Monday, May 25, 2026

அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை நீட்டிப்பது இளைய சமூகத்தினரைப் பாதிக்கும்: -டத்தோ முருகையா

டத்தோ முருகையா

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது – இளைய பட்டதாரிகளின் எதிர்காலத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் தாக்கம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் த. முருகையா தெரிவித்துள்ளார்

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மேலும் நீட்டிக்கும் யோசனை கவலை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நாட்டிற்காக பணியாற்றியவர்களின் அனுபவத்தையும் பங்களிப்புகளையும் நாம் மதிக்கிறோம். இருப்பினும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படும் விளைவுகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஓய்வூதிய வயதை நீட்டிப்பதன் விளைவாக, பல்வேறு பதவிகளில் காலியிடங்கள் குறைவாகி, பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு அரசுத்துறையில் வாய்ப்பு கிட்டாமல், போகும் நிலை ஏற்படலாம்.

ளைஞர்கள் இன்று தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்தவர்கள், புதுமையான எண்ணங்களைக் கொண்டு உள்ளவர்கள், மேலும் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் புதுமையான சக்தியாக இருக்க முடியும்.

பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது, ஓய்வூதிய வயதை நீட்டிப்பது சம்பளச் செலவுகளையும் ஓய்வூதியச் செலவுகளையும் அதிகரிக்கிறது. இது நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். தவிர, தேவைப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.

அதே நேரத்தில், நீண்ட காலமாக சேவையில் இருந்து நாட்டுக்கு பங்களித்து வந்தவர்கள் ஓய்விற்குப் பிறகு அமைதியாக வாழும் உரிமையை பெற வேண்டும். அவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு , தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நேரங்களை அனுபவிப்பதும் மிக அவசியமானவை.

எனவே, இத்தகைய முடிவுகளை எடுக்கும் போது, அனுபவம் வாய்ந்தோர்மீது நன்றியைச் செலுத்துவதோடு, இளைஞர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் விதமாக அரசாங்கம் பரிந்துரை செய்வது அவசியம்.

இது, நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் அமையும் என்று முன்னாள் துணை அமைச்சருமான முருகையா மேலும் தெரிவித்துள்ளார்

தகவல்:
எல் சிவசுப்பிரமணியன்
தலைவர், தேசிய ஊடகப்பிரிவு மஇகா

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை