Tuesday, August 4, 2026

இரு அமைச்சர்கள் பதவி விலகல்! ஒரு தமிழ் அமைச்சருக்கு வாய்ப்பு கிட்டுமா?

மு.சரவணன்

பொருளாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி பதவி விலகிய அடுத்த சில மணி நேரத்திற்குள் இன்னோர் அமைச்சரான நிக் நஸ்மி நிக் அகமதுவும் தான்வகித்த இயற்கை வளம்-சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத் துறையை உதறி இருக்கிறார்.

மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறினால், அமைச்சர் பதவியைத் துறப்பேனென்று ஏற்கெனவே அறிவித்த முடிவை, இன்று ரஃபிசி ரம்லி நிறைவேற்றி இருக்கிறார்.

இவரைப் போல இவரின் ஆதரவாளருமான நிக் நஸ்மியும் தற்பொழுது பதவி விலகி இருக்கிறார். ஒரே நேரத்தில் இருவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருப்பதால், நாட்டின் நிருவாகத் தலைநகரம் புத்ராஜெயா சற்று தகதகக்கிறது.

யார் பதவி விலகினாலும் அமைச்சரவை மாற்றம் இருக்காதென்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் ரஃபிசிக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருந்தார். இப்பொழுது இரு அமைச்சர்கள் ஒருசேர பதவி விலகி இருப்பதால், ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அன்வார் ஆளாகி இருக்கிறார்.

நிக் நஸ்மி நிக் அகமது

இன்னும் நான்கு மாதங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதேக் காலக்கட்டத்தில் நாட்டின் 13-ஆவது பெருந்திட்டமும் அறிவிக்கப்பட இருக்கிறது.

அன்வார் நிதி அமைச்சராகவும் இருப்பதால், 2018-இல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய துறையான இந்தப் பொருளாதாரத் துறையைப்பற்றி கவலைப்படாமல், அமைச்சரவையைத் தொடர அன்வார் விரும்புகிறாரா என்பதும் தெரியவில்லை.

ரஃபிசி ரம்லி

2018 பதினான்காவது பொதுத் தேர்தலின்போது, மாறி இருந்த அரசியல் களத்தில், தனக்கு அதிக ஆதரவு வழங்கிய சீன சமுதாயத்திற்கு நன்றி பாராட்டும் வகையில் ஜசெக தலைவராக இருந்த லிம் குவான் எங்-கிற்கு நிதி அமைச்சகத்தை வழங்கினார் துன் மகாதீர்.

இந்த முக்கியமான துறை, சீனருக்கு ஒதுக்கப்பட்டதில் அதிருப்தியுடன் இருந்த மலாய் சமூகத்தை சாந்தப்படுத்தும் வகையில், புதிதாக பொருளாதாரத் துறையை உருவாக்கி, அதை டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு வழங்கினார் மகாதீர்.

அதேவேளை, பிகேஆர் கட்சிக்குள், அன்வாருக்கு எதிராக அஸ்மின் அலியை கொம்புசீவி விடவும் இந்தப்பதவியை வகையாகப் பயன்படுத்தினர் மகாதீர். அதற்கேற்ப, அஸ்மின் அலியும் அன்வாருக்கு எதிராக கூரிய கொம்புடன் அதிகமாக சீறினார்.

அதனால், இந்தத் துறையை அன்வார் விரும்பாமல் இருக்கக்கூடும்; அதற்கேற்ப அந்தத் துறையின் அமைச்சர் ரஃபிசி பதவி துறந்திருப்பதால், அந்தத் துறை காற்றோடு கரையட்டும் என்று அன்வார் பாராமுகமாக கடந்து போகக்கூடும்.

அதேவேளை, இன்னொரு முக்கியத் துறையான இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைத் துறையை அன்வார் யாரிடம் ஒப்படைப்பார் என்பதுதான் கேள்விக்குறி.

இருக்கின்ற அமைச்சர்களில் யாராவது ஒருவரிடம் ஒப்படைப்பாரா அல்லது புதிதாக எவரையாவது அடையாளம் காண்பாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்..

மலேசிய அமைச்சரவையில், தமிழருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிற நிலையில், மலேசியத் தமிழ்ச் சமுதாயமும் மஇகா-வும் பொறுமிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பொறுமலுக்கு மருந்தாக ஒருவேளை டத்தோஸ்ரீ மு.சரவணனுக்கு அந்த வாய்ப்பை அன்வார் வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல்வெளியில் உலாவருகிறது.

பிகேஆர் கட்சித் தேர்தலில், செத்தியா வங்சா தொகுதி நாடாளுமன்றத் உறுப்பினருமான நிக் நஸ்மி, அந்தத் தொகுதித் தலைவர் பொறுப்பைத் தற்காக்க முடியாமல் போனதைப்போல, உதவித் தலைவர்கள் தேர்தலிலும் கடந்தத் தவணை தான் வகித்த அந்தப் பொறுப்பை இந்தத் தவணை பறிகொடுத்ததால், இரண்டாவது தவணை எம்பி-யான அவர், இன்று மதியம் அமைச்சர் பொறுப்பைத் துறந்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை