
முதலில் நாடு; அடுத்து நம் கூட்டு சமுதாயம்; அதற்குப் பிறகுதான் பிற அத்தனையும் என்பதை மக்களும் தலைவர்களும் முதலில் உணர வேண்டும்.
ஏரா பண்பலை வானொலியின் அறிவிப்பாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மன்னிப்பு கேட்டு விட்டனர். அவர்கள் தங்களின் தவறான செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை. ஏதோ போகிற போக்கில் செய்ததற்கு கடும் கண்டனம் தேசிய அளவில் எழுந்ததும் முதல் வேலையாக அவர்கள் மன்னிப்பு கேட்டனர். பத்துமலை திருத்தலத்திற்கும் சென்று மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் போலீஸ் படை தலைமையகத்திற்குச் சென்று விசாரணைக்கும் ஆளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட வானொலி நிறுவனத்தின் பொறுப்பாளர்களும் அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதற்கும் மேலாக அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது?
மன்னிக்கும் மாண்பையும் மாணிக்கத் தன்மையையும் சமூகம் இழந்துவிட்டதோ என்று என்னிடத் தோன்றுகிறது.
அந்த மூவரும் தனி மனிதர் கிடையாது; அவரவருக்கும் குடும்பம் இருக்கிறது. குறிப்பாக, தற்போதைய பண்டிகைக் காலத்தில் திடீரென்று அவர்களை பணி நீக்கம் செய்தால் அந்தந்த நபர் சார்ந்த குடும்பத்தினரின் நிலை என்ன ஆகும் என்பதைப் பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திக்கவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பதாக இரு தினங்களுக்கு முன்பே இந்த நாட்டின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுத்துள்ள மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் மிகவும் பாராட்டிற்குரியவர்.
நாட்டில் சமய நல்லிணக்கமும் சமூக ஒருங்கிணைப்பும் நீடித்தால்தான்- வலுப்பட்டால்தான் நாடும் மக்களும் சிந்தாமல் சிதறாமல் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும்.
ஏதோவொரு சிறு புள்ளியில் முட்டி மோதி நின்றால் நாட்டு மக்களின் முன்னேற்றப் பயணம் நிலைகுத்தி நிற்கும்.
இப்பொழுது மலேசிய இந்தியர் காங்கிரஸ்-ம.இ.கா. முன்னாள் உதவி தலைவர்களில் ஒருவரும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற மேலவையின் இந்நாள் உறுப்பினருமான சி. சிவராஜ் இதே நல்லிணக்கக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர், மலேசிய இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் நல்லிணக்கப் பிரதிநிதியாகத் திகழ்கிறார்.
சம்ரி வினோத் என்னும் சமய பிரச்சாரகர்-வெறுப்பு பேச்சாளர் அடிப்படையில் மதம் மாறியவர்;
பொதுவாக பண்ணையாரைவிட அடியாட்கள்தான் அதிகமாக துள்ளிக் குதிப்பார்கள்; ஏனென்றால் அவருக்கு பண்ணையாரின் பாதுகாப்பு இருக்கிறது. அதைப்போலத்தான் ஸம்ரி வினோத்தும்.

வெறுப்பு பேச்சை முன்னெடுப்பதற்காகவே அவர் கொம்பு சீவி விடப்படுகிறார் என்பதை நாட்டில் வாழ்கின்ற இந்து மக்கள், குறிப்பாக ஆன்மீக தலைவர்கள், அவர்களுக்கும் மேலாக அரசியல் தலைவர்கள் முதலில் உணர வேண்டும்.
சமய விவகாரங்களை துருப்புச் சீட்டாகக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் தலைவர்கள் இறங்க வேண்டாம் என்று எவர் பெயரையும் குறிப்பிடாமல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே சாடி. இருக்கிறார்.
அவரின் கருத்து அடிப்பவனை விட்டுவிட்டு அடி வாங்குபவனையோ அல்லது தடுத்தாடுபவனையோ சாடுவதாக இருக்கிறது.
இந்தக் கருத்தில் பொதிந்துள்ள ஆழமான உண்மையை அனைத்து தரப்பினரும் ஆழமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலாகட்டும் ஆன்மீகமாகட்டும் வேறு எதுவாகவோ இருக்கட்டும் வாழ்க்கைப் பயணத்தில் சிற்சில வேளைகளில் அநீதிக்கும் ஆட்பட வேண்டிய மனநிலையை மக்கள் பெற வேண்டும். இத்தகைய தன்மை தலைவர்களிடம் இல்லாதது வருத்தத்திற்குரியது.

அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள்வரை தமிழினம் இந்து சமயத்தை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றதென்று எவராலும் கூற முடியாது.
கூடுவிட்டு கூடு பாய்வதைப் போல ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதத்திற்கு மாறுவதில் பெயர் பெற்றவர்கள், தமிழர்கள்.
தொடக்கத்தில் இடி, மின்னல், காட்டாற்று வெள்ளம் உள்ளிட்ட இயற்கையின் வெளிப்பாடுகளைக் கண்டு அஞ்சிய மனிதன் அந்த இயற்கையைத்தான் வழிபட்டான். பிறகு குமரி என்னும் பெண் தெய்வ வழிபாட்டை முன்னெடுத்தனர் காலப்போக்கில் ஆசீவகம் என்னும் அறிவியல்சார் சமயத்தையும் பின் அடுத்தடுத்து பௌத்தம், சமணம், சைவம் என்றெல்லாம் மதம் மாறியவர்கள் இப்பொழுது சைவத்தை விழுங்கிவிட்ட இந்து சமயத்தை பின்பற்றுகின்றனர் .
இப்பொழுது கூட, ஏதோ ஒரு புள்ளியில் இன்னொரு சமயம் புதிதாக உருவானால் இந்து சமயத்தை கைவிட்டுவிட்டு புதிய சமயத்துக்கு மாறுவதற்கு கொஞ்சமும் தயங்காதவர்கள் தமிழர்கள். அவர்களின் சமய பாரம்பரியம் அப்படித்தான் தொடர்கிறது.
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கின்ற இந்து சமயத்தில் சாய்பாபா வழிபாட்டு முறையும் இருக்கிறது; அதற்கும் 100 பேர் கூடுகின்றனர் என்றால் தமிழர்களிடம் என்ன சமய ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கிறது என்று தெரியவில்லை.
இத்தகைய சூழலில், இந்து சமயத்தை சிறுமைப்படுத்த வேண்டும்; தாழ்த்த வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் வந்து வந்து வான் வீதியில் கருத்து பதிவிடும் ஸம்ரி வினோத் போன்றவர்களின் சூழ்ச்சிக்கு தலைவர்களே பலியானால் பாமர மக்களின் நிலை என்னவாகும்?
ஸம்ரி வினோத்தின் வேலையே இதுதான்; இந்து சமயத்தில் ஏராளமான பலவீனங்கள் இருக்கின்றன. அவை அத்தனையையும் மொத்தமாக அறிந்தவர் அந்த வினோத்.
கடந்த ஆண்டு சிவராத்திரி முடிந்தவுடன் சிவலிங்க வழிபாட்டை இழித்தும் பழித்தும் பேசியவர் இதே ஸம்ரி வினோத். அப்போதும் இந்து சங்கமும் இந்து மக்களும் வெகுண்டு எழுந்தனர்.
அந்த சமயத்தில் லிங்க வழிபாடு குறித்து நேரடியான விவாதத்திற்கு வரும்படி இந்து சங்க பொறுப்பாளர்களை அழைத்தார் வினோத். ஆனால் அவரை எதிர்கொள்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை.
கடும் மழையின்போது, வானத்தில் திடீரென்று எழும் மின்னல் என்னும் மின் பேராற்றல் பூமியில் இறங்குவதற்காக ஏதாவது கிடைக்கிறதா என்று பாய்ந்து வரும். அதைப்போல சம்ரி வினோத்தும் இந்து சமயத்தையும் இந்துக்களையும் பழித்துப் பேசுவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று அலைபாயும் மனதுடன் காத்திருப்பவர்.
இப்பொழுது ஏரா பண்பலை வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் தைப்பூச காவடி ஆட்டம் குறித்து கேலியும் கிண்டலும் கலந்து வெளியிட்ட காணொளிக் காட்சி அவருக்கு ஒரு துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது.
தைப்பூச காவடி ஆட்டம் குறித்து பகடியும் சிறுமையும் கலந்து ஸம்ரி வினோத் வெளிப்படுத்திய சண்டித்தன கருத்திற்கு சமய எல்லையில் இருந்து பொருத்தமான விளக்கமும் மறுப்பும் வந்திருக்க வேண்டும்.

அந்த மட்டில் முடித்து வைத்திருக்கப்பட வேண்டிய இந்த விவகாரத்தை மஇகா தேசிய துணைத் தலைவர் தன்னுடன் விவாதத்துக்கு வரும்படி ஸம்பரியை அழைத்திருப்பது, இந்தச் சிக்கல் இன்னொரு பரிமாணத்தை எட்டும்படி செய்திருக்கிறது
பொதுவாக சமய விவகாரங்களில் மலேசிய அரசியல் தலைவர்கள் இந்த அளவுக்கு அடித்தாடும் விதமாக களத்தில் இறங்குவது அத்துணை பொருத்தம் அல்ல; நாட்டிற்கும் கூட்டு சமுதாயத்திற்கும் இத்தகைய போக்கு நன்மை தராது.
கடந்த ஆண்டு நவராத்திரி பூசை சமயத்தில் தமிழ்ப் பள்ளிகளில் வழிபாட்டுத் தலங்களைப்போல கொலு வைத்து அர்ச்சகரை அமர்த்தி சமஸ்கிருத மந்திரம் ஓதலாமா என்று மாந்தநேய திராவிடர் கழகம் கேட்டு இருந்ததற்கு பதில் சொல்ல முடியாத ஒரு சமயக் குழுவினர், குறிப்பாக RSS சார்பாக, தமிழ்ப் பள்ளிகளில் சரஸ்வதி வழிபாடு கூடாது என்று மாந்தநேயே திராவிடர் கழகம் கேட்பதாக போலி காணொளி வெளியிடப்பட்டது. இதைப் பற்றி தீர விசாரிக்காத சரவணன், உடனே மாந்தநேயர் திராவிட கழகத்தின்மீது தன் கண்டனக் கணையை வீசினார்.
அது, அக்கப்போராக பேசித் திரியும் ஒரு சிலரின் வாய்க்கு அவல் இட்டதைப் போல ஆகிவிட்டது.
அந்த சமயத்தில் தமிழ் பாங்கு அடியோடு இல்லாத ஒரு பெண், திராவிட இயக்க கருத்தியல் தலைவர் தந்தை பெரியாரை கஞ்சா பார்ட்டி தலைவர் என்று விமர்சனம் செய்தது. அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார் ஓம்ஸ் தியாகராஜன்.
சமயக் காவலராகவும் ஆன்மீக தலைவராகவும் உருமாற்றம் கண்டுள்ள சரவணன், இந்த அப்பட்டமான போக்கிரித்தனத்தை கண்டிக்கவில்லை.
அவரின் இத்தகைய மதப்பித்துதான் சம்ரி வினோத்தைப்
பார்த்து ‘ஒற்றைக்கு ஒற்றை வருகிறாயா என்னும் விதத்தில் நேரடி விவாதித்திற்கு அழைக்கத் தூண்டி உள்ளது.
வழிபாட்டுத்தளங்கள் ஒரு முறை அரசாங்கத்திடமிருந்து மானியத்தை பெற்று விட்டால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய உதவி கிடைக்காது என்று ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்த பொழுதும், சமயத் தலைவர்களை முந்திக்கொண்டு முதலில் கண்டனம் தெரிவித்தவரும் சரவணன்தான்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயரின் நெற்றியில் இருப்பது சுடுகாட்டு சாம்பலா என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டது அதுவும் நாடாளுமன்றத்தில், மிகமிக அருவருக்கத்தக்கது
அரசியல் தலைவர்கள் மத எல்லையில் குதிப்பது நாட்டிற்கு நல்லதல்ல. ஆன்மீகத்தை வளர்ப்பதற்காகத்தான் சமய அமைப்புகள் இருக்கின்றன.
மலேசிய இந்தியர்களின் அரசியல் பேரியக்கமான ம.இ.கா.விற்கு தேசிய துணைத் தலைவர் மட்டுமல்ல; பன்னாட்டுத் தரத்திலான தனியார் உயர்க்கல்வி நிறுவனமான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர்; கண்ணதாசன் அறவாரியம் என்னும் இலக்கிய அமைப்பின் தலைவருமான டத்தோஸ்ரீ மு சரவணன், இன்று உலக அளவில் அறியப்படும் மலேசிய தமிழர் தலைவராக விளங்குறார்.
அவரின் அரசியல் ஆளுமை, இலக்கிய நயம் சார்ந்த பேச்சாற்றல் ஆன்மீக பட்டறிவு போன்றவற்றால் இந்த நிலையை அவர் எட்டி இருக்கிறார்.
இத்தகைய தகுதியை உடையவரான சரவணன், சாதாரண சம்ரி வினோத்துடன் நேருக்கு நேர் இந்து சமயம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் சரவணன் தோற்பார்.
காரணம் இந்து சமய மேன்மையை குறிப்பாக திருமுறை என்னும் திருநெறியத் தமிழ் குறித்து அதிகம் அறிந்தவர் சரவணன்:
சம்ரி வினோத்தோ இந்து சமயத்தில் இருக்கின்ற சறுக்கல், சித்தாந்தத்தில் இருக்கின்ற பலவீனம் குறித்தெல்லாம் அதிகமாக அறிந்து வைத்திருப்பவர். அவர் பச்சையாக கேட்கின்ற கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்ல முடியாது. உண்மையில் பதில் இருக்கிறது; அது ஒருவேளை ஆபாச எல்லையை எட்டக் கூடும்.
எனவே ஸம்ரி உடனான விவாதத்தை தவிர்ப்பதே சரவணனுக்கு நலம் பயக்கும்.
மலேசிய இந்திய சமுதாயத்தை நாளை வழிநடத்தக்கூடிய தானைத் தலைவராக விளங்க இருப்பவர், இத்தகைய மதக் கண்ணியில் சிக்குவது அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.
இப்பொழுதுகூட இஸ்லாத்தைக் குறித்து தாழ்வான கருத்தை முகநூலில் பதிவிட்ட முஸ்லிம் சமயம் சாராத ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆடவர் தாயகம் திரும்பி போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் சி சிவராசா உள்ளபடியே நடுநிலையான -சமதர்ம தலைவராக விளங்குகிறார்.
ஸம்ரி வினோத்தை கண்டிக்கத் தெரிந்த இந்து சங்க தலைவர்களுக்கு இத்தகைய நபர் குறித்து வாய் திறக்க மனம் இல்லை; சரவணனுக்கும்தான்.
ஓர் உண்மையை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இந்த உலகில் முதலில் தோன்றியவன் மனிதன்தான்; மனிதன்தான் பலவகை மதங்களை பல்வேறு நிலத்தில், பலவித சூழலில் சமைத்தான் என்பதை!!


