
நாட்டின் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் வேகானந்தன் தொடங்கிய கோலாலம்பூர்- சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தை தொடர்ந்து செழிக்கச் செய்தவரும் மலேசியத் தமிழ் சமூகத்தில் குறிப்பாக தமிழ் இலக்கிய வட்டத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நன்கு அறியப்பட்ட தமிழ்த் தொண்டரும் சமூக உணர்வாளருமான அம்பாங் சுப்ரா மண்ணுலக வாழ்வை நிறைவு செய்தார், நிறைவாக!.
அண்மைக் காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சுப்ரா நேற்று இயற்கை எய்தினார்.

இன்று நடைபெற்ற அவருடைய இறுதி மரியாதை நிகழ்வில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதி டத்தோஸ்ரீ சரவணன், மலேசிய திராவிடர் இயக்க மூத்த தலைவர் மானமிகு இரெ.சு. முத்தையா, மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழக தேசியத் தலைவர் மானமிகு நாக பஞ்சு, தமிழ்ப் பள்ளிகளின் ஆதரவாளர் ஓம்ஸ் தியாகராஜன்,
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தேசிய உதவி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டத்தோ சி சந்திரன், மலேசிய தமிழ்ச் சமூகத்தின் சிறந்த கல்வி ஆளுமையருள் ஒருவரான டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் மஇகா அம்பாங் தொகுதித் தலைவரும் மஇகா தேசிய அமைப்புச் செயலாளருமான டத்தோ ந. முனியாண்டி, தமிழ் நெஞ்சரும் சுயமரியாதை உணர்வாளருமான பெ.மு. அன்பு இதயன், அம்பாங் சுப்புராவின் வலக்கரமும் இடக்கரமுமாக செயல்பட்ட ஜோசப் செபஸ்டியன், வர்த்தக பிரமுகரும் சமூக ஆர்வலருமான ரெகோ இராசு, மருத்துவர் என். ஜி. பாஸ்கரன், கோலாலம்பூர்- சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தைச் சேர்ந்த மதியழகன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கோலாலம்பூர் – சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தை தொடங்கி செம்மையாக நடத்திவந்த ‘விவேகச்செல்வர்’ விவேகானந்தன், தன்னுடைய பத்திரிகையைப் பணியின் காரணமாக அதை 2004 ஏப்ரல் திங்கள் ஆறாம் நாளில் அம்பாங் சுப்ராவிடம் ஒப்படைத்தார்.
அது முதல் இதுவரை கடந்த 21 ஆண்டுகளாக கோலாலம்பூர்- சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தை திறம்பட நடத்தி வந்த அன்பாங் சுப்ரா, கோலாலம்பூரில் நடைபெற்ற அத்துணை தமிழ் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்வுகளின் நிரந்தர ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

தவிர சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதி சங்கரர் திருமடம், ஆதரவற்றோர் இல்லம், தெய்வீக வாழ்க்கைச் சங்கம் உள்ளிட்ட இடங்களில் தேவார திருவாசக வகுப்புகளை நடத்தியதுடன் குறிப்பாக திருக்குறள் பரப்புரையையும் மிகுதியாக மேற்கொண்டவர் அம்பாங் சுப்ரா.
இவரின் தமிழ்த் தொண்டும் சமூகப் பாங்கும் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் எந்நாளும் நினைவுகூரப்படும்.

அம்பாங் சூப்பராவின் மறைவை ஒட்டி குமரியும் தன் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறாள்!


