Monday, October 5, 2026

நூலாசிரியர்கள் முத்தரசனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்: -இணைவேந்தர் டத்தோஸ்ரீ மு.சரவணன்

“சாரம் இல்லாத கட்டுரைகளும் கவிதைகளும் காலவோட்டத்தில் காணாமல் போகும். சமுதாய வரலாற்றையும் தலைவர்களின் சாதனையையும் உள்ளடக்கிய நூலை இயற்றினால்தான், அது காலத்தால் நிலைத்து நிற்பதுடன், நாளைய தலைமுறைக்கும் இத்தகைய படைப்புகள் ஆவணமாக விளங்கும்; அந்த அடிப்படையில், எழுத்தாளார்கள் இரா.முத்தரசனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன் தெரிவித்தார்.

மஇகாவின் ஆறாவது தலைவரான டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு விழா தொடர்பில், நேற்று தலைநகரத்து செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையையும் நூல் வெளியீட்டுரையையும் கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான சரவணன் ஒருசேர ஆற்றினார்.

‘தான்ஸ்ரீ மாணிக்கவாசகம்: நினைவுகள்-சிந்தனைகள்-சாதனைகள்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆங்கில-தமிழ் பதிப்புகள் நேற்று வெளியிடப் பட்டன. இரண்டையும் இயற்றியவர், அரசியல் ஆய்வாளரும் நூலாசிரியரும் பத்திரிகை ஆசிரியரும் வழக்கறிஞருமான இரா. முத்தரசன்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் 1973 முதல் 1979-இல் அவர் காலமாகும்வரை கட்சிக்குத் தலைமை தாங்கினார்; மேலும் மலேசியாவின் முதல் மூன்று பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் உசேன் மற்றும் உசேன் ஓன் ஆகியோரின் அமைச்சரவைகளில் அவர் பணியாற்றினார்.

மலேசியாவின் வளர்ச்சியில், குறிப்பாக போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில், மாணிக்கவாசகம், அவருக்கு முந்தைய துன் சம்பந்தன், பிந்தைய துன் ச.சாமிவேலு போன்ற மஇகா முன்னாள் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக சரவணன் பெருமைமிகக் கூறினார்.

சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மாணிக்கவாசகம் ஆற்றிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார்; இதுவே பின்னர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. அதேபோல, நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தின் உருவாக்கத்தில் ‘நினைவில் வாழும்’ துன் சம்பந்தன் ஆற்றிய பங்கும் இதில் அடங்கும். மலேசிய-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிரிந்ததைத் தொடர்ந்து, மலேசியன் ஏர்லைன் சிஸ்டம் (MAS) நிறுவப்பட்டதிலும் மாணிக்கவாசகம் ஆற்றிய பங்கை சரவணன் சுட்டிக்காட்டினார்.

“இந்திய சமூகத்திற்குத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை, தற்பொழுது அது பேரளவில் முன்னெடுக்கப் படுவதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகம் அதுகுறித்து உணர்ந்திருந்தார்” என்று அவர் கூறினார்.

“சமூகத்தை மாற்ற விரும்பினால், அதைக்கல்வி வாயிலாக மட்டுமே சாத்தியமாக்க முடியும்” என்று சரவணன் கூறினார்

கட்சியின் முன்னாள் தலைவர்களின் பங்களிப்புகள் குறித்த வரலாறு போதுமான அளவு ஆவணப்படுத்தப்படாததால், அவை மறக்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாக மஇகா துணைத் தலைவருமான அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மலேசியாவின் வளர்ச்சியில், குறிப்பாக போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில், வி. மாணிக்கவாசகம் உள்ளிட்ட மஇகா முன்னாள் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அதன் இந்நாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மஇகாஆற்றிய பங்களிப்புகள் குறித்து இந்திய இளைஞர்கள் கேள்வி எழுப்புவதைக் குறை கூறக்கூடாது; ஏனெனில், கட்சியின் முன்னாள் தலைவர்களின் சாதனைகளை முறையாக ஆவணப்படுத்தத் தவறியது கட்சியே என்று தாப்பா மக்கள் பிரதிநிதியுமான சரவணன் கூறினார்.

“கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் குறித்த நேரில் அறிந்திருக்கும் கடைசித் தலைமுறையாக தற்போதைய தலைமுறை இருக்கலாம். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இவை அனைத்தையும் நாம் முறையாக ஆவணப்படுத்தாவிட்டால், இந்த வரலாறு அழிந்துவிடக்கூடும். நாம் என்ன செய்தோம், என்ன பங்களிப்புகளை வழங்கினோம் என்பது அடுத்த தலைமுறைக்குத் தெரியாமல் போய்விடும்” என்று அந்த விழாவில் அவர் மேலும் பேசினார்.

1973-இல் மஇகா தலைமையகத்தை துன் மாணிக்கவாசகம் கட்டியபோது எவ்விதக் கடனும் பெறாமல் அது கட்டி முடிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்; மாணிக்கவாசகத்தின் தலைமையின் கீழ் நிகழ்ந்த இந்தச் சாதனை, கட்சியின் வரலாற்றில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை