
மலேசியாவின் பொது வாழ்க்கையில் ஒரு நீண்ட அத்தியாயம் இன்று நிறைவடைந்து இருக்கிறது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியாரும் மலேசியா வின் முன்னோடி மலாய்ப் பெண் மருத்துவர்-களில் ஒருவருமான துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி, தனது 101-ஆவது வயதில் இன்று காலமானார்.
இன்று, செப்டம்பர் 28, (2026) காலை கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதயக் கழகத்தில் அவர் உயிரிழந்தார்.
அவரின் மறைவை மகன் டத்தோஸ்ரீ முக்ஸானி மகாதீர் உறுதிப்படுத்தினார். நூறு ஆண்டுகளை நிறைவு செய்த அவரின் வாழ்க்கை, மருத்துவம், சமூக சேவை, குடும்பம், பொது வாழ்க்கை என பல தளங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறது.
1926 ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூர் மாநிலம், கிள்ளானில் பிறந்த சித்தி ஹஸ்மா, பத்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தார். பெண்களுக்கு, குறிப்பாக மலாய்ப் பெண்களுக்கு, உயர்கல்வியும் தொழில் முறை கல்வியும் இன்றைய அளவுக்கு எளிதாகக் கிடைக்காத காலகட்டத்தில் அவர் மருத்துவத்தைத் தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்தார்.
சிங்கப்பூரில் உள்ள King Edward VII College of Medicine மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், 1955ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். இத்தகைய வாய்ப்பு பெற்ற முதல் மலாய்ப் பெண்ணும் இவர்தான்
அக்காலத்தில் மலாயாவில் மருத்துவத் துறையில் பணியாற்றிய ஆரம்பகால மலாய்ப் பெண் மருத்துவர்களில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
அதே மருத்துவக் கல்லூரியில் அவருடன் பயின்றவர்தான் பின்னாளில் மலேசியாவின் பிரதமராக உயர்ந்த துன் டாக்டர் மகாதீர் முகமது..

இருவரின் அறிமுகம் பின்னர் வாழ்க்கைத் துணை உறவாக மாறியது. 1956ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், ஏழு பிள்ளைகளின் பெற்றோராகினர்.
இருவரும் அண்மையில் தங்களது 70ஆவது திருமண ஆண்டு நிறைவையும் கொண்டாடினர்.
ஆனால் சித்தி ஹஸ்மாவின் வாழ்க்கையை மகாதீரின் துணைவியார் என்ற ஒரே அடையாளத்திற்குள் அடக்கிவிட முடியாது.
மருத்துவராக அவர் ஆற்றிய பணியே அவரின் தனித்துவமான அடையாளமாகும்.
குறிப்பாக, தாய்–சேய் நலம், கிராமப்புற சுகாதாரம், தடுப்பூசி, சுகாதார விழிப்புணர்வு போன்ற மருத்துவ தளங்களில் அவர் குறிப்பிடத்தக்க பணியினை மேற்கொண்டார்.
1965ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் தாய்–சேய் சுகாதாரத் துறையில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாகவும் 1974ஆம் ஆண்டு அதே மாநிலத்தின் முதல் பெண் தாய்–சேய் சுகாதார அதிகாரியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
கிராமப்புறங்களில் அல்லது தோட்டப்புறங்களில் தாய்-சேய் நல சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட பணிகள் அவரின் மருத்துவச் சேவையின் முக்கிய அத்தியாயமாக அமைந்தன.
பெண்கள் நலம், குடும்பக் கட்டுப்பாடு, குழந்தைகள் நலம், போதைப்பொருள் தடுப்பு, கிராமப்புற கல்வி போன்ற பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.
மகாதீர் பிரதமராக இருந்த முதல் காலகட்டமான 1981 முதல் 2003 வரையிலும், பின்னர் 2018 முதல் 2020 வரையிலான இரண்டாவது காலகட்டத்திலும் அவர் பிரதமரின் துணைவியாராக நாட்டின் பொது வாழ்க்கையில் முக்கியமான இடத்தை வகித்தார்.
