிருஷ்ணன் தர்ம பூஷணம் என்னும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட அங்கமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக மாமன்றத்திற்கும் இந்து தருமத்திற்கும் தன்னலமற்ற சேவை ஆற்றிய வீரையா முனியாண்டி செல்லையா பொன்னுசாமி ஆகிய இருவரும் தர்ம மாமணி விருது வழங்கிய சிறப்பிக்கப்பட்ட அதேவேளை, திருமதி கிருஷ்ணம்மாள் பொன்னுசாமி திருமதி ரோஸ்லின் ஆர்.வி. நாதன் ஆகிய இரு பெண்களும் தர்ம பூஷணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்து சமய மக்களிடையே கல்வி சமயம் சமூகம் இளைஞர் மேம்பாடு சார்ந்த பணிகளை அயராது மேற்கொண்டு வருவோரும் தத்தம் பங்களிப்பு இடையறாது தொடரும் வகையில் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக வேர்களை பலப்படுத்துவோம் ஒன்றிணைந்து தர்மத்தை நிலை நாட்டுவோம் என்ற உயர் இலட்சியத்தை முன்னிறுத்தி இந்து சமுதாயத்தின் ஒற்றுமை ஆன்மீக மறுமலர்ச்சி சமய பணி ஆகியவற்றை மேன்மேலும் வலுப்படுத்தும் சீர்மிகு பணியில் தரும மன்றம் இடையறாது முன்னே செல்லும் என்று 44ஆவது தேசிய பேராளர் மாநாடு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ரிஷிகுமார் வடிவேலு மேலும் தெரிவித்துள்ளார்.


