
மலேசிய இந்திய சமுதாயத்தின் ஊனோடும் உயிரோடும் ஒன்றெனக் கலந்து நிற்கின்ற வானொலிக்கு இன்று 79-ஆவது தொடக்க நாள்!
மலேசியவாழ் தமிழினத்தின் மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளுடன் கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட தளங்கள் சார்ந்து சமுதாயத்துடன் இயைந்தும் இணைந்தும் இரவு பகல் எந்நேரமும் வானுலா வருகின்ற மின்னல் வானொலிக்கு முதற்கண் வணக்கம்!!

காட்சி ஊடகம், காணொளிக் காட்சிகள், சமூக ஊடகம் என்றெல்லாம் இன்று புதுமை ஊடகங்கள் உருவாகி இருக்கலாம்; நானிலத்துவாழ் மக்களும் பயனுறலாம்; இருந்தபோதும், வானொலியின் இடத்தை நிரப்ப வானொலியால் மட்டுமே இயலும்.
இன்று, ஏப்ரல் திங்கள் முதல் நாளில் எண்பதாவது அகவையைத் தொடுகின்ற மின்னல் பண்பலை வானொலிக்கு, வாழ்க, வாழ்க; வாழிய பல்லாண்டு என குமரி நல்லாள் வாழ்த்து தெரிவிக்கிறாள்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 70-80ஆம் ஆண்டுகள்வரை மின்னல் வானொலி தமிழ் மொழிக்கும் இனத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பணிகுறித்து, சொல்லி மாளாது; குறிப்பாக, முதலாம் இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் நமக்கிருந்த ஒரேயொரு தகவல் சாதனம், அரிய வானொலிதான். கடந்த நூற்றாண்டில், ஒரு வீட்டில் வானொலிப் பெட்டி இருந்தால், அந்தக் குடும்பம் பெரும் செல்வாக்கு படைத்ததாக, சுற்றுவட்ட குடும்பங்களால் மதிக்கப்பட்டது.
குறிப்பாக, விடுதலைக்கு முந்தைய மலாயாவில், அதனிலும் குறிப்பாக விடுதலைப் போராட்ட காலத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தகவலை அள்ளித் தந்த தகவல் சாதனமான மின்னல் வானொலிக்கு, மலேசிய இந்திய சமுதாயம்-குறிப்பாக தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

‘ரங்கையான் மேரா’, வானொலி-6 என்றெல்லாம் பல பெயர்களில் வான வீதியில் இனிய உலா வந்தாலும், இன்றைய மின்னல் பண்பலை வானொலி என்னும் பெயர், அதன் நேயர்தம் நெஞ்சங்களில் நிலைதுவிட்டது; ஆழப் பதிந்துவிட்டது

அரசுசார் தகவலை மக்களுக்கு உடனுக்குடன் அறிவிப்பது, கல்வி வளர்ச்சிக்கு-குறிப்பாக தமிழ்ப் பள்ளி-இடைநிலைப் பள்ளி மாணவர்தம் கல்வி மேம்பாட்டிற்கு துணை நிற்பது, பல்துறை சார்ந்த வல்லுநர்களையும் நிபுணர்களை நேரில் அழைத்து அவர்தம் கருத்தை நேயர்களுக்கு தெரிவிப்பது, இசை மற்றும் கலைத் துறை சார்ந்து உள்நாட்டு-தமிழ் நாட்டு கலைஞர்களை அறிமுகம் செய்வது, வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகிற இலக்கிய ஆளுமையர் உள்ளிட்டவர்களை வானொலி நிலையத்திற்கு அழைத்து, அவர்தம் கருத்தை செவ்விவழி நேரில் ஒலிபரப்புவது, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு பெயர்சூட்டி இடையிடையே திரைப்பட பாடல்களை ஒலியேற்றி நேயர்தம் நெஞ்சத்தை வருடுவது, இரவு 11:00 மணிக்குப்பின் பழைய திரைப்பட பாடல்களை ஒலியேற்றி அதற்கென்றே நேயர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பது, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ப காலை-மாலை வேளைகளில் பொருத்தமான பாடல்களை ஒலிபரப்பி அவர்தம் அயர்வைப் போக்குவது, காலைப்போதில் உற்சாக வெள்ளத்தை ஏராளமாக ஏற்படுத்தும் வண்ணம் காலை 6:00 முதல் 10:00 மணிவரை படைக்கப்படும் காலைக் கதிர் நிகழ்ச்சி, ஞாயிறுதோறும் காலை பத்தேகால் மணி முதல் முக்கால் மணி நேரத்திற்கு படைக்கப்படும் ‘அமுதே-தமிழே’ இலக்கிய அங்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பட்டியலிட முடியவில்லை.

