மலேசிய இளையோர் சமுதாய நல்லிணக்கத் தூதர்களாக எந்தத் தரப்பினரை அடையாளப் படுத்த- லாம் அல்லது அறிவிக்கலாம் என்று எவராவது அல்லது எந்த அமைப்பா- வது ஆலோசித்தால், மோட்டார் சைக்கிள் ஓட்டும் மலாய் இளைஞர்- கள், அதற்கு மிகவும் தகுதியானவர்கள்.

மழையோ, வெய்யிலோ; நள்ளிரவோ கடும் பகலோ; நகர்ப்பகுதியோ, அல்லது தோட்டப்புறமோ என எந்த வேளையிலும் எந்த இடத்திற்கும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்ல நேர்ந்தால், துணிந்து பயணம் செய்யலாம்.
எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் பழுதாகி, பயணம் தடைப்பட்டு பாதி வழியில் நிற்க நேர்ந்தால், சீனராக இருந்தாலும் இந்திய சமூகத்தினராக இருந்தாலும் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை.
பழுதுபட்ட மோட்டார் சைக்கிளை கொஞ்ச தூரம் தள்ளிச் செல்வதற்குள் அல்லது சாலை ஓரத்தில் சற்று நேரம் நின்றால்கூட போதும்; அடுத்த பத்து நிமிடத்தில் யாராவது ஒரு மலாய் இளைஞர் நம் அருகில் வந்து என்ன? ஏதென்று விசாரிப்பார்.
பிரச்சினையை அறிந்து, அதைச் சரிசெய்யப் பார்ப்பார்; முடியாவிட்டால், நாம் போய் சேரவேண்டிய இடம்வரை தன்னுடைய மோட்டார் சைக்கிள் துணையுடன் தள்ளிக்கொண்டு வருவார்;

அல்லது, அருகில் உள்ள மோட்டார் பழுதுபார்க்கும் பணிமனைக்கு அழைத்துச் செல்வார்.
ஒருவேளை, அகால நேரமாக இருந்தால், சுற்று வட்டாரத்தில் தனக்குத் தெரிந்த மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரரை அல்லது மோட்டார் பழுது பார்க்கும் தொழில்நுட்பரை அழைத்துப் பேசுவார்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு அவர்களை அழைப்பார்; அல்லது அவர்களின் இருப்-பிடத்திற்கு பழுதுபட்ட மோட்டார் சைக்கி-ளில் நம்மை அமரவைத்து, மோட்டார் சைக்கிளுடன் நம்மையும் சேர்த்து அவரின் மோட்டார் சைக்கிள் துணை கொண்டு பக்குவமாக தள்ளிக் கொண்டேச் செல்வார்.
குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அல்லது குறிப்பிட்ட Foreman-ஐ சந்தித்து ஆலோசித்து ஆவண செய்தபின், எல்லாவற்றையும் உறுதிசெய்த பின்னர்தான் அந்த இடத்தைவிட்டுச் செல்வார்; அதற்குமுன் நம்மிடமும் விடைபெறுவார்.
தூக்கத்தில் இருப்பவர்களைக்கூட எழுப்பிவிட்டு, சிக்கலை எடுத்துக்கூறி, உதவும் மனப்பாங்கைக் கொண்ட மலாய் இளைஞர்களை நாடு முழுவதும் காண முடியும்.
நாம் மனம் கசிந்து, ஏதும் சன்மானம் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள்; அடியோடு மறுப்பார்கள். கரிசனம், நட்பு, அரவணைக்கும் தன்மை, உதவும் பாங்கு, சமூக நல்லிணக்க மேன்மை ஆகிய பண்பு நலன் யாவும் ஒருசேர மலாய்த் தம்பிமாரிடம் வெளிப்படுவதைக் கண்கூடாகக் காணலாம்; இதயப்பூர்வமாக உணரலாம்.
தவிர, சாலையில் விபத்திற்கு ஆளாகி விழநேர்ந்து, நாம் சுதாரித்து எழுவதற்-குள் நம் கையைப் பிடித்து தூக்கிவிட அடுத்த ஒருசில நிமிடங்களில் ஒரு மலாய் ஆடவர் நம் அருகில் வந்து நிற்பார். சரிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிளை தானே தூக்கி நிற்க வைப்பார்.
ஒருகால், மோட்டார் சைக்கிள் கூடையில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறிக் கிடந்தால், அவற்றை யெல்லாம் சேகரித்து நம்முடைய மோட்டார் சைக்கிளின் கூடையில் வைப்பார்.
உடலில் காயம்பட்டாலும் பொருட்கள் சேதப்பட்டாலும் தன்னாலான உதவி-யைச் செய்து ஆசுவாசப்படுத்தி உதவுவார்; தேவைப்பட்டால் காவல் துறைக்கோ அல்லது மருத்துவ-மனைக்கோ தொடர்புகொண்டு தகவலைச் சொல்லுவார்.

ஆண்கள் மட்டும் இப்படி இல்லை; மலாய் இளம் பெண்களும்கூட இதேவகையில் உதவும் பாங்குடன் நடந்துகொள்கின்ற-னர். இளைஞர்களாக இருந்தால் என்னென்ன செய்வார்களோ, அதேப்-போன்று மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் மலாய்ப் பெண்களும், வழியில் ஏதும் பிரச்சினையுடன் நிற்கும் மோட்டார் சைக்கிளோட்டி எவராக இருந்தாலும் உடனே தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உதவுவார்.
அதனால்., மலாய் இளைஞர்களை முழுதாக நம்பி, நாட்டின் எந்த மூலைக்கும் எந்த வேளையிலும் நாம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யலாம்.
பாதி வழியில் ஏதும் சிக்கல் என்றால், காவல் துறையினரைவிட, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவினரைவிட, மருத்துவ அவசர ஊர்தியைவிட அவசர உதவிக்கு நாம் கேட்காமலேயே தாமாக முன்வந்து தோள்கொடுப்பவர்கள், மலாய் இளைஞர்கள்.


