
1991-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி; தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள், துக்ளக் போன்ற பருவ இதழ்கள் அடங்கிய பிராமண ஊடக வட்டத்தில் சொல்லொண்ணா மகிழ்ச்சி வெள்ளம் கரைப்பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.
13 ஆண்டுகளுக்குப் பின் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரான கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை இரண்டே ஆண்டுகளில் மூவர் கூட்டணி கலைத்தது;
சுப்பிரமணியன் சாமி, சந்திர சேகர், ஆர் வெங்கட்ராமன் ஆகிய மூவரும் செய்த ஜனநாயக படுகொலையால் இரண்டாவது முறை திமுக ஆட்சியை இழந்தது.
இந்த மூவரின் நோக்கம், தமிழ்நாட்டு அரச கட்டிலில் ஜெயலலிதாவை அமர்த்திப் பார்க்க வேண்டும் என்பது;
1991-இல் அவர்களின் எண்ணம் ஈடேறியது; ஆனால், தேர்தலுக்குமுன் எதிர்பாராமல் நடைபெற்ற ராஜீவ் காந்தி படுகொலைக்கு திமுகதான் காரணம் என்று வாழைப்பாடி இராம மூர்த்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவினரும் நேரடியாக பொய்ப் பிரச்சாரம் செய்ததன் விளைவாக திமுக இரண்டே இரண்டு தொகுதிகளில், சென்னை எழும்பூரில் பரிதி இளம்வழுதியும் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரும் கரை சேர்ந்திருந்தனர்.
கலைஞரைப் போல வஞ்சகத்தையும் துரோகத்தையும் தொடர்ந்து எதிர்கொண்ட தலைவர் இன்னொருவர் இருப்பாரா எனில் ஐயத்திற்குரியதுதான்.
இந்த சூழ்நிலையில்தான் வைகோ மதிமுக-வைத் தொடங்கினார்.

கோவை கண்ணப்பன் மதுரை பொன். ராமலிங்கம், தஞ்சை மண்டலத்தில் மாமி என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதாரண்யம் மா. மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் அணி சேர்த்துக் கொண்டு திமுகவில் செங்குத்தாக சரி பாதி பிளவு ஏற்பட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ.
தன் தலைமையிலான கட்சிதான் உண்மையான திமுக என்று அறிவித்து திமுக கொடிக்கும் கட்சியின் பெயருக்கும் சொந்தம் கொண்டாடினார்; சிக்கல் நீதிமன்றம் வரை சென்றது.
திமுகவின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்றும் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்கொண்டு வென்று ஆட்சி அமைக்கப்போவது வைகோ தலைமையிலான மதிமுக என்றெல்லாம் பேசினர்; எழுதினர்.
அப்படிப்பட்ட மதிமுகவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்சியை நடத்தாமல் திமுக-வை அழிக்க வேண்டும்; அக்கட்சி மீண்டும் பதவிக்கு வந்து விடக்கூடாது என்னும் சூழ்ச்சி அரசியலில் இறங்கியதால் மதிமுக மெல்ல மெல்ல கரைந்து இன்று ஏறக்குறைய ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டது.
மதிமுகவின் வளர்ச்சியை பற்றி கருதாமல் திமுக தளர்ச்சியுற வேண்டும் வீழ்ச்சி அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தேர்தலுக்கு தேர்தல் காய் நகர்த்தியதால், வைகோதான் தளர்ச்சி கண்டார்; மதிமுகதான் வீழ்ச்சி கண்டது.
எந்த ஸ்டாலினை எதிர்த்து திமுகவில் கலகக்குரல் எழுப்பினாரோ அதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் இன்று நான்காவது முறையாக நாடாளுமன்ற மேலவையில் இடம் பெற்றிருக்கும் வைகோ, அதே ஸ்டாலினின் தலைமையிலான திமுக ஆதரவில் தன்னுடைய மகனை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உருவாக்கி இருக்கிறார்.
இடையில் தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஜெயலலிதாவால் சிறைப்படுத்தப்பட்டிருந்த வைகோவை கலைஞர் நேரில் சென்று சிறையிலேயே சந்தித்தார்.
அந்த காலகட்டத்தில் பல் அத்தனையும் தெரியும்படி வைகோ சிரித்ததெல்லாம் வஞ்சக சிரிப்பென பின்னர்தான் தெரியவந்தது
ஜெயலலிதாவே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தாழ்வில்லை; தான் ஆட்சி அமைக்காவிட்டாலும் பரவாயில்லை; திமுக மட்டும் மீண்டும் அரியணையில் அமர்ந்து விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணம் வைகோவின் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் பட்டுவிடாமல் உயிர்த் துடிப்புடன் இருந்ததை கலைஞர் அவதானிக்கத் தவறிவிட்டார்.