அந்தக் காலக் கட்டத்தில் மலேசிய மக்களால் அன்புடன் ‘Ibu Negara’ என்று அழைக்கப்பட்டார்; ஆனால் அரசியல் அதிகாரத்தின் அருகில் இருந்தவர் என்பதைக் காட்டிலும் தான் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்காக, அவர் தனித்த அடையாளத்தைப் பெற்றார்.
1995ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மாநாட்டில் மலேசியக் குழுவை வழிநடத்தியதும் 1997 முதல் 2012 வரை மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகப் பணியாற்றியதும் அவரது பொது வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பகுதிகளாகும்.
2000ஆம் ஆண்டு ஈராக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது சர்வதேசத் தடைகளால் ஏற்பட்ட மனிதாபிமான பாதிப்புகளை அறிய அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட மனிதாபிமானப் பயணமும் அவரின் சமூக அக்கறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகப் பதிவாகியுள்ளது.
ஹஸ்மா, முதுமையை எட்டியபோதும் கற்றலையும் ஆர்வத்தையும் அவர் கைவிடவில்லை. வயதான காலத்தில் மீண்டும் வயலின் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினார்; பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டார்; சீன பாரம்பரிய இசைக்கருவியான எர்ஹு வாசிப்பிலும் ஆர்வம் காட்டினார்.
இதன் மூலம் வயது என்பது எந்த முன்னெடுப்பிற்கும் கற்றலுக்கும் ஒரு தடையல்ல என்பதை தன் வாழ்க்கையால் உணர்த்தினார்.
2026 ஜூலை 12ஆம் தேதி தன் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடி, அதேநாளில் நூற்று ஒரு வயதை எட்டினார் சித்தி ஹஸ்மா.
இவரைப் போலவே 101 வயதான மகாதீரும் இணைந்து வாழ்ந்த அந்தத் தருணம், மலேசியாவின் பொது வாழ்க்கையில் அரிதான குடும்பப் பதிவாக அமைந்தது.
ஒரு மருத்துவராகத் தொடங்கிய வாழ்க்கை, ஒரு பிரதமரின் துணைவியார் என்ற பொறுப்பைத் தாண்டி, சமூக நலப் பணியாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆதரவாளர், கல்வியாளர், மனிதாபிமானப் பணியாளர் என பல பரிமாணங்களைத் தொட்டது.
ஒரு நூற்றாண்டு என்பது வெறும் காலத்தின் அளவு மட்டும் அல்ல; அந்தக் காலத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் தடங்களின் வெளிப்பாடும் கூட;
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் வாழ்க்கை அத்தகைய தடங்களால் நிறைந்தது.
மருத்துவம் அவருக்கு தொழிலாக இருந்தது;
சமூக சேவை அவருக்கு கடமையாக இருந்தது;
குடும்பம் அவருக்கு வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தது;
நாடு அவருக்கு பணியாற்ற வேண்டிய தளமாக இருந்தது.
நூறு ஆண்டுகளின் பயணத்தை நிறைவு செய்து இன்று விடைபெற்றுள்ள துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் நினைவு, மலேசியாவின் வரலாற்றிலும் குறிப்பாக மருத்துவம் மற்றும் சமூகச் சேவையின் வரலாற்றிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
நூற்றாண்டு வாழ்ந்த ஒரு மருத்துவர்…
நாட்டின் பொது வாழ்வில் நிதானமாக நடந்த ஒரு பெண்…
சமூகத்தின் நலனுக்காக வாழ்ந்த ஒரு மனிதநேய உள்ளம்…
இன்று நம்மிடையே இல்லை.
அவர்மீதான நினைவுக்கு அஞ்சலி.
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
— குமரி வான்முற்றம்.