அந்த அளவிற்கு வகை-தொகையின்றி எண்ணற்ற பெயர்களை சூட்டி, வண்ணக்கோல நிகழ்ச்சிகளைப் படைத்து வரும் மின்னல் பண்பலை வானொலிக்கு மீண்டும் பாராட்டு உரித்தாகட்டும்.
குறிப்பாக, புத்தாக்கம் கண்டுள்ள அமுதே-தமிழே நிகழ்ச்சி மிகமிக சிறப்பாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இலக்கிய நிகழ்ச்சி என்றால், அது இலக்கிய நிகழ்ச்சியாகவேப் படைக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் இதன் தற்கால தயாரிப்பாளர் ‘புவீ’ எனப்படும் புவனா வீரமோகனை மலேசியத் தமிழ் இலக்கிய உலகம் பாராட்ட வேண்டும். சமயக் கலப்பின்றி, முழு இலக்கியப் பாங்குடன் அமுதே-தமிழே நிகழ்ச்சியைப் படைக்கும் புவீ-க்கு பெருமை வந்துசேரட்டும்.

மின்னல் பண்பலை வானொலியில் பணியாற்றுகின்ற அறிவிப்பாளர்களை, மலேசியத் தமிழ்ச் சமூகம் பாராட்ட வேண்டும். இரவு-பகல் பாராமல் 24 மணிநேர சேவை தொடர்பில் அர்ப்பணி உணர்வுடன் பாடாற்றுகின்ற திரேசா லசாரு, நளினி அச்சுதன், சுகன்யா சதாசிவம், அஷ்வினி, மோகன், ரவின், தா.தெய்வீகன், வீ.புவனா போன்ற அறிவிப்பாளர்கள், காலைக் கதிர் நிகழ்சிஸ்யைப் படைக்க வேண்டி இருந்தால், இவர்கள் விடியற்காலை மூன்றரை மணிக்கு துயில் கலைந்தால்தான் காலை ஆறு மணிக்கு தங்கள் பணியைத் தொடர ஏதுவாக இருக்கும்.

இவர்களில், நளினி காலைக் கதிர் படைப்பதில்லை என்று தெரிகிறது.
எது எவ்வாறாயினும், பிரிட்டிஷ் மலாயாவில் 1946-ஆம் ஆண்டில், இதே நாளில் தொடங்கப்பட்ட மலேசிய வானொலி, இன்று 80-ஆவது அகவையை எட்டி நிற்கிறது. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம் என்று குமரி நல்லாள் அழைக்கிறாள் அனைவரையும்.
மின்னல் பண்பலை வானொலியின் இன்றைய தொடக்க நாள் தொடர்பில், அறிவிப்பாளர் திரேசா லசாரு-விடம் கருத்து கேட்டபொழுது, கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மின்னல் பண்பலை வானொலியுடன் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னை அடையாளப்படுத்தியது தன் குரல்தான் என்றும் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

“ஆனாலும், இந்தப் பயணத்தில் படிக்கட்டுகள் அமைவதைப்போல தடைக்கற்களும் தட்டுப்படத்தான் செய்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டு, எல்லாச் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு சக அறிவிப்பாளர்களுடன் இணைந்து பயணிக்கிறேன்” என்றார் இன்பம் பொங்க!
அதேவேளை, நான் எட்டவேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றும் பயணத் தொலைவுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார் திரேசா லசாரு; திரேசா, தன் இலக்கை எட்டிட குமரி மனதார வாழ்த்துகிறாள்.
தொடர்புகொண்ட இன்னும் ஒருசிலரிடம் பேசும்வாய்ப்பு வாய்க்கவில்லை.
மொத்தத்தில் மின்னல் வானொலி இன்னும் மின்ன, சமுதாயத்தின் சார்பில் வாழ்த்து!

மின்னல் பண்பலை வானொலியை வழிநடத்திய இரா பாலகிருஷ்ணன், பூபாலன், பார்த்த சாரதி, இராஜசேகரன், திருமதி சுமதி, குமரன் ஆகியோரின் கடப்பாட்டையும் பங்களிப்பையும் குறிப்பிடாவிட்டால் இந்த செய்தி முழுமை பெறாது!!



எல்லாருக்கும் இனிய நல்வாழ்த்துகள்… பல தரப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறு சிரமப்பட்டு நிகழ்ச்சிகள் படைக்கிறீர்கள்.. கூடுதல் மதிப்பும் முற்போக்கு நடைபோட… அறிவியல் நிகழ்ச்சி, உள்ளூர் நகைச்சுவை நிகழ்ச்சிகள், அரசு உதவிகள் வாய்ப்புகள் அவ்வப்போது அறிவிப்புகள் என்றில்லாமல் முழு நிகழ்ச்சிகளாக மலரவேண்டும்…. முதியவர் விரும்பும் பழம் பாடல், வசனம் நகைச்சுவை இரவு 11 மணி முதல் 1மணிவரை இருந்தால்.. தூக்கம் குறைவவவாக இருக்கும் பெரியவர்கள் பயன் பெறுவர்… சன்னி ஞாயிறுகளில் பிற்பகல் 2 முதல் 3 வரை பழம் பாடல் ஒலியேற்றுக…. போது அறிவுப் போட்டிகள் நாட்டுப்பற்று அறிவுப் போட்டிகள் நடத்தலாம்… மீண்டும் வாழ்த்துகள்..