1970 ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் விவகாரத்தில் அன்றைய கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸும் அவரைத் தூண்டி விட்ட இந்திரா காந்தியும் உறவாடிக் கொண்டே புரிந்த வஞ்சகத்தை அவதானிக்க கலைஞர் எப்படி தவறினாரோ அதைப்போலத்தான் வைகோவிடமும்!
கலைஞருக்கும் வைகோவுக்கு இடையில் மீண்டும் நட்பு மலர்ந்திருந்த நிலையில், 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது, தேர்தல் கூட்டணி பற்றி கலைஞருடன் பேசுவதற்காக வந்த வைகோ, பேரம் படிவதற்குள்(கூட்டணி வேண்டாம் அல்லது கூடாது என்ற மனநிலையில்), அமர்ந்திருந்த நாற்காலி தரையில் கீச்சிடும் அளவிற்கு விருட்டென எழுந்து சென்றுவிட்டார்.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவும் புறக்கணித்ததால் செய்வது அறியாது தவித்த வைகோ அந்த தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்; அந்தப் புள்ளியில் வைகோவின் அரசியல் பாதாளத்தில் விழுந்தது; சொந்தக் கட்சியினரே திட்டித் தீர்த்தனர்.

அந்த காலக்கட்டத்தில் அவருடைய முழு நோக்கம் திமுக வலிமை பெற்றுவிடக்கூடாது என்பதுதான். இவ்வாறான அரசியலில் ஐந்தாண்டு காலம் உருண்டோடிவிட, அடுத்த பொதுத் தேர்தலும் வந்தது.
மதிமுக விற்கு ஏதும் முன்னடைவு ஏற்படாவிட்டாலும் கூட தாழ்வு இல்லை; திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால அரசியலை முன்னெடுத்த வைகோ, 2016 சட்டமன்ற தேர்தலின்போது, ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்று பேசிக்கொண்டிருந்த தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவை எந்த காலத்திலும் பிடிக்காத ஜி. ராமகிருஷ்ணன் தலைமையிலான இடது கம்யூனிஸ்ட் கட்சி, வேறு வழி இல்லாமல் ஒட்டிக்கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்ந்து மக்கள் நல கூட்டணியை அமைத்தார் வைகோ.
அதன் உள்ளார்ந்த நோக்கம், அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அல்லது திமுகவுக்கு ஆதரவான வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த நேரத்தில் பழம் நழுவி பாலில் விழும் என்று முழு நம்பிக்கையுடன் தேமுதிக வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த கலைஞரின் எண்ணம் ஈடேற வில்லை; பழம் நடுவில் தரையில் விழுந்த கதையாக விஜயகாந்தின் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தது. பல்வேறு இழுபறிக்குப் பின்னர் இது நடந்தது.
அந்த நேரத்தில் செயலற்று இருந்த விஜயகாந்தை புறந்தள்ளி, அவரின் மனைவி பிரேமலதா இந்த முடிவை எடுத்தார்.
இந்த அரசியல் முன்னெடுப்புக்கு அச்சாரமிட்டது ஜெயலலிதா என்றும் அவர் கொடுத்த நிதியில் பாதியை தேமுதிகவிற்கு மக்கள் நல கூட்டணி சார்பில் கொடுக்கப்பட்டதாக அந்த நேரத்தில் தகவல் உலவியது.
நூற்று ஒன்பது தொகுதிகளை விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவிற்கு ஒதுக்கி அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்ததைக் கண்டு ஏதோ முதல்வரானதை போலவே விஜயகாந்த் இன்பத்தின் எல்லைக்கு சென்றார். அந்த வேளையில் அவரைச் சுற்றி நின்ற வைகோ. தொல்.
திருமாவளவன், ஜி ராமகிருஷ்ணன் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நான்கு பேரும் சிரித்த காட்சி தமிழக அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஆனாலும் இந்த ஐவர் கொண்ட மக்கள் நல கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாத சட்டப்பேரவை 2016 ஆம் ஆண்டில் அமைந்தது. தனித்து நின்று வெற்றி பெற்று விஜயகாந்த், நான்கு கட்சிகளுடன் சேர்ந்து களம் கண்டும் தோல்வியைத் தழுவினார். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் கரை சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தொல் திருமாவளவனும் நீண்ட இழிபறிக்கு பின்னர், அதிமுகவிடம் மண்டியிட்டார்.
அது முதல் ஆட்சியில் பங்கு என்ற பேச்சை மறந்து விட்ட திருமாவளவன் இப்பொழுது மீண்டும், ஆதவ் அர்ஜுனா போன்றவரை ஏவிவிட்டு ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மதிமுகவைப் போல தேர்தல் கூட்டணியில் கரைந்து போன இன்னொரு கட்சி, பாமக.

கொள்கை; இனம் மொழி சார்ந்த அரசியல்; ஒருங்கிணைப்பு; நட்பு; வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படாமல் தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி கூட்டணி அமைத்து தான் சேருகின்ற கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்ற மாயையை ஏற்படுத்திக் கொண்ட ராமதாஸின் அடாவடி அரசியலுக்கு ஈராயிரத்து ஒன்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவு கட்டியது.
2004 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பாமகவும் இணைந்து இருந்ததால், நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், பாமக தலைவர் மருத்துவர் ராமதாசின் மகன் அன்புமணியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி, அவர் சுகாதார அமைச்சராகவும் பொறுப்பேற்க கலைஞர் இசைவும் ஆதரவும் தெரிவித்தார்.
அடுத்து 2009 நாடாளுமன்ற பொதுத் தேர்தலும் வந்தது. ஈழப் போர் உச்சத்தில் இருந்த நேரம்.
அந்த நேரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அறிவித்தார். தற்போதைய கூட்டணியில் இருந்து விலக வேண்டாம்; சேர்ந்து பயணிப்போம் என்று கலைஞர் எவ்வளவோ சொல்லியும் ராமதாஸ் விடாப்பிடியாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியுடன் சேர்வது என்று முடிவெடுத்தார்
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே இதில் தலையிடும் சூழலும் எழுந்தது.
அப்படியும் மசியாத ராமதாஸ் வலுக்கட்டாயமாக மகன் அன்புமணியை அமைச்சர் பதவிலிருந்து விலக வைத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார்.
இந்த முறை காங்கிரஸ் தோற்றுவிடும்; புதுடில்லியில் மாற்று அரசு அமையும் என்று ராமதாஸ் தப்புக் கணக்கு போட்டதுதான் அதற்குக் காரணம்.
அதிமுக கூட்டணியில் ஏழு தொகுதிகளைப் பெற்றார். தேர்தல் முடிவு வந்த பொழுது ஏழு தொகுதிகளிலும் ராமதாஸ் தலைமையிலான பாமக மண்ணை கௌவியது.
நம்பிக்கைகுரிய அரசியல் கூட்டாளி அல்ல ராமதாசும் அவர் தலைமையிலான பாமகவும் என்ற முடிவு தேசிய அளவில் பிரதிபலித்தது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல்களிலும் ராமதாஸ் இவ்வாறுதான் செய்து கொண்டு வந்தார். அரசியல் ரீதியாகவும் கூட்டணி அடிப்படையிலும் நல்ல உறவு இருந்தாலும் கூட முறித்துக் கொண்டு அடுத்த தேர்தலின் பொழுது வேறு கூட்டணிக்கு தாவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மருத்துவர் ராமதாசு.
அது முதல் இதுவரை ராமதாஸ் தலையெடுக்கவே முடியவில்லை.
21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாமக இன்று, கட்டெறும்பாகத் தேய்ந்த கழுதையினும் கீழான நிலையில் பாமக இருக்கிறது என்றால், அதற்கு ராமதாசின் தேர்தல் கால வல்லடிப் போக்கும் முரட்டுத்தனமான கூட்டணி கணக்கும்தான் காரணம்.
ஏறக்குறைய இவ்விரு கட்சிகளை போன்ற நிலைக்கு ஆளான இன்னொரு கட்சி தேமுதிக.
2005 செப்டம்பர் 14ஆம் நாளில் இந்தக் கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த், அது முதல் அரசியல் தலைவரானார்.
அடுத்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து ப் போட்டியிட்டு ஏறக்குறைய ஆறு விழுக்காட்டு வாக்குகளை அள்ளினார் விஜயகாந்த்.

ஒரு சில தொகுதிகளில் 20 விழுக்காட்டு வாக்குவரை தனித்து வாங்கிய விஜயகாந்த், அந்தத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றார்.
