
புரட்டுவாதங்களை முரட்டுத்தனமாக எடுத்து வைத்துவரும் சீமான் பச்சையான தமிழ் துரோகியாகத் தெரிகிறார்- திரிகிறார்; இவரின் எண்ணம் ஒருகாலும் ஈடேறாது. தவிர, கூடியவிரைவில் இவர் தமிழ் சமுதாயத்தில் அம்பலப்பட்டு நிற்பார் என்றும் சிறம்பானைச் சேர்ந்த மருத்துவர் பாரி தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் தந்தை பெரியார் என்று யுனெஸ்கோ மன்றமே அறிவித்த பின்னும் தமிழ்நாட்டை பெரியார் மண் கிடையாதென்றும் பெரியாரே வெறும் மண்தான் எனவும் மனம்கூசாமல் பேசி இருக்கும் சீமான், இதேப் பெரியார் கொள்கையைப் பேசும் சுயமரியாதை மேடைகளில் ஏறித்தான் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார் என்பதை ஊரும் உலகம் அறியும்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழின் பழம்பெருமையை பேசுவதற்கு பதிலாக அதில் அறிவியல் புத்தாக்கம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக காட்டுமிராண்டி மொழி என்று எப்போதோ ஒரே ஒருபொழுதில் சொன்னதை பிடித்துக் கொண்டு பெரியார் தமிழ் மொழியை தாழ்த்தியதாக சொல்லிக் கொள்ளும் தமிழ்த் துரோகியர் வரிசையில் சீமானும் இணைந்திருப்பதன்வழி அவர் ஒரு பார்ப்பனிய கைக்கூலியாகவும் இரைதேடியாகவும் மாறிவிட்டார் என்பது புலனாகிறது.

கற்புக்கரசியான ஒரு பெண் பெய் என்று சொன்னால் வானம் மழை பொழியும் என்பதை போன்ற கருத்துக்கள் மறைபொருளாக விளங்கினாலும் அது சமூகத்தில் நேரடியாக பொருள் கொள்ளப்படுவதால் இதுவெல்லாம் பிற்போக்குத் தனமான கருத்து என்று ஒரு கட்டத்தில் சாடிய பெரியார்தான் திருக்குறளுக்கு அபாரமாக மாநாடு நடத்தினார் என்பதை எல்லாம் இருட்டடிப்பு செய்து ஆரியத்தின் கைக்கூலியாகவும் தமிழின துரோகியாகவும் மாறிவிட்ட சீமானின் வெற்றுவாதம் ஒருகாலும் தமிழர்களிடம் எடுபடாது.
புதுடில்லியில் பார்ப்பனர்களின் ஆதிக்க ஆட்சி நடைபெறும்வரை சீமானின் புரட்டும் தமிழின துரோகமும் தொடர்ந்து கொண்டிருக்கும். இது, காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் நீடிக்காது; கூடிய விரைவில் எல்லாமும் மாறும் அப்பொழுது சீமான் இருக்கும் இடம் தெரியாமல் போவார்; தமிழ்ச் சமுதாயத்தில் அம்பலப்பட்டு களங்கப்படுவார் என்பதை தமிழர்கள் விரைவில் காண்பர்.
பார்ப்பனிய சூது வட்டம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் தமிழின விரோத அம்பாகிய சீமான், இப்படியே காலமெல்லாம் திரிய முடியாது.
அவர் தட்டுப்பட்டு நிற்கும் குட்டிச்சுவர் கூடிய விரைவில் எழுப்பப்படும். இதை தமிழக தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் காண்பார்கள் என்று அண்மையில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், சீமானின் நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபெற்ற சந்திப்பில் சிரம்பான் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சுயமரியாதை உணர்வாளரும் பகுத்தறிவாளருமான மருத்துவர் நா. பாரி தெரிவித்தார்.


