
தெருவில் சுற்றித் திரியும் நாய்களை, குறிப்பாக மலாய் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் வேட்டையாட நெகிரி செம்பிலான மாநில சட்டமன்றமும் மந்திரி பெசார் அமிருடின் ஹரூனும் எடுத்துள்ள முடிவு, மிகவும் கண்டனத்திற்கு உரியது. இந்த முடிவு கொடூரமானது; பாரபட்சமானது மட்டுமல்ல; உலகளாவிய மனிதாபிமான கொள்கையை அப்பட்டமாக மீறுவதுமாகும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி சாடியுள்ளார்.
விலங்குகளைக் கொல்வதை நியாயப்படுத்த மத மற்றும் இன அமைப்பைப் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்; இதற்கு, நவீன, நாகரிக மற்றும் பன்முக கலாச்சார சமூகத்தில் இடமில்லை. எத்தகைய சிக்கலாக இருந்தாலும் பொதுநெறி மற்றும் சீரான வழிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இப்படி இனமும் மதமும் சார்ந்து முடிவெடுப்பது ஆபத்தான மனநிலையைக் காட்டுகிறது.
பொறி வைத்து பிடிப்பது-கருத்தடை மூலம் விலங்கு கட்டுப்பாடு போன்ற மனிதாபிமான நடைமுறை இருக்கும்போது, அவற்றை விடுத்து வேட்டையாடிக் கொள்வது பொருத்தமில்லாத நடவடிக்கை ஆகும் என்று மலேசிய சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன். வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

இதன் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் ஒருமனதாக எடுத்துள்ள முடிவு கீழ்த்தரமானது; மாநில நிருவாகத் தலைமையின் கூட்டுத் தோல்வியை இது பிரதிபலிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தின் பாதுகாப்பை மட்டுமல்ல, சமூக நன்னெறியை நிலைநிறுத்த வேண்டிய கடப்பாட்டையும் கொண்டவர்கள். ஆனால், இப்பட்டிப்பட்ட கொலை முன்னெடுபை ஆதரிப்பதன் மூலம், இவர்கள் இரண்டிலும் தோல்வியடைந்து. உள்ளனர்.
எனவே, நெகிரி செம்பிலான மாநில அரசு, இத்தகைய மனிதநேயமற்ற நடவடிக்கையை உடனே மீட்டுக் கொள்வதுடன் அரசுசாரா அமைப்புகள் மற்றும் விலங்குநல நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு சமுதாயத்தையும் சமுதாயத்தை அண்டிவாழும் விலங்குகளையும் பாதுகாப்பதற்கான தீர்வை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


