Saturday, September 12, 2026

2025 திருமுறை மாநாடு சைபர்ஜெயாவில் தொடங்கியது!

திருமுறையே சைவநெறிக் கருவூலம் என்னும் கருப்பொருளின் அடிப்படையில் மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள 2025 திருமுறை மாநாடு இன்று மாலையில் சைபர்ஜெயா பல்கலைக்கழக வளாகத்தில் முறைப்படி தொடங்கியது.

மறைநாயகனான பரமனருளும் மறைபொருளாம் திருவருளை நாடியும் மலேசிய இந்துப் பெருமக்களிடம் திருமுறை குறித்து இன்னும் பாரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மலேசிய இந்து சங்கம் இந்த ‘திருமுறை மாநாடு-2025’-ஐ ஏற்பாடு செய்ததாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார்.

இருநாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமுறை மாநாடு இன்று சனிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

முன்னதாக திருமுறைப் பெட்டகத்தை ஆகம முறைப்படி இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் இன்னிசை முழங்க மேடைக்கு சுமந்து வந்தார்.
தொடர்ந்து திருமுறை கண்ட நாள் குறித்து சிறுவர்கள் பங்கு கொண்ட குறு நாடகம் இடம்பெற்றது.

மலேசிய இந்து சங்கத்திற்கு மகுட நிகழ்வாக அமையக் கூடிய இந்த நிகழ்வில், ஒப்பிலா, உயர்விலா நன்மறைக்கவிவாணரெனும் நாயன்மார் சிவசான்றோர் பெருமக்களால் இயற்றப்பெற்ற பாடல்களான திருமுறையை, சைவ நெறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து இந்து பெருமக்களும் வாழும்போதில் அன்றாடம் ஓதி உணர வேண்டும் என்னும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பரந்த அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தங்க கணேசன் தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்க தேசிய துணைத்தலைவர் கணேஷ் பாபு, தேசிய பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட தேசிய பொறுப்பாளர்கள், மாநில பேரவைத் தலைவர்கள், நூற்றுக்கு மேற்பட்ட வட்டாரப் பேரவை பொறுப்பாளர்கள், இந்து சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமய சான்றோர்கள் உட்பட ஏராளமானோர் திரண்ட இந்த மாநாடு இரவு ஒன்பது மணி அளவில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மார்ச் இரண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி அளவில் மீண்டும் தொடங்க இருக்கின்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சி மாலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்வில் சிவநெறி குறித்து ஏராளமான உரைப்பொழிவுகள் சான்றோர் பெருமக்களால் ஆற்றப்பட இருக்கின்றன.

இதில் கலந்து சைவ அன்பர்கள் பயன் பெறும்படி மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது..

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை