
மலேசிய இந்திய சமூகத்தின் நீண்டகால கோரிக்கையான சமூக-பொருளாதார நிலைமையை சீர்செய்ய ஒரு சிறப்புத் திட்டத்தை வகுக்கும்படி மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி மீண்டும் பிரதமர் அன்வாரிடம் வேண்டுகோள் வவைத்துள்ளார்.
இதன் தொடர்பில் ஏற்கெனவே, கடந்த 2024-ஆம் ஆண்டில் நவம்பர் 25, டிசம்பர் 17, டிசம்பர் 25 மற்றும் இந்த ஆண்டில் ஜனவரி 02, பிப்ரவரி 03, பிப்ரவரி 12, பிப்ரவரி 24 ஆகிய நாட்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அனுப்பியுள்ள கடிதங்களில் இதேக் கருத்தை வலியுறுத்தி உள்ள நிலையில், தற்பொழுது இந்த புனித நோன்பு மாதத்தில் இதன்தொடர்பில் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
நேரிய சிந்தனை, இரக்கம் மற்றும் நீதிக்கான அம்சங்கள் முன்னிலைப் படுத்தப்படும் இந்த புனித ரமலான் மாதத்தில் மிகுந்த பணிவோடும் மரியாதையுடனும் இக்கடிதத்தை எழுதுவதாக மலேசிய சரித்திர சாதனை இயக்கமான ஹிண்ட்ராப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு முஸ்லிம் இல்லையென்றாலும், இந்த புனித மாதத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமரின் உறுதிப்பாட்டை-யும் மிகவும் பாராட்டுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியில் தொடர் புறக்கணிப்பிற்கு ஆளாகி, விளிம்புநிலையை எட்டியுள்ள இந்திய சமுதாயம், தொடர்ந்து சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதை கருணையுடன் கருத்தில் கொள்ளும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
*ரஹ்மான் ஆலமீனின் உணர்வின்படி, நம் நாட்டின் முன்னேற்றத்தில் எந்த சமூகமும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று நம்புவதாகவும் மலேசிய 13-ஆவது ஐந்தாண்டுத் திட்டம்(RMK-13) தொடர்பாக தன் கருத்தையும் முன்மொழிவையும் எடுத்துரைக்க ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் இம்முறை அனுப்பியுள்ள கடிதத்தில் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி குறிப்பிட்டுள்ளார்.