தேமுதிகவை நடிகர் கட்சி என்று விமர்சித்து வந்த பாமக வலிமையாக உள்ள வட தமிழகத்தின் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு தனித்து வென்ற விஜயகாந்த் தமிழக அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ஈராயிரத்து ஒன்பது நாடாளுமன்ற தேர்தலிலும் வழக்கம் போல ஆண்டவனுடனும் மக்களுடனும்தான் கூட்டணி என்று பறைசாற்றி முரசு சின்னத்தில் போட்டியிட்ட புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் விஜயகாந்த் ஏறக்குறைய 10% வாக்குகளை பெற்று தமிழக அரசியல் வட்டத்தில் புருவத்தை உயர்த்தும்படியான வியப்பை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை தங்களுடைய கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் நல்லதென்று எண்ணிய தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்; அதனால்தான் 2011 சட்டமன்ற பொது தேர்தலின்போது, ஆட்சி அதிகாரத்துடன் வலிமையாக உள்ள திமுகவை வீழ்த்தும் நோக்கத்தில் 45 தொகுதிகளை விஜயகாந்தின் தேமுதிகவிற்கு கொடுத்து தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
அதுவரை விஜயகாந்த் முழங்கி வந்த மக்களுடனும் ஆண்டவனுடனும்தான் கூட்டணி என்ற கொள்கை காற்றில் பறந்தது.
விஜயகாந்தின் வீழ்ச்சியும் தொடங்கியது.
கொள்கை- கோட்பாடு; மக்கள் நலம்; மாநில முன்னேற்றம் என்பதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எந்தக் கூட்டணியில் அதிக தொகுதி ஒதுக்கப்படுகிறதோ; செலவுக்கு அதிக நிதி கொடுக்கிறார்களோ அந்தப் பக்கம் சேர்வது என்று இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே, விரைவில் ஒரு முடிவுக்கு வராமல் கூட்டணிகளை கடைசிவரை பரிதவிக்கவிட்டு, ஓர் ஆட்டு வியாபாரியினும் கீழாக பேரம்பேசி பேரம்பேசியே, தேமுதிகவின் மரியாதையை சீரழித்தார் விஜயகாந்த்.
இந்த வேலையில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்! அந்த நேரத்தில் விஜயகாந்திற்கு உடல்நலம் குன்றியது ஒரு பாதகமான விளைவாக அமைந்துவிட்டது அந்த கட்சிக்கு.
அரசியல் பாரம்பரியமோ தொலைநோக்கு சிந்தனையோ அரசியல் பண்பாடோ நாகரிகமோ என ஓர் அரசியல் கட்சிக்கான தகைமே எதுவுமே இல்லாத பிரேமலதா விஜயகாந்த் ஒதுக்கிவிட்டு எல்லா இடத்திலும் துருத்திக் கொண்டு முன்வந்து நின்றார்.
கட்சியினரோ விஜயகாந்தை நினைத்து எல்லாவற்றையும் சகித்துக் கொண்டனர்.
2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது கலைஞரும் மு க ஸ்டாலினும் வலிந்து வலிந்து அழைத்தும் அதிக நிதி கிடைத்தது என்பதற்காகவும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர் என்பதிலும் மயங்கி மக்கள் நல கூட்டணியில் சேர்ந்தார். அதில் விஜயகாந்தும் சேர்ந்து தமிழக அரசியல் களத்தில் பலியானார்.
ஒருவேளை, அந்தத் தேர்தலில் திமுக பக்கம் வந்திருந்தால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராகி இருக்க முடியாது;
கலைஞர் மு கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக இருப்பார்.
இவற்றுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்த பாதிப்பாக பிரேமலதா எதிர்க்கட்சி தலைவராகி இருப்பார்; சசிகலா அத்தியாயம் ஏற்பட்டிருக்காது; ஏறக்குறைய அதிமுகவின் அத்தியாயம் அந்த தேர்தலில் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
இன்றைய சூழலில் தேமுதிக ஒரு குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சியாக அல்லது வலுவான ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கும்.
எது எப்படியோ; அதுவும் நடைபெறாமல் போனது ஒரு வகையில் நல்லதுதான்; 2016 இல் பிரேமலதா ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவராகி இருந்தால், தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா- சசிகலாவைவிட இன்னும் கேவலமாக இருந்திருக்கும்
இப்படியாக தமிழ்நாட்டின் அரசியலில் சிறந்து விளங்கும் வாய்ப்பு இருந்தும் வைகோவின் மதிமுக, ராமதாசின் பாமக, விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் கால அடாவடியாலும் சூழ்ச்சி அரசியலாலும் இன்று சூம்பிய நிலையில் சோம்பித் திரிகின்றன.


