
இன்று கோல்பீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிந்த மாணவர்களுக்கு எழுத்தறி விழா சிறப்புற நடத்தப்பெற்றது. இவ்விழாவைத் திருக்குறள் ஓதியும் மக்கள் பேறு கல்வி எனும் அதிகாரக் குறள்களை விளக்கம் செய்தும் நான் நடத்தி வைத்தேன்.
பெற்றோர் மாணவர்களின் கரங்களைப் பற்றி அரிசி பரப்பிய தட்டில் அகரம் எழுதிப் பயிற்றினர். அதன் பின்னர் மாணவர்கள் தம் பெற்றோரிடம் வாழ்த்து பெற்றனர். பெற்றோர் பிள்ளைகளை மலர் தூவி வாழ்த்தினர்.

பெற்றோரே இதுமுது குரவர் எனப்படுவார். பிள்ளைகட்குப் பெற்றோரே முதல் ஆசிரியர்கள். ஆசிரியர், பள்ளியில் பெற்றோருக்கு நிகராக விளங்குபவர்கள். பள்ளி என்பது தங்கிப் பயில்வது எனப் பொருள் தரினும் இன்று ஆகுபெயராகிப் பொதுச்சொல்லாயிற்று. மனத்தில் கல்வியைப் பதியச் செய்வதே பாடம். படிவது பாடமாகும். அரி என்பது எழுத்தைக் குறிப்பது. எழுத்து ஒலியைக் குறிக்கும். தமிழ் எழுத்துகள் அரி எனச் சொல்லப்பெற்று தமிழ் நெடுங்கணக்குச் சுவடி அரிச்சுவடி எனச் சொல்லப்பெற்றது. வாயை மூடித் திறந்தாலே எழும் ஒலி அகரமே. எல்லா மொழிகளுக்கும் அகரமே முதன்மையாகும். எனவே அகரம் முதன்மை எனும் பொருளையும் தந்தது. இதனால் குழந்தைகளுக்கு நற்றமிழில் அகரன் எனவும் நம்மவர் பெயரிடுவர்.
நல்லறிவும், நல்லன்பும், நற்பண்பும், நல்லொழுக்கமும் , உடலைப் பேணிப் புரக்கும் உடற்பயிற்சிக் கல்வியும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டப்பெறும்.
மாணவர்கள் கல்விகேள்களில் சிறந்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும் என நான் வாழ்த்தினேன்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்குத் தலைமையாசிரியர் இனிப்பு வழங்கினார். மாணவர்களுக்கு எழுதுகோல்களை நான் வழங்கினேன். இறுதியாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்த்திரு மகேசுவரன் அவர்கள் மாணவர்களை வாழ்த்தியும் பெற்றோர்களுக்கு வழிகாட்டியும் நல்லுரை வழங்கினார். தலைமையாசிரியர் அவர்களும் மாணவர்கள் வாழத்தியும் பாலாராட்டியும் உரை வழங்கினார். ஆசிரியர் உமாதேவி அவர்கள் நிகழ்ச்சியைத் திறம்பட வழிநடத்தினார்.
(சொல்லறிஞர், மலேசியத் தமிழ் நெறி கழக தேசியத் தலைவர் இரா. திருமாவளவனார் அனுப்பிய கல்விசார் தகவல்)


