Monday, May 25, 2026

வஞ்சகத்திற்கு இனியும் இடமில்லை: மலேசிய இந்தியர்கள் தங்கள் அதிகாரத்தைமீண்டும் நிலைநாட்ட வேண்டிய நேரம் இது!!

கடந்த ஒரு மாதமாக, மலேசிய இந்தியர்கள் ஒரு கடுமையான உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்: பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி அல்லது பெரிகாத்தான் நேஷனல் என எந்த பிரதான கூட்டணியும் இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை உண்மையாக பேசவோ அல்லது தீர்க்கவோ தயாராக இல்லை. அதனால், நாம் இப்பொழுதாவது விழித்துக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு தசாப்தங்களாக வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உண்மையிலேயே நம்முடன் நின்றவர்கள் யார் என்பதை நம் சமுதாயம் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது.

2007 நவம்பர் 25-ஆம் நாள் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணியின்போது, நாம் தோளோடு தோள்சேர்த்து ஒன்றாக நின்றோம். நம் கோயில்கள் சட்ட விரோதமானவை அல்ல; நம் குரல்கள் கேட்க முடியாத தொலைவிலும் இல்லை என்பதையும் அப்போது நிறுவிக் காண்பித்தோம்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2008 தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று காணொளி மூலம் நான் அழைப்பு விடுத்திருந்தேன். மக்கள் கூட்டணி முறையாக அமைக்கப்படாத அந்த நேரத்தில், வாட்ஸ்அப் இல்லை, பேஸ்புக் இல்லை. அப்போது, இந்தியர்களுக்கு தான் விடுத்த கோரிக்கை, குறுந்தகடு-குறுஞ்செய்தி மூலமாக மட்டுமே பரவியது; 2004 பொதுத் தேர்தலில் ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் வெற்றிபெற்ற பிகேஆர், 2008இல் 31 தொகுதிகளில் வென்றது. ஜசெக, பாஸ் கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்த தேசமே நம் குரலுக்கு செவிசாய்த்தது. ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ‘மக்கள் சக்தி’ மலேசிய அரசியல் தளத்தை அதிர வைத்தது. இந்த மக்கள் சக்தி, பின்னர் இதேப் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கிய நஜீப்பின் சூழ்ச்சியால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது;

பின்னர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக, பாஸ் கட்சிகளின் தலைவர்கள் ஹிண்ட்ராப் எழுச்சியின் தாக்கத்தை ஒப்புக்கொண்டனர். நான் அவர்களுடன் நேரடியாகப் பேசியபொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்தம் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் நிலையும் உயர்த்தப்படும் என்று உறுதிமொழி அளித்தனர்.

ஆனால் நாம் ஏமாற்றப்பட்டோம்; வாக்குறுதி அளித்த பிரதமர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது; வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன.

ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக மிகவும் பின்தங்கி இருந்த இன்றைய பிரதமர், இந்திய சமூகத்தால் மிகவும் உயர்ந்த நிலையை எட்டினார்; இப்போது மலாய் வாக்கு வங்கியை மகிழ்விக்க நம்மைத் திசைத்திருப்பி விடுகிறார். நாம் வழக்கம்போல ஓரங்கட்டப்படுகிறோம்; புறக்கணிக்கப்படுகிறோம்.

பிரதமரால் நியமிக்கப்பட்ட பிகேஆர், ஜசெக இந்தியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள். பல இனக் கட்சி சாயமும் தாக்கமும் கொண்ட அவர்களால், இந்தியரின் உரிமைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்க முடியவில்லை; அல்லது விரும்பவில்லை.

13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில்(ஆர்.எம்.கே-13), இந்திய சமூகத்திற்கு ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் வெ.25 பில்லியன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முறையாக சமர்ப்பித்துள்ளேன். நாடு விடுதலை பெற்று இந்த 68 ஆண்டுகால சுதந்திர மலேசியாவில், மலேசிய இந்தியர்கள் இன்னும் தேசிய வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை புத்ராஜெயா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

நாங்கள் இரவல் கேட்கவில்லை; அதற்கான அவசியமும் இல்லை; ஒரு காலத்தில் இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய நாங்கள், எங்களுக்கான சமத்துவத்தையும் உரிமையையும் கேட்கிறோம்.

மலேசிய இந்தியர்கள் அரசியல் தெளிவையும் ஊக்கத்தையும் பெறவேண்டிய தருணம் இது; தங்களுக்காக, தொடர்ந்து குரல் கொடுப்பதுடன் சுயநலம் இல்லாமல் செயல்படும் தலைமையை அடையாளம் கண்டு, அத்தகையை தலைமையின்கீழ் அணிதிரள வேண்டும்.

மலேசிய முன்னேற்ற கட்சி-MAP, மலேசிய சரித்திர சாதனை இயக்கமான HINDRAF மேற்கொண்ட போராட்டத்தின்மூலம் உருவான ஓர் அரசியல் இயக்கம்; கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமூகத்திற்காக மட்டுமே குரல் எழுப்பி வருகிறது.

நாம் அமைதியாக இருந்தால், எவர் கண்ணுக்கு புலப்படாமல் இருப்போம்.

மீண்டும் எழுவோம். உக்கிரமாகவும் பெருமையாகவும் அசைக்க முடியாதபடியும் ஒன்றுபடுவோம் –

இது அரசியலுக்காக மட்டுமல்ல; நம் எதிர்கால சந்ததியினரின் உயிர்வாழ்விற்காக; கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காக!!

பொன்.வேதமூர்த்தி
தேசியத் தலைவர்-மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)
நிறுவனத் தலைவர் – ஹிண்ட்ராஃப் இயக்கம்
கோலாலம்பூர், ஏப்ரல் 26, 2025.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை