
Loh Siew Hong-லோ சியூ ஹோங்-இன் மூன்று பிள்ளைகளான சுலோச்சனா, சுலோச்சனி, தெட்சணாமூர்த்தி ஆகிய மூவரையும் இவர்களின் தந்தை மு. நாகேசுவரன் ஒருதலைப் பட்சமாக மதம் மாற்றியது செல்லாது என்று இன்று புத்ராஜெயா கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த மூன்று பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்தபொழுது தந்தையால் திசை திருப்பப்பட்ட நிலையில் ஆட்கொணர்வு மனு மூலம் மூன்று பிள்ளைகளையும் தன்னோடு இணைத்து கொண்ட லோ சியூ ஹொங்-ற்கு எதிராக பெர்லிஸ் மாநில முஃப்தி சார்பில் எதிர் வழக்காடப்பட்டது.

ஆனாலும் சம்பந்தப்பட்ட மூன்று பிள்ளைகளும் சிறுவர்களாக இருப்பதால், அவர்கள் பிரிக்கப்பட்டு ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டது செல்லாது என்றும் தாயுடனேயே இம்மூன்று பிள்ளைகளும் இருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து பெர்லிஸ் முஃப்தி, சீராய்வு மனுச்செய்தார்.

பெர்லிஸ் முஃப்தியின் மறு சீராய்வு மனுவை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பருவமடையாத இளம் பிள்ளைகளை ஒரு தலைபட்சமாக மதம் மாற்றியது செல்லாது என்றும் தற்பொழுது பிள்ளைகள் தாயின் பராமரிப்பிலேயே இருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் கடந்த 2023-ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பே நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பெர்லிஸ் முஃப்தி சார்பில் மீண்டும் மறு சீராய்வு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Dato’ Sri Hasnah Binti Dato’
Mohammed Hashim, Dato’ Nordin Bin Hassan, Datuk Vazeer Alam Bin Mydin Meera ஆகிய மூவர் கொண்ட நீதிபதிக் குழு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று ஏப்ரல் எட்டாம் நாள் மூன்று நீதிபதிகளும் ஒருமுகமாக தாயார் லோ சியூ ஹொங்-ற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு முறை வழங்கப்பட்ட தீர்ப்பு இப்பொழுது மீண்டும் புத்ராஜெயா கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பெர்லிஸ் முஃப்தி செய்து கொண்ட மறு சீராய்வு மனுவிற்கு முகாந்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் தாயார் லோ சியூ ஹொங்-ற்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சம்ஷீர், குணமலர் ஆகியோர் அயராது வழக்காடி வந்த நிலையில் பெர்லீஸ் முஃப்தி சார்பில் ஹனிப் கத்ரி வாதாடிவந்தார்.


