
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக இந்தியத் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
நேற்று, சனிக்கிழமை இரவு பின்னேரம் 11:00 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே நேற்று மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது.
எல்லையில் நடக்கும் இந்த அத்துமீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு இதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்” என்று இந்தியாவின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
”நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் எந்த அத்துமீறலையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும்,” எங்கள் நாடுமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
இந்த சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது என்றும் இதன் தொடர்பில் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதக்கவும் ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார். குறிப்பாக, நெருக்கமான, மிகவும் நம்பிக்கைக்குரிய, நல்ல நண்பன் சீனாவுக்கு நன்றிதெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரின் நன்மைக்காக இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பகிர்வு உள்ளிட்ட பிற பிரச்னைகள் தீர்க்கப்படும்’ என்ற நம்பிக்கையையும் ஷெபாஸ் ஷெரீஃப் வெளிப்படுத்தி உள்ளார்.

சண்டை நிறுத்த அறிவிப்பிற்குப் பின்னரும் இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர்ப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்பதாக, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் கூறியுள்ளார்.
.
இராணுவ நடவடிக்கை நிறுத்த ஒப்பந்தம்
தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன” என்றும் மற்ற பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால் ட்டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்ட மூத்த இந்திய – பாகிஸ்தான் தலைவர்களுடன் தானும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸும் ஏறக்குறைய 48 மணிநேரம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த அறிவிப்பிற்குப்பின், இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ”சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், ”பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், பாகிஸ்தான், தவறான பிரசாரத்தை மேற்கொள்ள பல முயற்சிகளை எடுத்ததாகக் கூறினார். இழப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் வியோமிகா சிங் கூறினார்.

அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ”முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐ இந்தியாவின் ‘எஸ் 400’ வான் பாதுகாப்பு அமைப்பு சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம்தான்” என்றார்.
மேலும், ”சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.” என்று அவர் மேலும் சொன்னார்.
”பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என்று கூறிய அவர், இதுகுறித்த தான் தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறினார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியாவில் பொது மக்களைக் குறிவைத்து தாக்குவதாக இந்திய அரசு வெளியிட்ட குற்றச்சாட்டை பாகிஸ்தான் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் மறுத்துள்ளார்; பாகிஸ்தான் ராணுவ தளங்களை மட்டுமே இலக்கு வைத்தது என்றும் அவர் கூறினார்.
சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


