
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க குடும்ப தின விழா, நாளை ஜனவரி 29ஆம் நாள், காலை 10:00 மணி அளவில் Pusat Komuniti, Taman Koperasi Polis-2, 68100 Batu Caves, Kuala Lumpur என்னும் இடத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள், விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜீவா தலைமையில் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள் வழங்க இருக்கின்றனர். இதனால் சங்கத்தின் உதவித் தலைவர் ஜீவா தலைமையிலான விழா ஏற்பாட்டுக் குழுவினரும் தலைவர் முத்தமிழ் மன்னனும் கடந்த ஒரு மாதமாக பரிசுப் பொருள்களைத் தேடி, அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்களிடம் பெற்று சேகரித்து வருகின்றனர்.

நாளை விழா நடைபெற இருக்கின்ற நிலையில் இன்றுகூட மலேசியத் தமிழ் பத்திரிகை வட்டத்தின் மூத்த புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி, தாமரைக் குழும வர்த்தக நிறுவனத்திடம் இருந்து விவேகத் தொலைபேசி உள்ளிட்ட பரிசுப் பொருள்களை பெற்று வந்து விழா குழுவினரிடம் சேர்த்துள்ளார்.
நாளைய விழாவிற்காக சங்க உறுப்பினர் அனைவரும் உரிய நேரத்தில் வந்து விடும்படி சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சொல்வேந்தர் என்று அழைக்கப்படும் இலக்கிய வேந்தரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தருமானடத்தோஸ்ரீ மு. சரவணன், கோலாலம்பூர் கூட்டுரசுப் பிரதேச பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தலைநகரின் தமிழ்ப் புத்தக சோலை ஜெயபக்தி நிறுவனத்தின் தலைவரும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க ஆலோசகருமான டத்தோ கு.செல்வராஜ், ரத்தினவள்ளி அம்மையார், டத்தோ இராமநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை தரவிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி நாட்டுப் பண், தமிழ் வணக்கப் பாடலுக்குப்பின்
பாரம்பரிய நடனத்துடன் இனிதே தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, வசந்தவாசல் எட்டிப் பார்க்காத மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இந்த விழா ஓரளவு உற்சாகத்தை அளிக்கும்.
இந்த குடும்ப தின விழாவில் கலந்து கொள்ளும் சங்க உறுப்பினர்கள் பண்பாட்டு உடையில் வரும்படி அன்போடு கேட்டுக் கொள்வதாக
தலைவர் முத்தமிழ் மன்னன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.


