Friday, September 18, 2026

‘மே-13’ போன்ற கலவர மிரட்டல், ‘கோயில்மீது குண்டுவீச பரிந்துரை: அயூப் கானுக்கு வன்முறை வெளிப்பாடாகத் தெரியவில்லையா? -பொன். வேதமூர்த்தி வினா

மலேசிய இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக அவதூறு பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முனையும் தரப்பினருக்கு எதிராக உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய போலிஸ் படை துணைத்தலைவர் அயூப் கான் மைடின் பிச்சையை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவரும் மலேசிய வரலாற்று சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்தியர்களை அவர்களின் இடத்தில் வைக்க ‘மே-13’ போன்ற கலவரம்’, ‘கோயில்கள்மீது குண்டு வீச பரிந்துரை’ என்றெல்லாம், மலேசிய சிறுபான்மை இந்துக்களுக்கும் அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கும் எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்த முகநூல் பயனர்களின் தேசவிரோத உள்ளடக்கம்; தவிர, ஆலயங்களின் வரலாற்று உண்மை தெரியாமல் வெறுப்புப் பிரச்சாரத்தின் மூலம் இந்திய சமூகத்தை, குறிப்பாக இந்துக்களை ஒடுக்குவதற்காக வெறுப்புக்கருத்தை பரப்பிவரும் தரப்பினர்மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளாது என்று அயூப்கான் தெரிவித்திருந்த நிலையில், பொன்.வேதமூர்த்தி அவருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.


இத்தகையப் போக்கைக் கட்டுப்படுத்தாமல், அதன் போக்கிலேயே அனுமதித்தால் நம் பல்லின தேசத்தின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, தேசிய ஒற்றுமைக்கும் சரிசெய்யமுடியாத சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில், அயூப் கான் தெரிவித்துள்ள கருத்து, நீதியை நிலைநாட்டுவதில் இரட்டை அளவுகோல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்றும் அக்கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.


சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அதிகாரிகள் பெரும்பான்மைவாத மனநிலையையும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலை கண்டுகொள்ளாத போக்கையும் வெளிப்படுத்துகின்றனர்; சொந்த நலனுக்காக நீதியையும் பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதற்காக நியாயத்தையும் பலிகொடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் தேசத்தின் ஆன்மாவை சிதைக்கிறார்கள். இத்தகையப் போக்கினால், நாட்டின் தார்மீக இறையாண்மைத் தூண், மெதுவாக வளைந்து, மௌனக் குமுறலால் அரிக்கப்பட்டு, ஒரு நாள் உடைந்தேவிடும்.

இதில் கவலைக்குரியது என்னவென்றால், காவல் படை துணைத் தலவரின் கருத்து, சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்த அளவிற்கு வெளிப்படையாக வெறுப்பைக் கக்கும் தரப்பினரைக் கட்டுப்படுத்தவோ அதிகரித்துவரும் இனப் பதற்றத்தை மட்டுப்படுத்தவோ சிறிதும் உதவவில்லை என்பதுதான்.

தேசிய காவல் படை மற்றும் மலேசியத் தகவல் பல்லூடக ஆணையத்தின் செயலற்ற தன்மை அலட்சியம் அல்ல; மாறாக வலுத்தவர்பக்கம் உடந்தையாக இருப்பதாகும். அவர்களின் கோழைத்தனம், பிரிவினை விதைவிதைத்து, குழப்பத்தை அறுவடை செய்ய துணைபுரிவதாகும்.
அதேசமயம், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நடுநிலை சிந்தனையாளர்கள், காவல்துறையின் வெளிப்படையான செயலற்ற தன்மை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். தவிர, மலாய் சமூகத்தைச் சேர்ந்த அதிகமானோர், வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் மலேசிய மாண்பிற்கு மரியாதை அளிப்பது வரவேற்கத்தக்கது என்றும் பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் மடானி அரசாங்கம், தீர்க்கமாக செயல்படுகிறதா அல்லது அதிகாரத்தில் தொடர பெரும்பான்மைத் தரப்பினரின் விரல் அசைவிற்கு ஏற்ப இயங்குகிறதா என்றும் வினாத் தொடுத்துள்ள பொன்.வேதமூர்த்தி, சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள உடன் ஆவண செய்ய வேண்டும் என்றும் அயூப் கானுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை