
இணைய ஊடக இளையர் பட்டாளம் 20 மணி நேரம் இடையறாது சமய- சமூக சேவை!!
மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தில் காலத்திற்கு ஏற்ற மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள இணைய ஊடகங்களான தமிழ் லென்ஸ், தினத்தந்தி ஆகியவற்றின் சார்பில் இளம் ஊடகர்கள் 2025 தைப்பூச திருநாள் தொடர்பில் தண்ணீர் பந்தல் அமைத்து ஏறக்குறைய இருபது மணி நேரம் இடையாது சமய சேவையுடன் சமூகப் பணியையும் ஒருங்கே ஆற்றினர்.
பிப்ரவரி 11 தைப்பூச நன்னாள் தொடர்பில் ஒன்பதாம் நாள் முன்னிரவில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தேர் புறப்பட்டு பத்து மலை திருத்தலத்தை நோக்கி பயணித்தது.

இந்தத் தேர்ப் பாதை நெடுகிலும் பல தரப்பினரும் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவினர்
கோலாலம்பூரில் இருந்து பத்து மலைக்கு தமிழ் கடவுள் திருமுருகன் வீற்றிருந்த தேருடன் நடந்து வந்த இறை அன்பர்களுக்கும் பொது மக்களுக்கும் சுவை நீர், குடிநீர், சிற்றுண்டி, பழ வகை, இனிப்பு பண்டங்கள் என அவரவர் எண்ணத்திற்கும் பொருள் வசதிக்கும் ஏற்ப வழங்கினர்.
இத்தகைய சமய- சமூக சேவையை தமிழ் லென்ஸ், தினத்தந்தி இணைய ஊடகங்களின் பொறுப்பாளர்களும் செய்தியாளர்களும் இணைந்து பல்லாயிரக்கணக்கானோருக்கு இடையறாது 20 மணி நேரம் வழங்கியது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லென்ஸ் இணைய ஊடகத்தின் ஆசிரியர்-நிறுவனர் வெற்றிவாணன் விக்டர், தினத்தந்தியின் ஆசிரியர் செ. வே. முத்தமிழ் மன்னன் நிறுவனர் பா. புவனேசுவரன் ஆகியோரின் முன்னெடுப்பிலும் பவளச் செல்வன், தினத்தந்தி காளிதாசன், தமிழ் லென்ஸின் தி. காளிதாசன், இ. காளிதாசன் மற்றும் ஏனைய தம்பிமார் எல்லோரும் ஒன்று சேர்ந்து முதல் நாள் பகலில் இருந்தே இரு பந்தலையும் ஒரு பந்தலாக இணைத்து தேவையான பொருள்களை சேகரித்து தயார் நிலையில் இருந்தனர்.

மக்கள் நீதி கட்சி-பி. கே.ஆர். கோல குபு பாரு வட்டாரத்தின் பொறுப்பாளரும் மருத்துவருமான டாக்டர் சத்திய பிரகாஷ், இந்த நிகழ்வை முறைப்படி பூஜையுடன் தொடங்கி வைத்து ஏற்பாட்டாளர்களுக்கு நன்கொடையும் அளித்து உதவினார்.
இரவு முழுவதும் கண் துஞ்சாமல் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த இளவல் யாவரும் பொழுது புலர்ந்ததும் அச்சு ஊடகங்களான மலேசிய நண்பன், மக்கள் ஓசை, பருவ இதழ் தென்றல் ஆகியவற்றின் ஆசிரியர்களை வரவழைத்து ஆடையும் மாலையும் அணிவித்து சிறப்பித்தனர்.
இதற்கு முன்னம், வெள்ளி முளைக்கும் வேளையில் மஇகா தேசிய துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு சரவணன் மஇகா சார்பில் தேர் முருகனுக்கு பூஜை செய்தபின் வந்து சேர்ந்தார்; அவருக்கும் தமிழ் லென்ஸ்- தினத்தந்தி ஊடகங்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

பிப்ரவரி பத்தாம் நாள் பொழுது விடிந்து பத்து மணி அளவில் தமிழ் லென்ஸ் தினத்தந்தி ஊடகங்களின் தண்ணீர் பந்தலை முருகத்தேர் கடந்த பொழுது 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு பூசை நடத்தப்பட்டது.
தேர் கடந்தபின் பந்தல் அலங்காரம் களையப்பட்டு அந்தப் பகுதியையும் சுத்தம்செய்தபின், ஏறக்குறைய நண்பகல் வேளையில் இணைய ஊடகர் பட்டாளம் கலைந்து சென்றது.
வாழ்க தமிழ் இணைய ஊடகம்! வளர்க இத்தகைய பொதுநலப் பாங்கு!!
.


