
மலேசியத் திருநாட்டில் ஹரிராயா நோன்புத் திருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகை, கிறிஸ்துமஸ் திருநாள் போன்ற பண்டிகைகளுக்கு பொது விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை போல சமயம் கடந்த பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளுக்கும் பொது விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் ஆங்கங்கே நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தமிமுன் அன்சாரி தன் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தினார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பெயரில் நாட்டின் மையப் பகுதியில் உள்ள தமிழ் இஸ்லாமிய அமைப்புகளுடன் கிளந்தான் மாநில இந்திய முஸ்லிம் அமைப்பும் (Persatuan Muslim India Malaysia) பன்னாட்டு இஸ்லாமிய அமைப்பும்(Pertubuhan Muslim Global) ஒன்றிணைந்து கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கத்தில் நேற்று ஜனவரி 25ஆம் நாள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான அன்சாரி,

தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில், மலேசியா ஒரு குறிப்பிடத்தக்க நாடாகும். நாட்டுப்பற்று மிக்க மலேசியத் தமிழர்கள் இந்து முஸ்லிம் என்னும் சமய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில் தற்பொழுது ஒரு ஒரு மெல்லிய இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது என்றார்.
மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு புறப்படும் அப்துல் காதரிடம் அன்பழகன் வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் பொருட்கள் அப்படியே சேர்ந்து விடும்; அதைப்போல தமிழ்நாட்டில் இருந்து மலாயாவிற்கு புறப்பட்ட முத்துசாமியிடம் கொடுத்து அனுப்பிய பொருட்கள் மலேசியாவில் உள்ள குலாம் காதர் குடும்பத்திற்கு ரஜூலா கப்பல் அல்லது சிதம்பரம் கப்பல் மூலம் வந்து சேர்ந்து விடும். அத்தகைய ஒருமித்த ஒன்றுபட்ட தன்மைகள் எல்லாம் இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டன. அந்தநிலை மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும்; காரணம் வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள்; தாய் மொழியாகிய தமிழால் ஒன்றுபட்டவர்கள் என்று பேசினார்.
60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வாழ்கிற இந்த நாட்டில் உலகிலேயே அதிக உயரம் உடைய திருமுருகன் சிலையை நிறுவுவதற்கு இந்த நாட்டின் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில்கூட இவ்வளவு பெரிய முருகன் சிலை கிடையாது. தைப்பூச விழாவிற்கு தமிழ்நாட்டில் விடுமுறையும் கிடையாது. ஆனால் மலேசியாவில் அதிகமான மாநிலங்களில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறையும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்படுகிறது
“மலேசியா, சமய நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்குகின்ற நாடாக விளங்குகிறது. தமிழ்நாட்டிற்கு அடுத்து இங்கு தான் அதிகமான தமிழ் பள்ளிகள் உள்ளன. 530 தமிழ்ப் பள்ளிகள் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.”
பினாங்கு மாநிலத்தில் கெப்பித்தான் பள்ளிவாசலுக்கு அருகில் ஐந்து நிமிடங்களில் நடந்து செல்கின்ற தொலைவில் அருள்மிகு மாரியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. இதைப்போல சிங்கப்பூரில் பள்ளிவாசலும் மாரியம்மன் ஆலயமும் அடுத்தடுத்த அமைந்துள்ளன. இரண்டு வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே சுவர்தான். இத்தகைய கட்டமைப்புகள், இஸ்லாமிய மக்களும் இந்துப் பெருமக்களும் ஒன்றுபட்டு- ஒருமித்துவாழும் தன்மையை வழிவழியாகக் கொண்டவர்கள் என்பதற்கு கட்டியம் கூறுபவை. மலேசியாவின் தேசத்தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரகுமான் ம உள்ள மஇகா(மலேசிய இந்தியர் காங்கிரஸ்)வின் அந்நாளையத் தலைவர் துன் சம்பந்தனார் காலத்தில் நிலவியதை போன்ற ஒன்றுபட்ட சமுதாயமாக மலேசியத் தமிழர்கள் விளங்க வேண்டும் என்றார்.

புனித ஹஜ் யாத்திரைக்கும் உம்ரா இறைநேச பயணத்திற்கும் செல்கின்ற இஸ்லாமியர்கள் சிரமமின்றி செல்வதற்கான சிறப்புத் தடங்கள் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருப்பதைப் போல இங்கிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் செல்கின்ற ஐயப்ப பக்தர்களுக்கும் தனித்தடம் அமைத்து கொடுத்திருக்கும் மலேசிய அரசாங்கத்தை எத்துணை பாராட்டினாலும் தகும்.
மலேசியாவின் முன்னை வரலாற்றில் மலாக்கா மாநகரம் முக்கியமான வரலாற்று கடல்சார் வர்த்தக முனையம் ஆகும்.
அரபு மண்டல வர்த்தகர்கள் பேரளவில் சந்தித்துக் கொண்ட அந்த இடத்தை மொலாக்கத் என்று குறிப்பிட்டு வந்தனர். அந்த அரபுச் சொல்தான் காலப்போக்கில் மலாக்கா என்று மறுவி இருக்கக்கூடும்.
எது எவ்வாறாக இருந்தாலும் இஸ்லாமியர்கள், இந்துக்கள், எந்த சமயத்தையும் சாராதவர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் என எல்லாத் தரப்பினரும் இங்கே குழுமி இருப்பதை காணும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைப் போன்ற சமய-சமூக -நல்லிணக்க நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் தமிழர் என்ற நிலையோடு ஒருமித்து ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தன் உரையில் குறிப்பிட்டார்
மாந்தநேய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் மானமிகு நாகு பஞ்சு, ‘நினைவில் வாழும்’ டான்ஸ்ரீ உபயதுல்லாவின் பெயரன் டத்தோ வீரா சாகுல் ஹமீது,
மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு பாரதி, மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்திற்கு நன்கு அறிமுகமான ஆளுமையர் பாவலர் சீராகி, பாவலர் பெர்னாட்ஷா, பத்திரிகையாளர் பிதாவுல்லா, மின்னல் பண்பலை வானொலியின் மேனாள் அறிவிப்பாளர்களான வி. ஆறுமுகம், அசன் கனி, நாச்சியா மஸ்ஜித், சந்திரா சூர்யா, கலை வட்டத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புகாரி, டெலிஸ்டார் அமைப்பின் தலைவர் எஸ்பி மணிவாசகம், ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அதிகமான பெண்களும் சிறுவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது


